Mar 27

அல்லா குறித்து சர்ச்சை கருத்து: கனடா நாட்டு அரசியல் ஆர்வலருக்கு வாழ் நாள் தடை

அல்லா ஒரு ஓரினச் சேர்க்கையாளர்” என்பது போன்ற கருத்துகளை வெளியிட்ட கனடா நாட்டு அரசியல் ஆர்வலரான Lauren Southern (22)க்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் “அல்லா ஒரு ஓரினச் சேர்க்கையாளர்” என்பது போன்ற செய்திகளைக் கொண்ட கைப்பிரதிகளை விநியோகித்ததற்காக Lauren கடும் கண்டனத்துக்குள்ளானார்.மார்ச் 13 ஆம் திகதி மீண்டும் அவர் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றபோது Calaisஇல் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

வியாழனன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தான் இதை ஒருஆய்வுக்காகத்தான் செய்ததாகவும், மக்கள் இத்தகைய கருத்துக்களை எவ்விதம் எதிர் கொள்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான் இவ்வாறு செய்ததாகவும் ஆனால் அதற்காக தனக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் Lauren கைப்பிரதிகளை விநியோகிக்கத்தொடங்கியதும் மக்கள் கூடி எதிர்ப்புத் தெரிவிப்பது நன்றாகவே தெரிகிறது.

உடனடியாக அங்கு வரும் பொலிசார் அவரை கைப்பிரதிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்துகிறார்கள்.

Lutonஇல் பொலிசார் தன்னை ஆறு மணி நேரம் விசாரணைக்குட்படுத்தியதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது என தான் நம்பியதாகத் தெரிவிக்கிறார்.

ஆனால் Lauren பிரித்தானியாவுக்குள் நுழைவது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதன் அடிப்படையிலேயே அவருக்கு பிரித்தானியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.