Mar 15

ஈழத்தமிழரின் பிரச்சனை தீர என்ன வழி?.

ஈழத் தமிழரின் பிரச்சனை என்ன?. 

உலகில் பிறக்கும் அனைவரும் தத்தம் பிராந்தியங்களில் இயற்கை கொடுக்கும் வழங்களை பயன்படுத்தி  தத்தம் திறமைக்கேற்ப தாம் பெற்றவற்றைத் தாம் அனுபவிக்க சமமான வாய்ப்பை உரிமையைக் கொண்டுள்ளனர். அந்தச் சமமான சந்தர்ப்பங்கள் உரிமைகள் ஏதோவகையியல் மறுக்கப்படும் போது, தடுக்கப்படும் போது, இன்னொருவரால், இன்னொரு சாராரினால் அபகரிக்கப்படும் போதுதான் பிரச்சனைகள்  வருகின்றன. தனியான மொழி பண்பாடு கலாச்சாரத்தை உடைய ஈழத் தமிழர் தமது பிரதேசங்களில், பிராந்தியங்களில் தமது அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொண்டு பொருளாதார வழமாக வாழ, தம் மொழி பண்பாடு கலாச்சாரங்களை வழப்படுத்த   வழியில்லை. அவர்களது உரிமைகளை சிங்கள அரசு தனதாக்கிக் கொண்டு அவர்களைச் சமமான பிரசைகளாக நடத்தாமல் சிங்கள இனத்திற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து தமிழரை புறமொதுக்குகின்றது. இலங்கையில் பிறந்து வாழும் தமிழருக்கு  அதுதான் பிரச்சனை.

தீர்வு என்ன?.

ஆட்சியில் இருப்பவர்கள் தாம் ஆளுகின்ற அனைத்து மக்களையும் மொழி, இன, மத, பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் சமமாக ஆட்சி செய்தால் பிரச்சனையே இல்லை. அது ஒற்றை ஆட்சியின் மூலம் சாத்தியமாகும்.  அது சாத்தியமில்லாவிடின் அந்தந்த இன மக்களுக்கு அவரவர் பிராந்தியங்களில் ஆளும் உரிமையைக் கொடுத்து பிராந்தியங்களை ஒருங்கிணைக்கும் ஒரு மத்திய அரசிற்கு முழு நாட்டுக்கும்  பொதுவான விடயங்களையும் வெளியுறவு விடயங்களையும் கையாளும் அதிகாரங்களைக் கொடுக்கலாம். அதை கூட்டாட்சி அல்லது சமஷ்டி மூலம் ஏற்படுத்தலாம். அதாவது முழுநாட்டுக்குமான சட்டம் இயற்றும் அதிகாரம் அதை நடைமுறைப் படுத்தும் அதிகாரம் நாட்டின் ஒரு மையத்தில் இருந்தால் அது ஒற்றை ஆட்சி. பல மையங்களில் இருந்தால் அது சமஷ்டி. அப்படியான சமஷ்டியும் சாத்தியமில்லாவிடில் தான்  தனிநாடாகப் பிரிந்து போகவேண்டும். ஆனால் உள்நாட்டிலும் குறிப்பாக வெளிநாடுகளதும் சாதகமான நிலைமைகள் இல்லாவிட்டால் அப்படியான தனிநாடு சாத்தியப் படாது. 

நடைமுறைச் சாத்தியமான தீர்வு என்ன?.  

தனிநாடு.

எமது நீண்டகால அனுபவங்களில் இருந்தும் சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச பூகோள நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கும்போதும் தனிநாடு என்பது கண்ணுக்கு எட்டிய காலம்வரை சாத்தியமே இல்லை. 

