Apr 03

டக் ஃபோர்ட் முதல்வரானால் பெருமளவானோர் வேலை இழப்பர் – கத்லின் வின்

பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் முதல்வரானால், ஒன்ராறியோவில பெருமளவானோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும் என ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மாநிலத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் தேர்தலில் லிபரல் கட்சிக்கா, பழமைவாதக் கட்சிக்கா வாக்களிப்பது என்பதனை மக்கள் சரியாக சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். மிகவும் பணக்காரரும் வர்த்தகருமான டக் ஃபோர்ட்டிடம் ஒன்ராறியோவின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டால், இதுவரை காலமும் ஒன்ராறியோவில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் பெருமளவானவை இல்லாது செய்யப்பட்டு விடும்.

முற்போக்கு பழமைவாதக் கட்சி வெற்றிபெற்று, டக் ஃபோர்ட் முதல்வராகிவிட்டால், ஒன்ராறியோவின் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் பின்னடைவைச் சந்திக்கும் என்பதுடன், பெருமளவானோர் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.

நலன்பேணும் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்பதா அல்லது அனைத்தையும் இல்லாது செய்யும் நிலைப்பாட்டினை உருவாக்குவதா என்ற இரண்டு தெரிவுகளே ஒன்ராறியோ மக்களுக்கு உள்ளது என கூறினார்.