Mar 27

அட்சய பாத்திரம் எப்படிப் பிச்சைப் பாத்திரமானது?

அண்மையில், வவுனியாவில் வசிக்கும் நண்பர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவை எழுந்தது. அங்கு சென்றபோது, தரம் ஒன்றில் கல்வி கற்கும் தனது மகனுக்கு, அவர் படிப்பித்துக் கொண்டு இருந்தார். மகன், பாடசாலையில் ‘எங்கள் வீடு’ பற்றி மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும். அதையே அவர் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.  

“எங்கள் வீடு, பண்டாரிக்குளம் வவுனியாவில் அமைந்து உள்ளது. எங்கள் வீடு அழகானது. எங்கள் வீட்டுக்கு வருவோரை நாங்கள் அன்புடன் வரவேற்போம். எங்கள் வீட்டில் நாங்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம். எனது வீட்டை நான் விரும்புகின்றேன்” என்றவாறாக இருந்தன.    

இவ்வாறான உயர் எண்ணங்களுடனேயே, தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து, அதற்குச் சின்னமாக வீட்டைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்ற எண்ணமும் என்னுள் படர்ந்தது.   

தமிழர் வாழ்வில் வீடு, அதாவது இல்லம் என்பது மிகவும் போற்றுதலுக்குரிய உயர்ந்த சொல் ஆகும். அவர்கள் வாழ்வில், வீடு கோவிலுக்குச் சமம் ஆகும். அது போல, தமிழ் இனத்துக்கும் வீடு, கோவில் போன்றது.   

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலப்பகுதியில், அன்றைய புறச்சூழலே, தமிழரசுக் கட்சியைத் தோற்றுவித்தது. தமிழ் மக்கள், தமது தாய் - அகத்தை (தாயகம்) காக்க, தமிழரசுக்கட்சி பிறப்பு எடுத்தது எனலாம். தமிழ் மக்களின் தாய்க் கட்சி என்று கூட அழைக்கலாம்.   

அதேபோலவே, நீண்ட இடைவேளைக்குப் பின்னர், 2009இல் ஏற்பட்ட சூழ்நிலை, தமிழ் மக்களுக்காக மீண்டும், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம், தன்னை மறுபிரசவம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. 

ஆனால், சின்னம் வீடு என்றாலும் கட்சி தனியே தமிழரசுக் கட்சி என இல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக் கூட்டாகப் பல கட்சிகளை இணைத்துப் பயணிக்க வேண்டிய நிலை தோன்றியது.   

அவ்வாறாக, அனைவரையும் அன்புடன் அரவணைத்துச் செல்ல வேண்டிய வீட்டுக் கட்சி, அவ்வாறாகச் செல்கின்றதா? தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் அரசாகத் திகழ வேண்டிய கட்சி, அவ்வாறாக இருக்கின்றதா? அனைத்துத் தமிழ் மக்களுக்கு நிழல் பரப்பும் பெரு ஆல  விருட்சமாக உள்ளதா? தமிழ் மக்களின் மனதில் ஆழமாக வேர் ஊன்றி உள்ளதா? எனப் பல கேள்விகள் அடுத்தடுத்து மனதில் எழுகின்றன.   

இவ்வாறாக உதித்த கேள்விகளுக்கு எல்லாம், இல்லை! இல்லை! இல்லை! என்றவாறாகவே பதில்களும் இருந்தன.   

விடுதலைப் புலிகளின் மௌனத்துடன், பாரிய, பெரும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் இராஜதந்திரத்துடனும் தமிழ் மக்களின் விடுதலையின் பொருட்டுச் செயலாற்ற வேண்டிய தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள், வினைத்திறன் மிக்கதாக இருந்ததா என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் இன்றும் உண்டு. 

