Mar 28

பழங்குடியின தலைவர்களிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர்

நேற்றைய தினம் கனடா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 154 ஆண்டுகளுக்குமுன் Tsilhqot’in இன மக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா மக்கள் சார்பாக மன்னிப்பு கோரினார்.

Tsilhqot’in இன மக்களின் சார்பாக வந்திருந்த தலைவர்களின் முன்னிலையில் காலனி ஆதிக்க காலத்தில் British Columbiaவில் ஏமாற்றிக் கொல்லப்பட்ட ஆறு தலைவர்களுக்காக அவர் மன்னிப்பு கோரினார்.

தங்கத்தைத் தேடி ஐரோப்பியர்கள் நாட்டிற்குள் நுழைந்ததையடுத்து ஏராளமான பூர்வக்குடியினர் கொன்று குவிக்கப்பட்டனர். அது குறித்து பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டதாக நம்பி அரசுப் பிரதிநிதிகளை சந்திக்க சென்ற பழங்குடியினரின் தலைவர்கள் ஆறு பேரும் நயவஞ்சகமாக கொல்லப்பட்டனர்.

தற்போது Tsilhqot’in மக்களின் தலைவர்கள் முன்னிலையில் இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வெறும் மன்னிப்பு மட்டும் கடந்த காலத்தில் நிகழ்ந்ததை மாற்றிவிடாது என்றும்தாங்கள் பூர்வக்குடியினருடன் மீண்டும் தங்கள் உறவைப் புதுப்பித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு கனடா நாட்டவர்களிடையே மட்டுமன்றி உலக மக்கள் பலரிடமும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. கனடா பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அந்த உரை அடங்கிய வீடியோவை இதுவரை 49,000பேர் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.