Apr 01

ஐக்கிய நாடுகள் சபையிடம் நாம் எதிர்பார்ப்பதும், அவர்களால் நடைமுறைபடுத்தக் கூடியவையும்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐ.நா.மனித உரிமை சபையின் 37வது கூட்ட தொடர் ஜெனிவாவில் நடந்து முடிந்துள்ளது. இது பற்றி சுருக்கமான கண்ணோட்டமானால் இது பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு கிடைத்த ஓர் வெற்றி என்றே கருத முடியும். பேச்சு சுதந்திரத்தின் அடிப்படையில் விரும்பியோர் விரும்பியதை கூற முடியும். ஆனால் ஐ.நா. விதி முறைகள் அணுகு முறைகள் சரித்திரத்தை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்தால் இதற்கு மேலாக 37வது கூட்ட தொடரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் எதையும் பெற்றுவிட முடியாது.

ஐ.நா. ஆணையாளரின் அறிக்கை> ஐ.நா.வின் விசேட பிரதிநிதி திரு. பவுலோ கீறீவ் ஆகியோரின் அறிக்கை மற்றுமல்லாது> சில முக்கிய அங்கத்துவ நாடுகளின் அறிக்கைகள் சிறிலங்கா அரசை ஆட்டம் காண வைத்துள்ளது என்பதே உண்மை.

மனித உரிமை சபையில் பிரசன்னமாகியிருந்த சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சார் திரு. மாறப்பனை> சிறிலங்கா மீது தீர்மானத்தை கொண்டு வந்த நாடுகளி;ன் பிரதிநிதிகள்> சார்க்கஸில் நடிக்கும் ஓர் கோமாளியாகவே பார்த்தனர். காரணம் இவர்களினால் மனித உரிமை சபையில் பங்குகொள்வோருக்கு கொடுத்த ஆவணம் மிகப்படுத்தப்பட்டதாகவும்> உண்மைகளிற்கு அப்பாற்பட்டதாகவே காணப்பட்டது.

ஐ.நா.மனித உரிமை சபையின் தீர்மானத்தில் கூறப்பட்ட எந்த உருப்படியான விடயங்களையும் தாமது நாட்டில் செய்யவில்லையென்பதை> எந்த வெளிநாட்டு அமைச்சர் மனித உரிமை சபையில் ஒத்துகொள்வார்? ஆகையால் திரு மாறப்பனின் திருகுதாளம் மனித உரிமை சபைக்கு புதுமையானது ஒன்றல்லா.

நடந்து முடிந்த 37வது கூட்டதொடரில் தமிழர் தரபு என கூறும் பொழுது – வடக்கு கிழக்கிலிருந்து வருகை தந்த பாதிக்கப்பட்டவர்கள முஸ்லீம்கள் உட்பட அரசியல்வாதிகள்;, பத்திரிகையாளரும் அடங்குவர். அரச தரபு என கூறுவதனால்வெளிநாட்டு அமைச்சர் உள்ளுராட்சி அமைச்சர் உட்பட பல முக்கிய பிரதிநிதிகள் அரசு சார்பாக வருகை தந்திருந்தனர். புலம்பெயர் சங்கங்களின் சார்பில் - பிரான்ஸ், சுவிஸ்லாந்து பிரித்தானியா ஜெர்மனி கனடா அமெரிக்காஆவுஸ்திரேலியா இந்தியா உட்பட வேறுபல நாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்தார்கள். புலம்பெயர் ஊடகங்களின் பிரதிநிதிகளும் முகநூல் விற்பனர்களும் வழமை போல் வருகை தந்திருந்தார்கள். பௌத்த சிங்கள தரபு என கூறுவதனால் முன்னாள் பாதுகாப்பு படையில் கடமையாற்றியவர்களும் புலம் பெயர் தேசங்களில் வாழும் முன்னாள் பாதுகாப்பு படையினரும் சிங்கள ஊடகவியலாளாரென கூறப்படுபவரும் மனித உரிமை சபையில் பிரசன்னமாகியிருந்தனர்.