சமஷ்டி அல்லது கூட்டாட்சி :-

இதை இந்தியாவும் சர்வதேசமும் மிகவும் வரவேற்கின்றன. மிகப்  பெரும்பாலான தமிழ் பேசும் மக்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். ஆனால் பெரும்பாலான சிங்கள மக்களைப் பொறுத்தவரை தனிஈழம் என்பது அதிபயங்கரமான ஒன்றாக அவர்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அவர்களுக்கு சமஷ்டி பற்றிச்  சரியான முறையில் தெளிவை ஏற்படுத்தினால் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அதைச் சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் அம்முயற்சியைத் தனி ஈழ முயற்சியின் தொடக்கமாகக் கருதி அதைத் தடுக்க தம்மால் ஆன அனைத்தையும் செய்வர். அண்மைக் காலமாக தற்போதைய அரசாங்கம் ஒரு சமஷ்டிக்

கட்டமைப்பிலான புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது. ஆனால் அதை சிங்கள மக்களுக்குப் புரியவைக்க தெளிவுபடுத்தப் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதேநேரம் இந்த அரசைக் கவிழ்த்து தாம் பதவிக்கு வரத்துடிக்கும்  மகிந்த தரப்பு சிங்கள மக்களின் அடிமனப் பயத்தைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் உதவியில் அமைக்கப்பட்ட இந்த அரசாங்கம் அவர்கள் தனிநாடு அமைப்பதற்கான முதற்படியாக அதியுச்ச அதிகாரமுள்ள சமஷ்டி அரசமைப்பைக் கொண்டுவருகிறார்கள் என்று கடந்த மூன்று வருடமாக பலத்த பிரச்சாரம் செய்தார்கள். அதனால் தனிநாடு உருவாவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர்கள் நம்பிய அந்த அரசமைப்பிற் கெதிராக, மூன்று வருடத்திற்கு முன் தாம் தூக்கியெறிந்த, அக்கிரம ஆட்சி செய்த அதே மகிந்தவையே ஆதரிக்க வேண்டிய நிலைமைக்கு சிங்கள மக்கள் ஆளானார்கள்.  அதனால் அண்மையில் மகிந்த தரப்பு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

இதில் கொடுமை என்னவென்றால் அதே அரசமைப்பில் சமஷ்டியே இல்லை என்றும் அது ஒற்றை ஆட்சிதான் என்றும் ஒரு தமிழ் அரசியற் தலைமை பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். மகிந்தவின் பொய்யை பெரும்பாலான சிங்கள மக்கள் நம்பியதைப் போல தமிழர் தரப்பின் இந்தப் பொய்யை ஒருசிறு பகுதி தமிழரும் நம்பிவிட்டார்கள். சமஷ்டி முறையிலான ஒரு ஆட்சி முறையில்தான் தமிழ் மக்களுக்கான பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடைமுறைச் சாத்தியம் இருக்கின்றது. ஆனால் சமீபகாலச் சம்பவங்கள், தேர்தல் முடிவுகள் அதை ஒரு தேக்க நிலைக்கு கொண்டு வந்திருப்பது மிக வேதனையான விடயம்தான். இந்த நிலைமைக்குக் காரணம் புதிய அரசமைப்பை உருவாக்குவதில் சம்மந்தப்பட்ட இருதரப்பாரதும் மிகக் கடுமையான இழுபறியினால் இரு தரப்பினரும் அதிலேயே மூழ்கினார்களே தவிர அதை சிங்கள மற்றும் தமிழ் மக்களிடம் சந்தைப்படுத்த வேண்டும் என்பதை அலட்சியம் செய்து விட்டார்கள். இழுபறியில் காலம் கடந்து விட்டதால் மேலும் காலதாமதம் செய்யாமல் அதன் இடைக்கால அறிக்கையை திடீரென வெளியிட்டு விட்டு  மக்களுக்கு அதைப்பற்றிய எந்தவித தெளிவையும் ஏற்படுத்தாமல் முழு இலங்கைக்கு மான உள்ளூராட்சித் தேர்தலை நடத்தினார்கள். அத்தோடு அதை உருவாக்கிய நல்லாட்சி அரசின் இரு பங்காளிகளும் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டு ஒருவரை ஒருவர் திட்டினார்கள். அதன் விளைவுதான் இன்றய தேர்தல் முடிவாகும். இன்றய சூழ்நிலையில் புதிய அரசமைப்பிற்கு மீண்டும் உயிர் கொடுப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது.  

