Apr 03

புங்குடு தீவில் எண்பது விழுக்காடு மாணவர்கள் காலையில் பட்டினியுடன் பாடசாலைக்குச் செல்கிறார்கள்! நக்கீரன்

தமிழர்கள் பொதுவாகச் சிக்கனக்காரர்கள். உண்ணாமல் கொள்ளாமல், வாயைக் கட்டி வயிற்கைக் கட்டி,  வருமானம் குறைவாக இருந்தாலும் அதில் ஒரு பகுதியை சீட்டைக் கீட்டைப் பிடித்துச் சேமித்துப் போடுவார்கள். குருவி அரிசி சேமிக்கிற மாதிரி   சேமித்த  பணத்தில் பிள்ளைகளுக்கு நகை, நட்டு வாங்கிப் போட்டு விடுவார்கள்.

ஆனால் இப்படி வாயைக் கட்டி, வயிற்கைக் கட்டிச் சேர்த்த பணத்தை,  திருமணம், பூப்புநீராட்டு விழா, கோயில் திருவிழா என்று வரும்போது பணத்தைப்  பணம் என்று பாராது தண்ணீராகச் செலவழிப்பார்கள். பெரும்பாலும் தங்களது குடும்ப கவுரவத்தைக் காப்பாற்ற இந்த வீண் செலவை செய்வார்கள்.

ஊரில் மட்டுமல்ல இங்கே கனடாவிலும் கோயில் கட்டுவதிலும் குடமுழுக்கு, தேர், தீர்த்தம், திருவிழாக்கள்  செய்வதிலும் கோடிக்கணக்கான பணத்தை வீணாகச் செலவழிக்கிறார்கள். ஒரு புதுக் கார் வாங்குகிறவர் கூட அந்தக் காரை உற்பத்தி செய்த நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை நம்பாமல் கோயிலுக்குச் சென்று காருக்கு குருக்களைக் கொண்டு பூசை செய்கிறார். வேத காலத்தில் கார் இல்லை. மாடு அல்லது குதிரை வண்டில்தான். அதனால் காருக்கு மந்திரம் இருக்க வழியில்லை. அதனால் என்ன? குருக்கள் சமற்கிருதத்தில் சொல்லும் மந்திரம் எம்மவர்களுக்கு விளங்காது. அந்தச் துணிச்சலில் குருக்கள் எதையோ மந்திரம் என்று சொல்லுவார். அதனை நம்மர்கள் நம்பிவிடுவார்கள். இதனால் காலப் போக்கில் இந்துக் கடவுளர்க்கு செந்தமிழ் தெரியாது, செத்த  சமற்கிருதம் மட்டும் தெரியும் என்பது வழக்கமாகிவிட்டது. இந்தக் கணம் வரை இதுதான் நியதி.

கனடாவில் இப்போது நூறு கோயில்களுக்கு மேல் இருக்கின்றன. பல கோயில்கள் முன்னாளில் குதங்களாக இருந்த கட்டிடங்கள். சில கோயில்கள் பத்து மில்லியன் செலவில் கட்டப்பட்ட கோயில்கள். கோயில் எழுப்பினால் மட்டும் போதாது,  அதற்கு அன்றாடம் ஏகப்பட்ட செலவு இருக்கிறது. நைவேத்தியம், பால், தயிர், இளநீர், தேன், சந்தணம், பூ, மாலை, வடை வாழைப்பழம் வாங்க வேண்டும். இதில் வடை வாழைப்பழங்களை மனிதர்கள் சாப்பிடுவார்கள். அதனால் அவை வீண்போவதில்லை. ஆனால் மற்றப் பொருட்கள் அப்படியில்லை. பால், தயிர் போன்றவை 'வேஸ்ட். இப்போதல்ல ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோயிலின் மாதச் செலவு முப்பதினாயிரம் டொலர்களாக இருந்ததைப் பார்த்தேன்.

கோயில் நிறுவனர்கள் பள்ளிக்கூடம், மருத்துவனை, மூத்தோர் இல்லம் கட்ட மாட்டார்கள். அவற்றால்  போகிற இடத்துக்குப் புண்ணியமில்லை. பக்தி வியாபாரம் போல் வருவாய் இல்லை.

இதில் இன்று பணபலத்தால் உலகைக் கட்டியாளும் யூதர்கள் வித்தியாசமானவர்கள். கஞ்சத்தனத்துக்குப் பெயர்போன  யூதர்கள் கோயிலுக்குச் செலவழிக்க மாட்டார்கள். அவர்களது வழிபாடு ஓர் உருவம்,  ஒரு நாமம் ஒன்றும் இல்லாத கடவுளுக்கு பிரார்த்தனை செய்வதுதான்.  இஸ்லாமியர்களும் அப்படித்தான். இவர்களது மதக் கடவுளர்க்கு தாய், தந்தை, மாமன், மாமி,  மனைவி, பிள்ளை குட்டிகள் கிடையாது.  மிச்சம் பிடிக்கிற பணத்தை வைத்துக் கொண்டு யூதர்கள் பெரிய பெரிய மருத்துவமனைகள், கல்லூரிகள் கட்டிவிடுவார்கள்.

