Apr 10

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலைக் கண்டித்து ரொறன்ரோவில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலமும் கண்டனக் கூட்டமும்

பௌத்த சிங்கள இனவாதிகளினால் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து ரொறன்ரோ மக்கோவன் எல்ஸ்மெயர் (McCowan and Ellesmere) வீதிகளின் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டமும்  அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் அங்கிருந்து ஸ்காபரோ நடுவம் (Scarborough Civic Centre) வரை ஆர்ப்பாட்ட ஊர்வலமாகச் சென்று நடாத்திய பொதுக்கூட்டமும் மிகவும் சிறப்பாகவும் உணர்வுபூர்வமான கண்டன நிகழ்வாகவும் கடந்த மார்ச் 18ம் திகதியன்று சிறப்பாக நடைபெற்றன. பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டு நிகழ்த்திய கண்டன நிகழ்வில் 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தமது  எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.

நிகழ்வின் ஓர் அம்சமாகத் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இவ்வன்முறைகளைக் கண்டிக்கும் அறிக்கை வெளியிடப்பட்டது. 

மீரா பாரதியின் (அரசியல் செயற்பாட்டாளர்) அறிமுக உரையுடன் ஆரம்பித்த இந்தக் கண்டனக் கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர்),  ஜோன் ஆர்க் (அனைத்துலக மன்னிப்பு சபை),  கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்),  ஆகிய கனடிய அரசியல் மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபையுடன் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தமது கண்டனத்தைத் தெரிவித்ததுடன், இத்தகைய நிலைமைகள் இலங்கையில் இனியும் ஏற்படாவண்ணம் செயற்படுவதற்கான அழுத்தத்தைத் தாம் சார்ந்துள்ள அமைப்புகளின் ஊடாக இலங்கை அரசுக்கு வழங்குவதற்கான முயற்சிகளை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.

இவர்களைத் தொடர்ந்து  ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), செரீன் ஏய்கன் (சட்டப் பேராசிரியர், கியூன்ஸ் பல்கலைக்கழகம்) ஆகியோரும் உரையாற்றினர். இந்நிகழ்வினை ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக முனைவர் சுல்பிகா ஸ்மாயில் அவர்கள் தொகுத்து வழங்கினார். 

இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம், நீதிக்கான பொறிமுறை, நிரந்தர தீர்வுக்கான முன்னெடுப்பு என்பவற்றுக்காக அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்ற விருப்பை பங்குபற்றிய பலரும் வெளிப்படுத்தினர்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலமாகவே இலங்கையின் பல்லின மக்களிடையேயான புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் வலுப்படுத்தவும், சிங்கள பேரினவாதத்தை முறியடிக்கும் போராட்டத்தில் வெற்றிபெறுவதற்கான உலகளாவிய ஆதரவைத் திரட்டவும் முடியும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். குறுகிய கால அறிவிப்பு என்பதாலும், அமைப்பாளர்கள் யார் என்ற தெளிவீனம் காரணமாகவும் இன்னமும் அதிகமாக கலந்து கொண்டிருக்கக் கூடிய பல முஸ்லிம் செயற்பாட்டாளர்களும் மக்களும் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்த ரொறன்ரோ முஸ்லிம் நண்பர்கள், இந்த நிகழ்வு நம்பிக்கையூட்டுவதாகத் தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களில் நடக்கும் இத்தகைய  நிகழ்ச்சிகளில் தாம் தவறாது கலந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது இது தொடர்பாக உரையாடவும் எதிர்வினை புரியவும் வேண்டும் என்ற நோக்குடன் ரொறன்ரோவிலிருந்து செயற்படும் தமிழர் வகைதுறைவள நிலையத்தினர் (தேடகம்) விடுத்த அவசர அழைப்பினைத் தொடர்ந்து கலந்துகொண்ட சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் உரையாடியதன் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் கண்டனக் கூட்டமும் ஏற்பாடாகி இருந்தன.    உயிர்ப்பு பெண்கள் அமைப்பு, பகுபதம், மற்றது, காலம் பத்திரிகை, உரையாடல் பத்திரிகை உட்பட்ட  இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாட்டாளர்களான தனி நபர்களும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். 

இதைச் சிறப்புற நடாத்துவதற்காக நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு ஒன்று தெரிவுசெய்யப்பட்டு, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் கண்டனக் கூட்டம் என்பன ஒழுங்கமைக்கப்பட்டன. இந்தநிகழ்வில், அகவி, கவின் கலாலயா, பிரக்ஞை வட்டம், பதிவுகள்.காம்,   இலங்கையில் சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு என்பனவும் தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் நிகழ்வுகளில் கலந்து கொள்வதாகவும் அறிவித்தன.

பல அமைப்புக்களும்,  தனி நபர்களும் மும்மொழிகளிலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் கைச்சாத்திட்டன.  இவ்வாறு கையெழுத்திட்ட அமைப்புக்களில் ’இலங்கையில் சமாதானத்திற்கான கனடியர்கள்’ அமைப்பு தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் இந்த நிகழ்வில் மிகவும் ஆர்வமுடன் கலந்துகொண்டதுடன் நிகழ்வுச் செயற்பாட்டின் பல்வேறு பணிகளில் இணைந்தும் செயற்பட்டனர்.

இலங்கையில் சமாதானத்திற்கான கனடியர்கள் அமைப்பு  ஆரம்பத்தில் தமது சம்மதத்தினை அறிவித்திருந்தபோதும் நிகழ்விற்கு முதல்நாள் இந்த நிகழ்விற்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்றும், தமது பெயர் அறிக்கையில் கைச்சாத்திட்டோர் பட்டியலில் இடப்பட்டிருப்பது செல்லுபடியாகாது என்றும் அறிவித்ததுடன் அதற்கான காரணங்களை பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தது; ஆயினும் இவ்வறிக்கை எழுதப்படும் ஏப்பிரல் 1ம் நாளான இன்றுவரை அவ்வமைப்பு தனது காரணங்கள் எவற்றையும் தெரிவிக்கவில்லை.