Mar 14

தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க சாத்தியப்படும் வழிகளை ஆராய கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன்

தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்திரிகையான புதிய சுதந்திரனில் எழுதியுள்ள பத்தியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 அந்தப் பத்தி முழுமையாக இங்கு தரப்படுகின்றது. 

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் கடந்த மாதம் 26ம் திகதி ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இம்முறை அமர்வுகளில் இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் விசேட கவனம் குவிந்துள்ளது.  

இந்த நிலையில் ஜெனீவாவிலே வருடத்துக்கு மூன்று தடவை அமர்வுகளை நடத்தும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை சம்பந்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்  அவற்றின் தன்மையும் மற்றும் பின்னணி குறித்தும் அதிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் குறித்தும் ஆராய்வோம்.  

ஜெனிவா தீர்மானங்களைப் பொறுத்தவரையில் ஆரம்பம் தமிழ் மக்களுக்கு கசப்பானதாகவே அமைந்தது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுபெற்ற கையோடு ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசாங்கத்தை பாராட்டுவதாகவும் அதற்கு சாதகமானதாகவுமே காணப்பட்டது. மிலேச்சத்தனமாக கட்டவிழ்த்தப்பட்ட போரிலே தோல்வியுற்று பெரும் இழப்புக்களுக்கு மத்தியில் நின்ற தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகவே 2009 தீர்மானம் அமைந்திருந்தது. 

பயங்கரவாத்திற்கும் பிரிவினைவாதத்திற்கும் எதிரான யுத்தத்தை இலங்கை வெற்றிகொண்டுள்ளதாகவும் போருக்குப் பின்னரான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு  நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இலங்கை அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தின் உதவியை நாடி நிற்பதாகவும் சுட்டிக்காட்டியே 2009ல் தீர்மானம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.  

அமெரிக்கா பிரித்தானியா  ஐரோப்பிய ஒன்றியம் பிரான்ஸ் போன்ற சக்திவாய்ந்த நாடுகள் இலங்கைக்கு ஆதரவான 2009 தீர்மானத்தை எதிர்த்த போதும் ஒட்டுமொத்தமாக 29 நாடுகள் ஆதரவாகவும் 12 நாடுகள் எதிராகவும் 6 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலையிலும் இலங்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேறியது. 

இத்தகைய கடினமான சூழ்நிலையில் தான் ஜெனிவாவை தமிழர்கள் பக்கமாக திருப்புகின்ற நடவடிக்கையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அக்கறைமிக்க தரப்பினருடன் இணைந்துகொண்டு செயற்திட்டங்களை முன்நகர்த்தியது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக இந்த விடயத்தில் இராஜதந்திர சமூகத்தினை வலியுறுத்தியது. 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதி இராஜாங்க செயலாளர் வென்டி ஷெர்மன் வரைக்கும் பல முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டனர்.

இதுதான் தமிழர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஜெனீவா தீர்மானங்களுக்கான 1வது படியாகும். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2009 இல் போரை முடிவுக்கு கொண்டுவரும் தருணத்தில் அனைத்துலக சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே இந்த நடவடிக்கைக்கான காரணமாக அமைந்தது.

இச்சந்திப்புகளுக்குப் பின்னர் அமெரிக்க அரசாங்கம் இவ்விடயத்தை ஆராய்ந்து ஐ.நா மனித உரிமைப் பேரவையிலேயே இலங்கை சம்பந்தமான ஒரு பிரகடனத் தீர்மானம் கொண்டுவரவிருப்பதாக 2012 பெப்ரவரி மாதம் கொழும்புக்கு விஜயம் செய்த பிரதி இராஜாங்க செயலாளர் மரியா ஓட்டேரா மூலமாகவும் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் பிளேக் மூலமாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவித்தனர்

2012 மார்ச் மாதத்தில் அமெரிக்க அரசாங்கத்தின் முயற்சியாலும் பிரித்தானியா, கனடா, மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அழுத்தத்தினாலும் இலங்கை சம்பந்தமான பிரகடனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதில் இலங்கை அரசாங்கத்தினுடைய கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் படியாகவே பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. அதன் பின் அதே விடயத்தை கூடுதலாக வலியுறுத்தி இரண்டாவது தீர்மானம் ஒன்று 2013 மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானங்களில் சொல்லப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திடமே விடப்பட்டிருந்தது.

