Mar 17

பிரித்தானியாவில் ரஷ்ய உளவாளி மீது இரசாயனத் தாக்குதல்: கனடா கண்டனம்

பிரித்தானியாவில் ரஷ்ய முன்னாள் உளவாளி மீது நடத்தப்பட்ட இரசாயனத் தாக்குதல் சம்பவத்திற்கு கனடா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கனடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த தாக்குதல் வெறுக்கத்தக்க இழிவுசெயல். இவ்வாறான வெறுக்கத்தக்க இரசாயன ஆயுதப் பயன்பாட்டினை கனடா வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த விவகாரத்தில் ரஷ்யா சம்பந்தப்பட்டுள்ளமையானது, மிகவும் பாரதூரமான விதிமுறை மீறல். இந்த விவகாரத்தில் அனைத்து வழிகளிலும் பிரித்தானியாவிற்கு கனடா உறுதுணையாக இருக்கும். அதேபோல ஏனைய நாடுகளும் இந்த விடயத்தில் பிரித்தானியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான சேர்கேய் ஸ்கிரிப்பால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகிய இருவர் மீதும் வணிக வளாகம் ஒன்றில் வைத்து கடந்த நான்காம் திகதி இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் இருவரும் பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில் இன்னமும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த இந்த தாக்குதல் தொடர்பில் பிரித்தானியா ரஷ்யா மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளதோடு, ரஷ்யா மீது பல நாடுகளும் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளது.