Apr 04

கியூபெக் தாக்குதல் – மக்களை காப்பாற்றியவருக்கு 4 இலட்சம் டொலர்கள் நிதியுதவி

கியூபெக் நகர பள்ளிவாசலில் கடந்த வருடம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பள்ளிவாசலினுள் இருந்த மக்களை காப்பாற்றி, கடும் தாக்குதலுக்குள்ளான அய்மென் டெர்பாலி என்பவருக்கு சுமார் 4 இலட்சம் கனடிய டொலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கியூபெக் மற்றும் உலகம் பூராகவும் உள்ள மக்களிடம் இணையம் மூலமாக பணம் திரட்டி அவரின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி கனடா கியூபெக் நகரில் உள்ள இஸ்லாமிய கலாசார மத்திய நிலையத்திற்குள் நுழைந்த ஒருவர், அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

இதன்போது துப்பாக்கிதாரியிடம் இருந்து அங்கு குழுமியிருந்த மக்களை காப்பாற்றுவதற்காக அய்மென் டெர்பாலி, கடும் முயற்சி செய்தார். இதன்போது அவர் கடும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.

இதனையடுத்து கோமா நிலையில் சில மாதங்கள் இருந்த அவர், தற்போது உடல்நலம் பெற்றுள்ளார். ஆனால் அவரால் நடக்க முடியாமல் போனது. இந்நிலையிலேயே அவருக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது துரதிஷ்டவசமாக ஆறு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.