மேற்படி காலகட்டத்தில் இலங்கைக்கு கூடுதலான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றிற்கு கட்டளையிட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றவர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க 2014 மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைப் பேரவை உயர்ஸ்தானிகர் முன்னெடுக்கின்ற சர்வதேச விசாரணையொன்றும் நிறைவேற்றப்பட்டது.  

அத்தருணத்தில் அத்தீர்மானம் பிரயோஜனம் அற்றதென்றும் அதில் சர்வதேச விசாரணை இல்லை என்றும் சில தமிழ்த் தரப்புக்களே பிரச்சாரங்களை முன்னெடுத்து அத்தீர்மானப் பிரதிகளை ஜெனீவாவில் எரித்து அதைத் தடுக்க முற்பட்டதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். அப்படியாக பிரயோஜனமற்ற தீர்மானம் என்று சொன்னவர்களே அவ்வருட இறுதியில் இலங்கை அரசாங்கம் அத்தீர்மானத்தின் படி செயற்படவில்லை என்று குற்றம் சாட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடைபெற்ற சர்வதேச விசாரணையில் ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தி பல சாட்சியங்களை உரிய முறையிலே அளித்திருந்தார்கள்.

2015 ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மேற்சொன்ன சர்வதேச விசாரணை அறிக்கையின்  திகதி வெளியீடு தாமதிக்கப்பட்டு அவ்வாண்டு செப்டெம்பர் 16ம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 30வது அமர்வுகளில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2015 ஒக்டோபர் 1ம் திகதி இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவிற்கின்ற HRC 30/1 என்ற தீர்மானம் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் மூலம் இலங்கை பொறுப்பெடுத்துக்கொண்ட பல விடயங்கள் பிரதான உறுப்பு நாடுகளோடு பேச்சுவார்த்தை மூலம் இணங்கப்பட்ட போது அப்பேச்சுவார்த்தைகளிலும் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்தியிருந்தது.

மேற்சொன்ன தீர்மானத்தில் இலங்கை தான் செய்வதாக பொறுப்பேற்ற விடயங்களை நிரல்படுத்தினால் 36 வாக்குறுதிகளை இலங்கை வழங்கியிருக்கிறது என்று சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் சம்பந்தமாக வெளிநாட்டு நீதிபதிகள்,  வழக்கறிஞர்கள், விசாரணையாளர்கள், வழக்குத்தொடுனர்கள ;பங்கேற்கும் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையொன்றும் இவ்வாக்குறுதிகளில் அடங்கும்.

அதைவிட, உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் மீள்நிகழாமைக்கான ஆணைக்குழு; காணாமல் போனோர் அலுவலகம்; பாதிப்புக்கான ஈடுசெய்யும் அலுவலகம்; பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை நீக்கி சர்வதேச நியமங்களுடன் ஒத்துப்போகும் புதிய சட்டமொன்றை இயற்றுதல்; காணாமலாக்கப்படுவதை குற்றமாக்குதல்; பாலியல் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள் சம்பந்தமான அறிக்கைகளை விசாரித்தல்; பாதிப்புற்றோர் மற்றும் சாட்சிகளுக்கான பாதுகாப்புச் சட்டம், பொதுமக்களின் விவகாரங்களிலிருந்து இராணுவத் தலையீட்டை நீக்குதல்; இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல்; வாழ்வாதாரங்களைக் கட்டியெழுப்புதல்; இராணுவமயமாக்களை இல்லாதொழித்தல் மற்றும் புதிய அரசியலமைப்பு மூலமாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றை ஏற்படுதல் போன்ற வேறு பல முக்கிய விடயங்களும் அடங்கும். 

2015 மார்ச் மாதத்தில் இவற்றை இலங்கை அரசு நிறைவேற்றுவதில் துரித முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் மேற்சொன்ன வாக்குறுதிகள் அனைவற்றையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் இரண்டு வருட காலத்துக்கு அதற்கான சர்வதேச மேற்பார்வையை நீடித்தும்  HRC 30/1 என்ற தீர்மானம் மீண்டும் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டது. 

