May 20

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளது: விஜயகாந்த்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடக்கும் தொல்லியல் ஆய்வுப் பணிகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பார்வையிட்டார். ஆய்வுப் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரே ஓட்டுக்கு மூன்று முதல்வர்களை தமிழக மக்கள் பார்த்து விட்டனர் என்றார்.

ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிக-வுக்கு பாதிப்பில்லை என கூறிய அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக-வால் காலூன்ற முடியாது எனவும் திட்டவட்டம் தெரிவித்த விஜயகாந்த், அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.