இந்த நிலைமையை ஏன் மகிந்த தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பாளரும் ஏற்படுத்தினார்கள்?. இந்தப் புதிய அரசமைப்பு நடைமுறைப் படுத்தப் படுமானால் நிட்சயமாக இலங்கையின் அரசியற் பிரச்சனை பெருமளவு தீர்க்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழவும் இலங்கை இன்னொரு சிங்கப்பூர் போல பிரகாசிக்கவும் வழி பிறந்திருக்கும். அப்படி நடந்தால் இப்போது எதிரணியில் இருக்கும் மகிந்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பாளரும் பதவிக்கு வரவே முடியாது. அதனால் தமது பதவி ஆசையை நிறைவேற்ற மக்களின் சிறப்பான சமாதான சகவாழ்வைப் பணயம் வைத்துச் சூதாடுகின்றார்கள். இவர்களுக்கு தேவை நாட்டில் பிரச்சனை தீரக்கூடாது, கொதிநிலையில் எப்போதும் இருக்க வேண்டும். அப்படி நாட்டில் எப்போதும் குழப்பமும் நெருக்கடியும் இருந்தால்த் தான் இவர்கள் தமது வியாபார அரசியலை நடத்த முடியும். மக்களை பற்றிய கவலை அவர்களுக்கு சிறிதும் கிடையாது.  ஆனால் அதியுச்ச பணபலம் கொண்ட  இந்த இருதரப்பாரதும் உணர்ச்சிவசமான வசீகரமான வஞ்சகமான பிரச்சாரங்களை சில பாமர மக்கள் நம்பிவிடுகின்றார்கள். நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த விரும்பும்  இந்த  இருதரப்பாரும் தாம் எதிரிகள் போல வெளியில் காட்டிக் கொண்டாலும் குறிக்கோள் தேவை ஒன்றாகவே இருப்பதால் மறைமுகமாக நன்றாகவே ஒருவருக் கொருவர் ஒத்துழைக்கின்றார்கள்.    

அரசியற் தலைமைகள் என்ன செய்ய வேண்டும்?. 

அனைத்துச் சாதக பாதக நிலைமைகளையும் மிகச்சரியாக ஆராய்ந்து அதிஉச்சமாகப் பெறக்கூடியதைப்  பெற்றுக்கொள்வதே அரசியல் என்னும் கலையாகும். சரி பிழை அடிப்படையிலோ நீதி தர்மம் அடிப்படையிலோ குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் விருப்பிலோ  அரசியற் செயற்பாடுகள், உலகச்   செயற்பாடுகள், நடைபெறுவதில்லை. அவரவர் அரசியல் பொருளாதார ஆதிக்க நலன்களை, பலங்களைப் பொறுத்தே முடிவுகள் செயற்பாடுகள் அமைகின்றன. அவற்றை எல்லாம் கடந்துதான் சரி பிழை நீதி பரிசீலிக்கப்படும். இந்த உண்மையைச்  சாதாரண பொதுமக்களுக்கு எடுத்துக் கூறாமல் ஏதோ  அரசாங்கமும் உலகமும் தர்மத்தின் அடிப்படையில்தான் செயற்படுகின்றது, செயற்பட வேண்டும்  என்பது போலவும் நீதி தர்மத்திற்கான வெறும் ஜனநாயகப் போராட்டங்களால் நினைத்ததைச் சாதித்து விடலாம் என்றும் தமது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அப்பாவிப் பொதுமக்களை வெறும் உணர்ச்சிவசப் பேச்சுக்களால் ஏமாற்றி அவர்களை வாட்டி எடுப்பது, மனோரீதியாக வதைப்பது பெரும் துரோகமாகும்.  அரசியற்  தலைவர்களுக்கான  நன்மைகளின் அடிப்படையில் சிந்திக்காமல்  மக்களுக்கு உண்மையை யதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லி மக்களுக்கான நன்மைகளின் அடிப்படையில் சிந்தித்து அவர்களை வழிநடத்ததி மக்களுக்கு பெற்றுக்கொள்ளக் கூடிய  அதிஉச்சமான நன்மைகளை பெற்றுக் கொடுப்பதே ஒரு அரசியற் தலைமையின் கடமையாகும்.