இந்த மார்ச் மாதத்துடன் (2018) இல் இவ்விரண்டு வருட கால சார்வதேச மேற்பார்வையின் முதலாவது வருடம் பூர்த்தியாகின்றது. ஜெனீவாவில் பொறுப்புக்கூறவேண்டிய  கட்டுப்பாட்டின் காரணமாக ஓரிரு விடயங்களை செய்ய இலங்கை அரசாங்கம் தலைப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒன்றையுமே சரிவர செய்யவில்லை என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

இம்முறை வெளிவந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையும் இதையே சுட்டிக்காட்டி சர்வதேச குற்றங்கள் சம்பந்தமாக உறுப்பு நாடுகள் உலகளாவிய நியாயாதிக்கத்தையும் உபயோகிக்க வேண்டும் என்றும் கோரியிருக்கின்றார். அதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கின்றது. மிகுதி ஒரு வருட காலத்துக்குள் இலங்கை பொறுப்பெடுத்துக்கொண்ட அனைத்து விடயங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு ஆகும். 

தாமாக முன்வந்து இணை அனுசரணை வழங்கிய ஐநா தீர்மானத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற விடயத்தில் இலங்கை அரசாங்கம் மிகவும் தாமதமாக செயற்படுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆழ்ந்த கரிசனைகள் உண்டு. பல இடங்களில் ஏன் அரசாங்கத்தின் உயர் தலைவர்களிடம் நேரடியாகவும் நாடாளுமன்றில் அனைவர் முன்நிலையிலும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கடுமையான விமர்சனங்களையும் அதிருப்தியையும் இது தொடர்பாக வெளிப்படுத்தியுள்ளது.  

மனித உரிமைகள் பேரவையில் 2009ம் ஆண்டில் இருந்த இலங்கைக்கு ஆதரவான நிலையில் இருந்து பார்க்கின்றபோது அதற்கு பின்னர் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களே உண்மையில் பெரும் சாதனைகள் என்றால் மிகையல்ல! இந்த தீர்மானங்கள் தாம் இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச மேற்பார்வைக்கு வழிகோலின.

இலங்கையில் இதுவரையில் காணப்பட்ட முன்னேற்றங்கள் சர்வதேச மேற்பார்வை அழுத்தத்தினாலேயே சாத்தியமானது. எதற்கெடுத்தாலும் குறைகூறுகின்றவர்கள் இலங்கையில் ஒன்றுமே நடக்கவில்லை என குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களால் இலங்கையில் என்ன நடைபெற்றது என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர். 

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை அடுத்து ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பான அரசியல் களநிலையை பார்க்கின்ற போதும் இனவாதத்தின் பாரதூரத்தன்மையைப் பார்க்கின்றபோதும் ஐக்கிய நர்டுகள் தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்கள் என்ன என்பதை சாதாரண மக்களாலும் விளங்கிக்கொள்ளமுடியும். 

இருந்தபோதும் தேர்தல் பின்னடைவைக் காரணம் காட்டித்தப்பிக்க இடமளிக்காது ஐநா தீர்மானத்தில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற கடுமையான அழுத்தத்தை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் வழங்கப்படவேண்டும் என இம்முறை ஜெனிவா அமர்வுகள் ஆரம்பமாக முன்னரே ஜெனிவாவிற்கு சென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்ததை நினைவில் நிறுத்த விரும்புகின்றேன். இந்த தீர்மானத்திலுள்ள 36 முக்கிய விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை மீண்டும் மீண்டும் கூறியிருக்கின்றோம். 

இலங்கை அரசாங்கம் ஐநா தீர்மானத்தை நிறைவேற்றத்தவறிவிட்டதால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அன்றேல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்தவேண்டும் என தமிழர் தரப்பில் சில கட்சிகள் அமைப்புக்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது. ஆனால் யதார்த்தத்தில் இருந்து தமிழ் மக்களை திசைதிருப்பிவிடாது உண்மையோடு பயணிக்கவே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எப்போதும் செயற்படுகின்றது.

பல்லாயிரம் மக்கள் கொன்றொழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சிரியா பிரச்சனைக்கு முடிவைக்காண்பதற்கு, நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்வராத ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஆயுதப் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட இலங்கை மீது கவனம் செலுத்துமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

அதனால் தான் ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கவேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியிருந்தது. 

இலங்கையில் ஐநா தீர்மானத்தை நிறைவேற்ற உலக நியாயாதிக்கத்தை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆராயவேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வரவேற்றிருந்தது. இலங்கையில் எந்தவகையிலேனும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்ககொடுத்து நீதியின் அடித்தளத்தில் சுபீட்சப் பாதையை நோக்கி நகர்வதற்கு எந்தெந்த வழிமுறைகள் யதார்த்தத்தில் சாத்தியமாகுமோ அவை அனைத்தையும் பயன்படுத்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ந்தும் அழுத்திக் குரல்கொடுக்கும்.”  

என அந்தப்பத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.