சிங்கள பௌத்தவாதிகள்

இலங்கைதீவின் விடயத்தில், மனித உரிமை சபையில் இப்படியாக நூற்று கணக்கணோர் பங்கு கொள்வதன் மூலம், சிறிலங்காவில் முன்பிருந்த பயங்கரவாதம் தவிர்ந்த வேறு எந்த பிரச்சனையோ சர்ச்கைகளோ இல்லையென்ற சிங்கள பௌத்தவாதிகளின் விவாதம் அடிபட்டு போகிறது.

அடுத்து, சிறிலங்காவின் ஜனதிபதியின் ஒத்தாசையின்றியே, சிறிலங்கா தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுகொண்டது என்ற பௌத்த சிங்களவாதிகளின் விவாதத்தை மனித உரிமை சபை ஏற்று கொள்ளவில்லை. காரணம், சிறிலங்காவின் ஜனதிபதிக்கும் தீர்மானத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லையானால், இன்று ஒரு வருடத்திற்கு மேலாகியும் எதற்காக சிறிலங்காவின் ஜனதிபதியினால் அது பற்றி உத்தியோகபூர்வமாக மனித உரிமை சபைக்கு அறிவிக்க முடியவில்லை போன்ற கருத்துக்கள் சபைக்கு வெளியில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்து, தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை ஒழுங்காக வாசித்து ஆராயாது, தமிழீழ விடுதலை புலிகளின் குற்றச் செயல்களை மனித உரிமை சபை அலட்சியம் செய்துள்ளது என்ற சிங்கள பௌத்தவாதிகளின் கருத்து, சபையில் பலரை வியக்க வைத்தது. 

ஒத்துமொத்தமாக, ஜெனிவாவிற்கு வருகை தந்துள்ள சிங்கள பௌத்தவாதிகளின் கருத்தை ஆராயும் வேளையில், இவர்கள் தாம் செய்துள்ள தவறுகளை நியாயப்படுத்துவதற்காகவும், வடக்கு கிழக்கு ஒத்துமொத்தமாக சிங்கள பௌத்த மயமாக மாற்றப்படும் வரை, நேரம் கடத்தும் வேலை திட்டமாகவே காணப்பட்டது. 

முஸ்லீம்கள்

இலங்கைதீவில் இனக்கலவரத்தின் ஆரம்பம் என்பது, 1915ம் ஆண்டு முஸ்லீம்களிற்கு எதிரானது என்பது சரித்திரம். ஆனால் தமிழர்கள் நீண்டகால சாத்வீக போராட்டங்கள் பலனற்ற காரணத்தினால், ஓர் முழு அளவிலனா ஆயுதபோராட்டம் 1983ம் ஆண்டு ஆரம்பமாகும் வரை, தமிழ் மக்களிற்கு எதிராக பல இன கலவரங்கள் இடம்பெற்றது. இவ்வேளையில் முஸ்லீம்களில் சிலர், பாதுகாப்பு படையினாருடன் இணைந்து, தமிழ் மக்களின் ஆயத போராட்டத்தை அழிப்பதற்கு துணை போயிருந்தார்கள் என்பதும் சரித்திரம்.

ஆனால் 2009ம் மே மாதத்தின் பின்னர், அதாவது தமிழிழ மக்களின் ஆயத போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர், இலங்கைதீவில் வாழும் முஸ்லீம் மக்கள் இலங்கைதீவில் பல பாகங்களிலும், சிங்கள பௌத்த தீவிரவாதிகளினால் தாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் முஸ்லீம் மக்களிற்கு எதிராக நடைபெற்ற இனகலவரம், இன்று ஐ.நா.மனித உரிமை சபை வரை கொண்டுவரப்பட்டு, சர்வதேசத்தின் கண்களை திறக்க வைத்துள்ளது.