இன்றய தமிழ் மக்களின் யதார்த்த நிலை என்ன?. 

முன்பு 94 வீதம் தமிழ் மக்களே வாழ்ந்த வடக்கு கிழக்கு தமிழ்ப் பகுதியில் இப்போது கிழக்குப் பகுதியில் 26 வீதமானவர்கள் சிங்களவர்களாகவும் வடக்கிலும் 14 வீதமானவர்கள் சிங்களவர்களாகவும் 

இருக்கின்றார்கள். இப்போது நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரின் உரிமைகளை முன்னிலைப் படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு கிழக்கு மாகாணங்கள்  முழுவதுமாகக் கிடைத்த வாக்குகள் 22 வீதம் மட்டுமே. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குக் கிடைத்த வாக்குகள் 5.5 வீதம் மட்டுமே. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்குக் கிடைத்த வாக்குகள் 4.5 வீதம்தான். மூன்றையும்  கூட்டிப் பார்த்தாலும் 32 வீதம் தான். ஆனால் வடக்குக் கிழக்கில் அனைத்துத் தென்னிலங்கைக் கட்சிகளுக்குக் கூட்டாகக் கிடைத்த வாக்குகள் 40 வீதம் ஆகும். சிங்களக் கட்சிகளோடு சங்கமமாகி ஒத்துப் போகின்ற தமிழ் முஸ்லீம் கட் சிகளுக்குக் கிடைத்த வாக்குகள் 16 வீதமாகும். சுயேச்சைகள் 12 வீதமாகும். இன்றய நிலையில் தமிழர் உரிமையை முன்னிறுத்தும் மூன்று கடசிகளுக்கும் கூட்டாகக் கிடைத்த வாக்குகள் 32 வீதம்தான் என்பதை மனதிற்கொண்டு தான் நாம் தீர்வைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளோம். நீர்கொழும்பு வரை தமிழீழப் படத்தை வரைந்து அதைச் சுமந்துகொண்டு மக்களை ஏமாற்றி வீதியுலா வருவதில் என்னதான் பயன். யதார்த்தத்தை உணர வேண்டாமா?. வடக்கு கிழக்கு மக்களின் சர்வஜன வாக்கெடுப்பால் தீர்வைத் தீர்மானிக்க வேண்டும் என்று சிலர் கூப்பாடு போடுகின்றார்கள். சர்வஜன வாக்கெடுப்பை நடத்த எந்த இலங்கை அரசோ சர்வதேசமோ ஒப்புக் கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க அது நடந்தாலும் 32 வீதத்தைக் கொண்டு முடிவு என்ன கிடைக்கும் என்று தேர்தலை நடத்தித்தான் அறிய வேண்டுமா?. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பிலும் இதுதான் பிரச்சனை. பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்தி தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ வழி செய்தால் காலப்போக்கில் முஸ்லிம்களும் இணைப்பின் நன்மைகளை விளங்கி தமக்கும் அதனால் நன்மைதான் என்பதை உணர்ந்து இணைப்பைச் சாத்தியமாக்குவார்கள். 

இப்போது ஈழத் தமிழர் என்ன செய்யலாம்?.  

