Mar 29

அடுத்த பத்தாண்டுகளில் கனடா நாட்டவர்கள் பாதிபேர் வேலை இழப்பார்களா?

கனடா நாட்டின் தொழில் துறையில் தானியங்கி இயந்திரங்களால் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் அடுத்த பத்தாண்டுகளில் பணியாளர்களில் பாதிபேரின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.

இருந்தபோதிலும் இதனை அச்சத்தை ஏற்படுத்தும் ஒரு செய்தியாக இல்லாமல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு நேர்மறை செய்தியாகவே பார்க்கப்படவேண்டும் Royal Bank of Canada (RBC) அறிவுறுத்துகிறது.சொல்லப்போனால் எதிர்காலத்தில் பல வேலைவாய்ப்புகள் இருக்கும், ஆனால் அவற்றை செய்வதற்கு தேவைப்படும் திறன் பெருமளவில் மாற்றத்திற்குள்ளாகும் என்று RBCயின் மூத்த துணைத் தலைவர் John Stackhouse கூறியுள்ளார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் கனடாவின் பொருளாதாரம் 2.4 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கும் நிலையில் அவை அனைத்துமே இன்றைய மாணவர்கள் கற்கும் பாடங்களிலிருந்து வேறுபட்டிருக்கும். எனவே பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படவேண்டியது அவசியமாகிறது.

முக்கியமாக அவசரகால முடிவெடுத்தல், ஒருங்கிணைப்பு, ஈடுபாட்டுடன் கூடிய கவனம் செலுத்துதல் மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்னும் மனித திறன்களை இனி எதிர்கால வேலை வாய்ப்புகளுக்காக வளர்த்துக்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.என்னதான் தானியங்கி இயந்திரங்கள் தொழில் துறையை ஆக்கிரமித்தாலும் மனிதர்கள் செய்யும் சில வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியாது.

படைப்பாற்றல், முடிவெடுக்கும் திறன், மனித மேலாண்மை ஆகியவற்றை இயந்திரங்களால் பதிலீடு செய்யவே முடியாது.அதனால் கனடா நாட்டின் தொழில் துறையில் தானியங்கி இயந்திரங்களால் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் பணியாளர்களில் பாதிபேரின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும் அவை எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துபவையாக அல்ல நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் கொண்டு செல்லும் மாற்றங்களாகவே இருக்கும்.ஆனால் இளைய சமுதாயம் அந்த மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் தன்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.