இவ் அடிப்படையில் 37வது கூட்ட தொடர் வேளையில், இரு பக்க கூட்டங்கள், இலங்கைதீவில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதை மூல பொருளாக கொண்டு நடாத்தப்பட்டது. இக் கூட்டங்களில் பல சர்வதேச முக்கியஸ்தர்கள் உரையாற்றினார்;கள். இதில் ஒரு கூட்டத்திற்கு வருகை தந்திருந்தி சில பௌத்த சிங்களவாதிகள், தாம் எங்கு என்னத்தை பேசுகிறோமென மறந்து தமது தீவிர போக்கை காண்பித்த வேளையில், இவர்களிற்கு மனித உரிமை மனிதபிமானம் என்றால் என்ன, அவற்றை எப்படியாக அரசுகள் மதிக்க வேண்டுமென்ற விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதே போன்று திருமதி ஜஸ்மீன் சூக்கா போன்ற சர்வதேச புள்ளிகள் உரையாற்றிய ஓர் கூட்டத்தில், பௌத்த சிங்களவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட விவாதத்தை, புலம்பெயர் வாழ் தமிழர் தரபின் கடுமையான விவாதத்தை தாங்க முடியாத பௌத்த சிங்களவாதிகள், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால் துர்அதிஸ்டவசமாக வேறு ஓர் பக்க கூட்டத்தில், சிங்கள பௌத்தவாதிகளிற்கும் புலம்பெயர் தமிழர்கள் சிலருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் கைகலப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதில் இரு தமிழர் கீரோக்களானார்கள்.

தமிழர் தரபு

வழமைக்கு மாறாக இம்முறை, வடக்கு கிழக்கில் காணமல் போனோரின் பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவினர் மனித உரிமை சபைக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் இவர்களும் புலம்பெயர் வாழ் தமிழர்கள் போன்று மூன்று நான்கு வேறுபட்ட பிரிவுகளாகவே; வருகை தந்திருந்தனர்.

இதில் ஒரு பிரிவு, வாவுனியவில் திரு சிங்கத்தின் ஒருங்கிணைப்புடன் வருகை தந்திருந்தனர். இவர்கள் மனித உரிமை சபையில் சகலரையும் சந்தித்து விடயங்களை நல்ல முறையில் எடுத்து கூறியிருந்தனர். 

இதே போல், இரணைதீவிலிருந்து 28 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரதிநிதியாக ஒருவர் வருகை தந்திருந்தார். இவர் இரணைதீவு பற்றிய சரித்திரம், இடப்பெயர்வு, தற்போதைய நிலை போன்றவற்றை அறிக்கையாகவும், புத்தகமாகவும் மனித உரிமை சபையில் கலந்து கொண்ட சகலருக்கும் வழங்கியிருந்தார்.

இன்னுமொரு குழுவில் இருவரோ மூவர் மனித உரிமை சபைக்கு வருகை தந்திருந்தார்கள். உண்மையை கூறுவதனால் இவர்களது செயற்பாடு என்ன என்பதை பலரால் அறிந்திருக்க முடியவில்லை. காரணம், இவர்களை அழைத்தவர்கள், இவர்களை மற்றவர்களுடன் கதைக்க பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இவ்வளவு தூரம் சிரமங்களிற்கு மத்தியில் பிரயாணம் செய்து வந்தவர்களிற்கு ஓர் பின்னடைவாகவே காணப்பட்டது.

