Mar 23

ஏப்ரலில் லிபியா அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்கும் சுவிஸ்

அவசரகால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக லிபியாவை சேர்ந்த 42 அகதிகள் முதற்கட்டமாக ஏப்ரல் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் அனுமதிக்கப்படவுள்ளனர்.அகதிகள் காவல் முகாமில் ஆபத்தான நிலையில் இருக்கும் அகதிகளை நாட்டில் அனுமதிக்க சுவிஸ் அரசு, ஐ.நா அகதிகள் நிறுவனத்துடன் சேர்ந்து ஒத்து கொண்டுள்ளது.

இதுகுறித்த செய்தியை உள்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ளது.அதன்படி கடந்த டிசம்பரில் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் லிபியா காவல் அகதிகள் முகாமில் உள்ள 80 அகதிகள் வரை நாட்டில் அனுமதிக்க சுவிஸ் அரசு ஒத்துக்கொண்டது.

முக்கியமாக பெண்கள், சிறார்கள் உட்பட 5000 லிபிய அகதிகள் பாலியல் தொல்லை, துஷ்பிரயோகம், மனித கடத்தல் மற்றும் அடிமைத்தனம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுவிஸ் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகள் அவர்களை அரவணைக்க ஐ.நா. உயர் ஆணையம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாகவே லிபியா அகதிகள் சுவிஸில் அனுமதிக்கபடவுள்ளார்கள்.வருங்காலத்தில் நைஜர் வழியாக லிபியா அகதிகள் இன்னும் அதிகம் பேரை சுவிஸ் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கும் என நம்புவதாக ஐ.நா உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.