Mar 28

கனடாவில் இருந்தும் ரஷ்ய அதிகாரிகள் வெளியேற்றம்

பிரித்தானியாவில் ரஷ்யாவின் முன்னாள் உளவாளி மீதான இரசாயனத் தாக்குதல் விவகாரம் காரணமாக கனடாவும் தனது நாட்டிலிருக்கும் ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவில் வசித்துவந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சு இரசாயனத் தாக்குதல் தொடர்பாக ரஷ்யா மீது பிரித்தானியா குற்றஞ்சாட்டியுள்ள அதேவேளை, ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகின்றது.

இதனை அடுத்து பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய அதிகாரிகளை பிரித்தானியா வெளியேற்றியுள்ள நிலையில், ரஷ்யாவும் தனது நாட்டில் இருக்கும் பிரித்தானிய அதிகாரிகளை வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது.

இதனால் பிரித்தானியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பிணக்கு தீவிரமடைந்துள்ளதுடன், பிரித்தானியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவின் நட்பு நாடுகள் பலவும் ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற ஆரம்பித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் தமது நாட்டிலுள்ள ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுளள நிலையில், கனடாவும் அவற்றுடன் இணைந்து ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றும் இந்த முடிவினை மேற்கொண்டுள்ளது.

கனடாவில் உள்ள நான்கு ரஷ்ய இராஜதந்திரிகள் வெளியேறுமாறு கோரப்படுவார்கள் எனவும், மேலும் மூன்று இராஜதந்திரிகள் தமது பணிகளை கனடாவில் தொடங்குவதற்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர், பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன தாக்குலானது, உலக நாடுகளின் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்டுள்ள தெளிவான அச்சுறுத்தல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரசாயன ஆயுதங்கள் எந்த வகையிலும் மனித உயிர்களுக்கு ஆபத்தினை விளைவிக்க கூடாது என்று அனைத்துலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை அப்பட்டமாக மீறும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் சாடியுள்ளார்.

இதேவேளை தற்போது கனடாவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ள நான்கு ரஷ்ய அரசதந்திரிகளும் புலனாய்வு உத்தியோகத்தர்கள் எனவும், அவர்கள் கனடாவின் சனநாயகத்தில் தலையிடுவதற்கும் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதற்கும் கனடாவின் இந்த இராஜதந்திர பதவிகளைப் பயன்படுத்தியதாகவும் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.