இதேவேளை தனது மகனை தேடும் ஒரு தகப்பனார், பல சிரமங்களிற்கு மத்தியில் ஜெனிவா வந்திருந்தார். இவர் எண்ணி வந்தளவிற்கு அங்கு தனது விண்ணப்பங்களை கையாளிப்பதற்கான உதவிகளோ ஒத்தாசைகளோ அவருக்கு போதியளவு கிடைக்கவில்லை என்பது மிக கவலைக்குரிய விடயம். நாமாக வலிந்து இவருக்கு உதவிசெய்ய முயற்சித்திருந்தால் அவர் அந்த குழுவினால் ஒதுக்கபடுவார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

பாதுகாப்பு சபை

இதேவேளை, தமிழர் தரப்பில் சிலர், மனித உரிமை சபை, சிறிலங்கா விடயத்தை பாதுகாப்பு சபைக்கு மாற்ற வேண்டும் என்ற முழக்கத்துடன் காணப்பட்டனர். கோரிக்கை நன்றாக தான் இருக்கிறது, ஆனால் ஐ.நா.மனித உரிமை சபையை பொறுத்த வரையில், தற்போதைய நிலையில் இது நடைமுறைக்கு சாத்வீகமானதா? என்பதை இவர்கள் ஆராய வேண்டும்.

சிறிலங்காவில் தற்பொழுது உள்ள நல்லாட்சி என அழைக்கப்படும் பொய்யாச்சி, முன்னைய அரசு போல் அல்லாது, ஐ.நா.மனித உரிமை சபை, மனித உரிமை ஆணையாளருடன் நன்றாக ஒத்துழைக்கிறது. ஓத்துழைக்கிறார்கள் என்பதன் அர்த்தம், எல்லாவற்றையும் செய்கிறார்கள் என்பது அல்லா. உணர்ச்சிவச தமிழர்களிற்கு தெரியாத ராஜதந்திரத்தை, அவர்கள் மிகவும் திறமையாக செய்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை சபையை எமது உணர்ச்சிவச அரசியல்வாதிகள் உட்பட சில புலம்பெயர் வாழ் தமிழர் தவறாக புரிந்த கொண்டுள்ளார்கள். இதற்கான முக்கிய காரணம், கொழும்பின் பிரித்து ஆளும் படலம், புலம் பெயர் வாழ் தமிழரிடையே மிகவும் வலுவாக ஊடுருவியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையிடம் எதை எதிர்பார்கலாம், கேட்கலாம் என்பவற்றை நாம் ஐ.நா. விதிமுறைகள் நடைமுறைகள் சரித்திரங்கள் ஆராய்வதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். ஐ.நா.வில் நடைமுறைக்கு சத்வீகமற்ற விடயங்களை நாம் முன் வைத்துவிட்டு, ஐ.நா.வை குறை கூறுவதில் எந்த பயனுமில்லை. 

ஐ.நா. பொறுத்தவரையில், எந்த நாடாக, இனமாக இருந்தலென்ன, சில படி முறைகள் மூலமே நிலைமைகளை கையாழுகிறது. இதற்கு பல ஊதாரணங்கள் உண்டு. ஐ.நா.வின் உதவியுடன் புதிய நாடுகளான – ஏரித்திரியா, கிழக்கு தீமூர், தென் சூடன் ஆகியவற்றின் படிமுறைகள் விதிமுறைகளை நாம் படிக்க வேண்டும். நாம் தமிழர்கள் என்ற காரணத்திற்காக ஐ.நா.சபை ஓர் புதிய வழி முறைகளை கையாள வேண்டுமென எதிர் பார்பது மடைமைதனம்.

ஆரூடம்

இவ் அடிப்படையில், மார்ச் 2019ம் ஆண்டு நடக்க கூடிய விடயங்களை எனது அனுபவத்தில் இங்கு ஆரூடம் கூற விரும்புகிறேன். இவை எனது தனிப்பட்ட விருப்பம் அல்லா. ஆனால் ஐ.நா.மனித உரிமை சபையை பொறுத்த வரையில்  இவை சாத்வீகமாக கணிக்கபடுபவை.

ஆரூடம் ஒன்று - இன்னும் ஒரு வருடகாலம், அதாவது மார்ச் 2020ம் ஆண்டு வரை சிறிலங்காவிற்கு, நேர அட்டவணையுடன் கால அவகாசம் கொடுக்கபடலாம். இது ஓர் நல்ல செய்தி அல்லா. சிறிலங்கா மிகவும் இலகுவாக இதை ஏற்று கொள்வதற்கு காரணங்கள் பல உள்ளது.

