Mar 11

தீர்மான வரைபை பலவீனப்படுத்த இராஜதந்திர மட்டத்தில் இலங்கை முயற்சி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள இலங்கை குறித்த தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும் நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும்படி இணை அனுசரணை நாடுகளிடம் இலங்கை கோரியிருந்தது.

எனினும், கடுமையான நிபந்தனைகளுடன் தொடர்ச்சித் தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் திட்டமிட்டுள்ளன. தீர்மான வரைபின் தொனி மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் சில நாடுகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.  

இந்த நிலையிலேயே, தொடர்ச்சித் தீர்மான வரைவின் தொனி மற்றும் மொழிநடையை மேலும் நீர்த்துப் போகச் செய்வது தொடர்பாக இந்தியாவுடனும், ஏனைய ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ள நட்பு நாடுகளுடனும் இலங்கை இராஜதந்திரிகள் பேச்சுக்களை நடத்திவருகின்றார்கள்.

மார்ச் 22ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தொடர்பான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பிக்கவுள்ளார். மறுதினம் இலங்கை குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டு விவாதக்கப்படும். தேவையேற்பட்டால் அது வாக்கெடுப்புக்கு விடப்படும்.