நம்மவர்களுக்கு பள்ளிக்கூடம் கட்டத் தெரியாது. மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற சமூக சிந்தனை அறவே கிடையாது.

இதோ காலைக்கதிர் நாளேட்டில் வெளிவந்த ஒரு செய்தித் துணுக்கைப் படியுங்கள். இதனை நான் தீவுப் பகுதி மக்களின் கவனத்துக்கு முன்வைக்கிறேன்.

ஒரு பேராசிரியர் ஓரிரு தினங்களுக்கு முன்னர் மகளிர் நாள் விழாவுக்கு மனைவி சகிதம் புங்குடுதீவுக்குச் சென்றாராம். மனைவியை நிகழ்வில் விட்டு விட்டு, மெல்லப் பக்கத்தில் இருந்த பாடசாலைக்குச் சென்றிருக்கின்றார்.

தமது சொந்தப் பகுதியைச் சேர்ந்த பேராசிரியர் என்பதால் பாடசாலையில் வகுப்புகள் வரை சென்று தமது பிரதேச மாணவரோடு உரையாட அவருக்குத் தடை ஏதும் இருக்கவில்லை. 

மாறாக, வரவேற்பு இருந்ததாம். நான்கு முதல் ஏழாம்  தரம் வரை உள்ள வகுப்புக்குப் போனார். ஒரு வகுப்பில் முப்பது பிள் ளைகள் வரை இருந்தனர். அவர்களுடன் உரையாடினேன்.

"காலையில் உணவருந்தி விட்டு வந்தவர்கள் கையை உயர்த்துங்கள்' என்றேன். ஐந்தே ஐந்து மாணவர்தான் கையை உயர்த்தினர். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. எண்பது விழுக்காடு மாணவர்கள் காலையில் பட்டினியுடன் பாடசாலைக்கு வரும் அளவுக்குத் தீவுப் பகுதியில் பட்டினியும் வறுமை யும் தாண்டவமாடுகின்றன.

ஆனால் நாங்கள் அங்கு ஆலயங்களுக்கு கும்பாபிசேகம், மண்டபம் கட்டுதல், அரங்கம் அமைத்தல் எனப் பல கோடி ரூபாக்களைக் கொட்டிச் செலவு செய்கிறோம்.

மூன்று கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும் கோயிலுக்கு இங்கேயே பல மில்லியன் ரூபாவில் அலங்கார வளைவு கட்டுகின்றோம்''  என்று மென்மையாகத் தொடங்கிய அவரது பேச்சுப் பின்னர் படு ஆவேசமாயிற்று. "தீவுப் பகுதி அபிவிருத்தி குறித்து அதிகம் பேசுகிறோம். தீவுப் பகுதியில் உள்ள நிலச் சொந்தக்காரர்கள் எல்லோரும் தீவுக்கு வெளியே குடாநாட்டிலும், கொழும்பிலும், வெளிநாட்டிலும் உள்ளனர். தீவுப் பகுதியில் இப்போது இருந்தவர்கள் அங்குள்ள காணிகளின் உரிமையாளர்கள் அல்லர். முன்னர் அந்தக் காணி களில் பரம்பரை, பரம்பரையாக தொழில் செய்த தொழிலாளர்கள். காணிகளையும் கையளிக்காமல் அதன் சொந்தக் காரர்கள் "நிலச்சுவாந்தர்' உரிமையுடன் வெளிநாடுகளிலும் வெளியிடங்களிலும் வசிக்க, காணி உரிமையில்லாத ஏழைத் தொழிலாளரை மட்டும் வைத்துக் கொண்டு தீவுப் பகுதியின் அபிவிருத்தி பற்றிப் பேசுவதும் நீலிக் கண்ணீர் வடிப்பதும் அர்த்தமற்றது'' என்றார.

அவர் கூறுவதில் ஏதோ ஆழ்ந்த அர்த்தம் இருப்பதாக என் மனதில் படுகின்றது. தீவக சந்ததிக்கு இது சமர்ப்பணம்...!


'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், 

ஆலயம் பதினாயிரம் நாட்டல், 

பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், 

அன்னயாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' - பாரதி


கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா

கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே

ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே! - சிவவாக்கியார்


படமாடும் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்

நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடும் கோயில் பகவர்க்கு அது ஆமே! -  திருமூலர் திருமந்திரம் (1857)

பாரதி சொல்லி என்ன, சிவவாக்கியார் செப்பியென்ன, திருமூலர் திருவாய் மலர்ந்தென்ன எமது மக்கள் திருந்த மாட்டார்கள்!

இதற்கு புங்குடுதீவு பள்ளி மாணவர்களே கண்கண்ட சாட்சியாக இருக்கிறார்கள்!