காலத்தின் கட்டாயமாக, ஏனைய முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புகள் மற்றும் இதர கட்சிகளையும் இணைத்துக் கூட்டாகச் செயலாற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது, தனியே தமிழரசுக் கட்சியால் நடாத்தப்பட்டு வருவதாகவும், அதில்கூட, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இருவர் அல்லது மூவர் எடுக்கும் முடிவுகளே ஒட்டு மொத்த முடிவாக இருப்பதாகவும் கருத முடியும்.  ஆதலால், தமிழரசுக் கட்சிக்கு உள்ளேயே பல அதிருப்தியாளர்கள் உருவாக்கப்பட்டு விட்டனர். போராசிரியர் சிற்றம்பலம், சாவகச்சேரி அருந்தவபாலன், வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி, மன்னார் சிவகரன் எனப் பட்டியல் நீள்கின்றது.   

இதனாலேயே தற்போதைய கூட்டமைப்பின் உள்ளுராட்சித் தேர்தல் பின்னடைவுகள் கூட, தமிழரசுக் கட்சியின் பின்னடைகள் போலவே உள்ளன.   

அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியமையால் உள்ளூராட்சித் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதாக, சம்பந்தன் கூறுகின்றார். பின்னடைவுக்கு வடக்கு மாகாண சபையே காரணம் எனத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்துத் தெரிவித்து உள்ளார். 

தோல்விக்கான காரணங்கள் எவை என அகிலமும் அறியும். ஆனால், இவர்கள் இன்னமும் தோல்விக்கான காரணங்களில் தெளிவு அடையவில்லைப் போல்த்தான் தெரிகின்றது.   

கூட்டமைப்பே வடக்கு மாகாண சபையிலும் ஆட்சி செய்கின்றது. அங்கு கூட, தமிழ் மக்கள் எதிர்பார்த்த சிறப்பான ஆட்சியை வழங்க முடியாத நிலையிலேயே ஆட்சி நகருகின்றது. பிரேரணைகள், முன்மொழிவதில் இருக்கும் ஆர்வம் மட்டும் அபாரம். 

இன்னொரு விதத்தில், கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபையைக் குறை கூறுவது, மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போன்றதாகும். உண்மையில் சிறந்த தலைமைத்துவப் பண்பு உடையோர், தோல்விக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்த மாட்டார்கள்.  

சட்டப்புலமை உள்ள கூட்டமைப்பின் தலைமை, ஈ.பி.டி.பி கட்சியிடம், சபைகளில் ஆட்சி அமைக்க, ஆதரவு கோர வேண்டிய நிலை ஏற்படும் என, கனவில் கூட கண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் விரும்பும் நபரை, யாழ். மாநாகர சபையின் மேயராக ஏற்றி அழகு பார்க்க முடியாத, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை தோன்றியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பின்னர், தமிழரசுக் கட்சியினால் முன்னர் வௌியிடப்பட்டு வந்த ‘சுதந்திரன்’ பத்திரிகை ‘புதிய சுதந்திரன்’ என்ற பெயருடன் வௌிவந்துள்ளது. 

ஒன்றாக எழ வேண்டிய தருணம் இது என்ற தலைப்பைத் தாங்கி வெளி வந்த முதல் இதழின் உள்ளே, வடக்கு முதலமைச்சரை நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் என எள்ளி நகையாடி, கட்டுரை வந்துள்ளது.   

‘புதிய சுதந்திரன்’ தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகை. ஆகையால், இவ்வாறாக கருத்துகள், எவ்வாறு தமிழ்த் தலைவர்களை ஒன்றாக்கும் என்று தெரியவில்லை. இப்படி எழுதினால் எப்படி ஒன்றாக எழுவது? தமிழ் மக்களது இருப்புகளை மூழ்கடித்து,  அழிக்கும் காட்டுவௌ்ளம் கழுத்து வரை வந்து விட்ட வேளையிலும், எம்மவர்களின் சின்னப் பிள்ளைத்தனமான வேற்றுமை பாராட்டும் மனப்பாண்மை கரைவதாகத் தெரியவில்லை.   

நல்லிணக்கம், நல்லுறவு என ஆட்சியாளர்கள் கத்திக் குளறினாலும் அடிப்படையில், ஆட்சியில் பங்கு பகிரத் தமிழ் மக்கள் தயார் இல்லை. தமிழ் மக்களின் உணர்வுகளை, உண்மையாக உணர்ந்து கொள்ளும் நிலைக்கு, இன்னமும் ஆட்சியாளர்கள் பக்குவப்படவில்லை.   

