Mar 10

அமேசானில் பிரத்யேகமாக அறிமுகமாகும் சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2018-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் நிறைவுறாத நிலையில் சியோமி தனது மூன்றாவது ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களை சியோமி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சியோமி நிறுவன நிர்வாக இயக்குனர் மற்றும் சர்வதேச துணை தலைவர் மனு குமார் ஜெயின் ட்விட்டரில் புதிய ஸ்மார்ட்போனின் டீசர் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில் வெளியீடு குறித்து அதிகப்படியான தகவல்கள் வெளியாகவில்லை.

அமேசான் வலைத்தளத்தில் புதிய ஸ்மார்ட்போனிற்கான பிரத்யேக வலைப்பக்கம் திறக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைத்தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அமேசான் வலைத்தளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு மார்ச் 14-ம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அளித்திருக்கும் பதில்களின் அடிப்படையில் மெல்லிய ஸ்மார்ட்போன் வேண்டுமென 8-இல் ஐந்து பேர் பதில் அளித்திருக்கின்றனர், பத்தில் ஐந்து பேர் வேகமான ஸ்மார்ட்போன் வேண்டுமென பதில் அளித்திருக்கின்றனர். அந்த வகையில் சியோமி ஏற்கனவே ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்ட நிலையில், ரெட்மி 5 ஸ்மார்ட்போன் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், அட்ரினோ 506 கிராஃபிக்ஸ் சிப்செட், 5.7 இன்ச் ஸ்கிரீன் ஹெச்.டி. ஸ்கிரீன், 2 ஜிபி / 3 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.