முதற்கருமமாக ஒன்றுபட வேண்டும். இப்போது நடந்த தேர்தலில் வடக்குக் கிழக்கில் தமிழர் உரிமைபற்றிப் பேசும் மூன்று கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளை வேறாகக் கணித்துப் பார்த்தால் அதில் 70 வீதமான வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் 16 வீதமான வாக்குகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் 14 வீதமான வாக்குகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் பெற்றுள்ளன. இதன்படி தமிழர் ஒன்றுபட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அவர்கள் தலைமையில் தான் ஒன்றுபட வேண்டும், ஒன்றுபட முடியும் என்பதைச் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதைச் சுயநலங்கொண்ட ஏதாவது தலைமை ஏற்றுக்கொள்ளாவிடில் மக்கள்தான் அதனைச் செய்யவேண்டும். அதாவது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒன்றுபடவேண்டும். யாருடைய பொய்ப்பிரச்சா ரங்களையும்    நம்பி ஏமாறக் கூடாது. அப்படி இந்தச் சந்தர்ப்பத்திலாவது ஒன்றுசேராவிடில் ஒன்றாக அழிந்துவிட நேரிடும் என்பதை முடிவாக நம்பலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அனைவரும் மிகச் சிறந்தவர்கள் வினைத்திறன் உள்ளவர்கள், தியாகிகள், சுயநலம் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கூட்டமைப்பின் தலைமை, மிகச் சாதுரியமாக சாணக்கியமாக தொலை  நோக்கோடு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைமைகளை மிக நுட்பமாகக் கவனித்து ஆராய்ந்து  தமிழருக்கான அரசியற் தீர்வை நோக்கி மிகச்சரியாகச் செயற்படுகின்றார்கள். தமிழ் மக்களுக்கு  அவர்களைத் தவிர சிறந்த தெரிவு, தலைமை  வேறு எவரும் இல்லை. தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒன்று சேர்ந்து உள்வீட்டைச் சுத்தப் படுத்தலாம். வெளியில் நின்றுகொண்டு சேற்றை வாரி எறிவதால், நமக்கு நாமே மண்ணை அள்ளிக்கொட்டுவதால் அழிவு நமக்குத்தான்.  உண்மையை ஆராய்ந்து பார்க்கப் போனால் கொள்கை ரீதியாக யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு முரண்பட வில்லை என்பது விளங்கும். தலைமை முன்னுரிமை பதவி கிடைக்கவில்லை என்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பாளரின் பிரச்சனையாகும்.  

தீர்வு விடயமாக புதிய அரசமைப்பு கிடப்பில் போடப்படுவது முடிவானால் என்ன செய்யலாம்?. 

உண்மையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் சமஷ்டிக் கட்டமைப்பின் ஆரம்பமாகும். அது ஏற்கெனவே அரசியல் அமைப்பில் இருக்கின்றது. அதில் பொலிஸ் காணி அதிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கை அரசு அதை முழுமையாக நடைமுறைப் படுத்தாமல் ஒரு போலி மாகாணசபையைத்தான் இப்போது கொடுத்துள்ளது. இப்போதுள்ள ஜனாதிபதியின் அதிகாரங்களை சட்டத் திருத்தத்தின் மூலம் இப்போது இருப்பதை விடவும் இன்னும் கூடியளவு குறைத்துக் கொண்டால் அதற்குச் சமாந்தரமான ஆளுநர் அதிகாரங்களும் குறைக்கப்படும். அதைச் செய்வதோடு 13ம் திருத்தச் சட்டமூலத்தை ஒரு முறையான சட்டத்திருத்தத்தின் மூலம் முழுமையாக நடைமுறைப் படுத்துவது இப்போதைய நிலைமையில் சாத்தியமாகும். அது ஏற்கெனவே அரசியல் அமைப்பில் இருப்பதால் புதியவிடமாகப் பார்க்கப்படத் தேவையில்லை. மகிந்தவும் 13 + கொடுப்பதாகப் பலமுறை பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனால் அதைச் செய்வதில் பெரும் தடைகள் இருக்க வாய்ப்பில்லை. நாம் எடுத்த      எடுப்பிலேயே மலை உச்சியை அடைந்துவிட முடியாது. கிடைக்கின்ற வசதி வாய்ப்புகளை, உரிமைகளை  முறையாகப் பயன்படுத்தி அதன்மூலம் எமது சக்தியை, பலத்தை, பொருளாதாரத்தை  அதிகரிப்பதன் மூலம்தான் மேலும் மேலும் உயர்வடையலாம். வைத்தால் குடும்பி, எடுத்தால் மொட்டை  என்பது அழிவிற்கே வழிவகுக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமையும்போது புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்தலாம். 


V. Vin. Mahalingam .