May 19

காதல் திருமணத்தால் கேரள இன்ஜினியர் சுட்டுக்கொலை… பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

காதல் திருமணம் செய்த கேரளாவை சேர்ந்த வாலிபர் ஜெய்ப்பூரில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகேயுள்ள அடூரைச் சேர்ந்தவர் ேசாமன். இவரது மனைவி ரமாதேவி. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியேறினர்.

இவர்களது மகன் அமீத்நாயர் (28). ஜெய்ப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வக்கீல் மம்தா சவுத்ரிக்கும் (26) காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்தனர்.

இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காதல் ஜோடி கடந்த 2 வருடத்துக்கு முன்பு கேரள மாநிலம் பத்தனம் திட்டாவுக்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மீண்டும் ஜெய்ப்பூருக்கு திரும்பினர்.

இந்த நிலையில் மம்தா கர்ப்பிணியானார். இதை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்தனர்.

நேற்று முன்தினம் காலை மம்தாவின் பெற்றோர், அவரது அண்ணன், நண்பர் ஒருவர் ஆகியோர் மம்தா வீட்டிற்கு சென்றிருந்தனர். திடீரென மம்தாவின் அண்ணனுக்கும், அமீத் நாயருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த மம்தாவின் அண்ணன் துப்பாக்கியால் அமீத்நாயரை நோக்கி சுட்டார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை பார்த்ததும் மம்தா கதறி அழுதார். உடனே அவரை பெற்றோர் அங்கிருந்து அழைத்து சென்றனர். இது குறித்து ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.