May 20

சசிகலா நியமனத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷனிடம் ஓ.பன்னீர்செல்வம் அணி பிரமாண பத்திரம் தாக்கல்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் தேர்தல் கமிஷனிடம் பிரமாண பத்திரமும், கூடுதல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளனஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலா அணிக்கு அ.தி.மு.க. (அம்மா) என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) என்றும் பெயர் வழங்கிய தேர்தல் கமிஷன், அந்த அணிகளுக்கு தனித்தனி சின்னங்களையும் ஒதுக்கியது.


இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றதையும், அவரால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் கே.சி.பழனிச்சாமி, டாக்டர் வி.மைத்ரேயன் உள்ளிட்டோர் ஏற்கனவே தேர்தல் கமிஷனில் மனு அளித்து உள்ளனர். அந்த மனுவை தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த டாக்டர் வி.மைத்ரேயன் தரப்பில் நேற்று தேர்தல் கமிஷனிடம் 175 பக்கங்களில் பிரமாண பத்திரம் மற்றும் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் பாலாஜி, வைஷ்ணவி பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்தல் கமிஷனிடம் இந்த ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

டாக்டர் வி.மைத்ரேயன் கையெழுத்திட்டுள்ள அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேர்தல் கமிஷனால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது அத்தொகுதியின் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்தது பற்றியும், அது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்தும் தேர்தல் கமிஷன் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

தேர்தல் கமிஷனுக்கு ரூ.50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயற்சி நடந்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் டி.டி.வி.தினகரன் மீதானநடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

தேர்தல் கமிஷனின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இடம் காலியாக இருக்கிறது. கட்சியின் பொதுச்செயலாளர் என்று யாருடைய பெயரும் அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்படவில்லை..