May 21

இத்தாலிய கடலோர காவற்படையினரால் 2000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மீட்பு

மத்தியதரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 2000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் இத்தாலிய கடலோரக் காவற்படையினரால் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த மீட்பு நடவடிக்கை தொடர்பான காணொளி நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நிலையில், குடியேற்றவாசி ஒருவர் நீரில் மிதப்பதும் மற்றுமொருவர் அதிர்ச்சியடைந்த நிலையில் மீட்கப்படுவதும் பதிவாகியுள்ளது.

இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பில் இத்தாலிய கடலோர காவற்படையினர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த இரு தினங்களில் மத்தியதரைக்கடலில் இருந்து சுமார் 2,121 குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அத்துடன் உயிரிழந்த குடியேற்றவாசி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் காப்பாற்றப்பட்ட குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை, கடந்த வருடத்தையும் விட 35 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.