Apr 11

ஈஸ்ட் யோர்க்கில் கத்தியால் குத்திக் கொலை

ஈஸ்ட் யோர்க் பகுதியில் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் O’Connor Drive மற்றும் Donlands Avenue பகுதியில் அமைந்துள்ள “செவின் லெவன்” வியாபார நிலையத்தினுள் வைத்து நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.


கத்திக் குத்துக்கு இலக்கான ஆண், உடனடியாகவே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்து விட்டதை ரொரன்ரோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கத்திக் குத்துக்கு இலக்கானவர் அந்த கடையின் வாடிக்கையாளரா அல்லது பணியாளரா என்ற விபரங்களோ, அவரது பெயர் வயது உள்ளிட்ட விபரங்களோ அதிகாரிகளால் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் மனித கொலை குறித்த சிறப்பு விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே அந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பான சந்தேக நபர் ஒருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.