Mar 13

தேர்தல் முடிவுகளோடு சம்பந்தனின் தீர்வுக் கனவு கனலானது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி பெற்ற வாக்குகளை விட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் அதிகமாகும்.

அத்தோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வாக்குகளோடு ஒப்பிடும் போது, தற்போது அவரது அணி பெற்றுள்ள வாக்குகள் குறைவாகும். ஆகவே, புதிய அரசியலமைப்பினை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்…” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி மஹிந்த ராஜபக்ஷ தலைமையேற்றிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெருவெற்றி பெற்றிருக்கின்றது. உண்மையில் இந்த உள்ளூராட்சித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ தரப்பு, சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை மீளப்பெறுவதற்காகவே எதிர்கொண்டது.

குறிப்பாக, தேர்தல் முடிவுகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடுத்த நிலையை பிடிப்பதற்காகவே திட்டமிட்டுச் செயலாற்றியது. ஆனால், தேர்தல் முடிவுகள், ஐக்கிய தேசியக் கட்சியைத் தாண்டியும் 13 இலட்சம் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பெற்றிருக்கின்ற நிலை என்பது, தென்னிலங்கையில் தற்போதையை அரசாங்கத்திற்கான மதிப்பு எப்படியிருக்கின்றது என்பதைக் காட்டி நிற்கின்றது.

அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சி பெற்ற வாக்குகள் வெறும் 15 இலட்சம் வாக்குகளாகும்.

இது, மஹிந்த ராஜபக்ஷ தரப்பு பெற்ற 50 இலட்சம் வாக்குகளோடு ஒப்பிடும் போது மிகமிகச் சொற்பமாகும். அப்படியான நிலையில், கட்சிக்கு வெளியிலிருந்தே சுதந்திரக் கட்சியை மஹிந்த ராஜபக்ஷவினால் கபளீகரம் செய்ய முடிந்திருக்கின்றது. அவ்வாறான நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் முடிவுகளுக்காக சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களோ, சிரேஷ்ட உறுப்பினர்களோ காத்திருக்கப் போவதில்லை. அதனால், நல்லாட்சி அரசாங்கமும் நடுவழியில் தடம்புரளப் போகின்றது.

ஜனாதிபதித் பதவி இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவடைந்தால், அதன்பின்னர், சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பது சார்ந்த சிக்கலையும் மைத்திரிபால சிறிசேன எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறான நிலையில், அவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்போடு மிகப்பலவீனமான நிலையில் விட்டுக்கொடுப்புக்களோடு இணக்கப்பாட்டுக்குச் செல்ல வேண்டியேற்படும். அது, எந்த வகையிலும் புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதற்கான தருணங்களை வழங்காது.

ஏனெனில், இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தென்னிலங்கை பூராகவும் இரண்டு விடயங்களை முன்னிறுத்தியே பிரசாரங்களை முன்னெடுத்தது. அதில், முதலாவது, மத்திய வங்கி பிணைமுறை மோசடி. இரண்டாவது, புதிய அரசியலமைப்பினூடு வடக்கு- கிழக்கிற்கு சமஷ்டியை நல்லாட்சி அரசாங்கம் வழங்கப்போகின்றது என்பது.

தேர்தல் முடிவுகளில் அவர்களின் பிரசாரம் பிரதிபலித்திருக்கின்ற நிலையில், புதிய அரசியலமைப்பொன்றை நோக்கி, குறிப்பாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு மாற்றத்துக்கு சுதந்திரக் கட்சி மாத்திரமல்ல, ஐக்கிய தேசியக் கட்சியும் செல்லுவதற்கு தயாராக இருக்காது. ஏனெனில், அவ்வாறான முயற்சிகள் எதிர்வரும் ஆண்டுகளில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலும், அதன்பின்னரான ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலிலும் பாரிய தோல்வியை வழங்கும் என்ற காரணத்தினாலாகும்.

அவ்வாறான நிலையில், புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும் என்கிற சம்பந்தனின் வேண்டுகோளை யாருமே கவனிக்கப் போவதில்லை. அவரின், அரசியல் வாழ்வின் இறுதிக்காலக் குறிக்கோளான தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைப் பெறுதல் என்பது நிறைவேறாத ஒன்றாக மாறுவதற்கான கட்டங்களை இந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் பதிவு செய்து சென்றிருக்கின்றது