Mar 14

பெரியார் சிலை அகற்றப்படும் என்று பேசிய விவகாரம் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு தாக்கல்

பெரியார் சிலை அகற்றப்படும் என்று எச்.ராஜா பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்கு தொடருமாறு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு விழுப்புரம் எஸ்பி மற்றும் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 தமிழகத்தில் வன்முறையை தூண்டி விட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார். அந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், எச்.ராஜா மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயரட்சகன் மனுத்தாக்கல் செய்தார். 

மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இரு பிரிவினரிடையே வன்முறையை, விரோதத்தை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் என்று வாதிட்டார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் விழுப்புரம் எஸ்பி மற்றும் கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.