சர்வதேச சக்திகளது இறுக்கமான தொடர் நெருக்கடிகள் இன்றி, இம்மியளவும்  ஆட்சியாளர்கள் இனப்பிரச்சினை உட்பட எந்தப் பிரச்சினைக்கும் இரக்கம் காட்டித் தீர்வு காணத் தயாராக மாட்டார்கள். தமிழ் மக்களது கோரிக்கைகள், அவர்களுக்கு மாரி காலத்து தவளை கத்துவதுபோல இருப்பதாகவே கடந்த கால அனுபவங்கள், தமிழ் மக்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றன.   

ஆனால், 2016இல் தீர்வு; 2017இல் தீர்வு; பொங்கலுக்குள் தீர்வு; தீபாவளிக்கு தீர்வு எனப் பட்டாசு கொளுத்தி என்ன நடந்தது?   

அரசமைப்பு மாற்றத்தின் ஊடாக, விடிவு கிடைக்கும் என நம்பி, கடந்த மூன்று வருடங்களாக, அரசாங்கத்துக்குப் பல வழிகளிலும் ஆதரவுகளை அள்ளி வழங்கி அடைந்தது என்ன?  படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை; தமது படையினரைத் தண்டிக்க மாட்டோம்; தண்டிக்க விடவும் மாட்டோம் என, மீண்டும் மீண்டும் கூறிவரும் மைத்திரி - ரணில் கூட்டு அரசாங்கத்திடம் என்ன முறையில் தமிழ் இனம் நீதியை எதிர்பார்ப்பது?  அரசியல்வாதி அடுத்த தேர்தல் பற்றி யோசிப்பான். தன் இனத்தை நேசிப்பவன் மட்டுமே, தனது இனத்தின் அடுத்த தலைமுறை பற்றி யோசிப்பான்.   

தமது பத்திரிகையை வெளியிடுவதிலும் தமது மறைந்த தலைவருக்கு சிலை வைப்பதிலும் இருக்கும் அக்கறை, கூட்டமைப்பைக் கட்சியாகப் பதிவு செய்து, ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏன் இன்னமும் தோன்றவில்லை என, மக்கள் வருத்தப்படுகின்றார்கள்.   

தமிழ் இனம், தனது விடுதலைக்காக இழந்தவை ஆயிரம். அகிம்சை, வெற்றி தராமையால் ஆயுதத்தை நாடி, அதைப் பயங்கரவாதம் என ஆட்சியாளர்கள் சோடித்து, தோற்கடித்து, தற்போது நாதி அற்ற இனமாக நடுத்தெருவில் உள்ளது.   

விடுதலையை வென்றெடுக்க அறிவாற்றல் கலந்த இராஜதந்திரமே கரம் கொடுக்கும். இதைத் தனியே ஒருவர் அல்லது இருவர் சாதிக்க முடியுமா? நமக்கிடையில் வேற்றுமை பாராட்டி, மற்றவரைப் புறம் ஒதுக்கி, அவரது திறமைகளைப் பயன்படுத்தாது, எவ்வாறு விடுதலை என்ற பெரு வெளிச்சத்தை காண்பது?  

நமது அரசியல்வாதிகள், கட்சி அரசியலுக்கு அப்பால், தூர நோக்கத்துடன் சிந்திக்க வேண்டும். நான் பெரிது; நீ பெரிது என வாழாமல், ‘நம் இனம்; நம் மக்கள்’ எனச் சிந்திக்க வேண்டும்.   

ராஜநடையில் வீரத்தோடு மீசை முறுக்கி வலம் வந்த ஓரினம், கூனிக்குறுகி, ஊன்று கோலுடன், இன்னும் எத்தனை காலம் மனமுடைந்து, மானம் இழந்து வாழ்வது? சிறப்பாக, அட்சய பாத்திரத்துடன் கோலோச்சி வாழ்ந்தவர்கள், இன்னும் எத்தனை காலம் பிச்சைப் பாத்திரம் ஏந்துவது? 

காரை துர்க்கா