May 20

லிபிய விமானத்தளம் மீது தாக்குதல்: உயிரிழப்பு எண்ணிக்கை 140ஆக உயர்வு

லிபியாவிலுள்ள பிராக் அல்-ஷாதி விமானத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 140 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க கூட்டு படையினர் கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

லிபிய தேசிய இராணுவம் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள குறித்த விமான தளத்தை கைப்பற்றும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களுள் பெரும்பாலானோர் லிபிய தேசிய இராணுவம் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திரிப்போலி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைகள் நிலுவையிலுள்ள நிலையில் ஐ.நா. ஆதரவு அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தளபதி ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.