Mar 11

முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் உறுதிசெய்யப்பட வேண்டும்;ஹஸன் அலி

வட கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமெனின் அங்கு முஸ்லிம்களுக்கு கரையோர மாவட்டம் உறுதிசெய்யப்பட வேண்டும். அக்கோரிக்கையில் உறுதியாக உள்ளேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.  

எனது 32 வருட கால அரசியல் வாழ்க்கையினை முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சூன்யமாக்கியுள்ளது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் என்ற வகையில் கட்சிக்குள்ளும் வெளியிலும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் மிகக் கவனமான தீர்மானங்களையே மேற்கொண்டேன் எனவும் குறிப்பிட்டார்.

எனினும் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கபட்ட கட்சியை நீதிமன்றம் வரையில் கொண்டு செல்லக்கூடாது என்பதற்காக நான் நீதிமன்றை நாடவில்லை. அவ்வாறு நீதிமன்றம் சென்றிருந்தால் பேராளர் மாநாட்டை நடத்தியிருக்க முடியாது போயிருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.