ஆரூடம் இரண்டு – சிலவேளைகளில், சிறிலங்காவிற்கான ஓர் ஐ.நா. நிபுணர் நியமிக்கப்படலாம். இதை ஆங்கிலத்தில் Country Rapporteur என்பார்கள்  (நாட்டிற்கான நிபுணர்). இப்படியாக ஒருவர் நியமிக்கப்பட்டால், இது சிறிலங்காவிற்கு மிகவும் பராதுரமான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு பல நாடுகள் ஊதாரணமாகவுள்ளன. 

இவை தவிர்ந்து ஒன்றும் நடைபெறவில்லையானால், சிறிலங்கா ஐ.நா.மனித உரிமை சபையிலிருந்து மட்டுமல்லா, ஐ.நா.வின் பிடியிலிருந்து முற்று முழுதாக தப்பித்து கொள்ளும்.

இங்கு தான் உணர்ச்சிவச அரசியல்வாதிகளும், அவர்களால் மூளை கழுவப்பட்ட புலம் பெயர் தேசத்து உணர்வாழர்களும் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

உணர்ச்சிவச அரசியல்வாதிகளும், அவர்களால் மூளை கழுவப்பட்ட புலம் பெயர் தேசத்து உணர்வாழர்களும் ஐ.நா.மனித உரிமை சபையில் எந்த நாட்டு ராஜதந்திரியுடனும் எந்த பரப்புரைகளை மேற்கொண்டது கிடையாது. அவர்கள் - பக்க கூட்டங்கள், ஒன்றரை நிமிட உரையில் மட்டுமே நம்பிக்கை கொண்டவர்கள்.

ஆகையால் இவர்கள் தமது மனுக்களை ஐ.நா.மனித உரிமை சபைக்கு ஏற்ற முறையில் முன் வைக்க தவறும் பட்சத்தில், சிறிலங்கா மனித உரிமை சபையிலிருந்து தப்பித்து கொள்ளும்.

அடுத்து மனித உரிமை ஆணையாளரினால் கூறப்பட்ட வேறு வழிகள் என்பது, Universal jurisdiction எனும், ஒரு நாட்டினது உள்நாட்டு சட்டத்தை பாவித்து, வேறு நாட்டில் மனித உரிமை மனிதபிமான சட்டங்களை மீறியவர் மீது வழக்குகளை தொட்டு நீதி காண்பது.

இவ் விடயம் புலம்பெயர் வாழ் தமிழர் கையில் முற்று முழுதாகவுள்ளது.

இன்று ஐ.நா.மனித உரிமை சபையில் தங்களை நியாயப்படுத்தும் பாதுகாப்பு படையினரை, இவ் விதி மூலம் சுவிஸ்லாந்திலும் மற்றைய நாடுகளிலும் சிக்க வைக்க முடியும்.

இதேவேளை மனதில். கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் - மனித உரிமை சபைக்கும், ஒரு நாட்டின் அகதி அந்தஸ்து கோருவதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதை, அகதிகளிடம் பணம் சம்பாதிக்கும் பெயர் வழிகள் புரிந்து கொள்ள வேண்டும்.   

சிலர், தாம் ஏதோ அகதிகளிற்காக மனித உரிமை சபையில் செய்கிறோமென நடித்து, ஒரு பக்கத்தில் அப்பாவி அகதிகளிடம் பணம் பறிப்பதுடன், மறை முகமாக சிறிலங்கா அரசின் வேலை திட்டங்களிற்கு துணை போகிறார்கள். அகதிகளிற்காக என கூறி செய்யப்படும் வேலை திட்டம், ஐ.நா. மனித உரிமை சபையில், அங்கத்துவ நாடுகள் தமிழ் மக்கள் மீது பகைமை கொள்ள வைக்கும் என்பதே உண்மை. (முற்றும்)

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்