Mar 09

நீ தான் உனக்கு ஒளி உனக்கு உளி!

வி தைக்கப்பட்ட விதை மண்ணை பிளந்து முளைத்து வெளிவந்தால் அது விருட்சத்தின் முதல் படி. அது சோம்பி ,மண்ணை பிளக்க போராடாமல் இருந்தால் அழுகி சுவடின்றியே போகும். விருட்சமாகும் ஒரு விதைக்கு கூட போராட்டம் தேவைப்படும் போது காலத்தில் பல்வேறு கலாசார மற்றும் பண்பாடு சமூக கட்டுமான, ஆணாதிக்க… காரணிகளால் ஒடுக்கப்பட்ட பெண்கள் விதையென விழிக்கா விட்டால் ஒருபோதும் விருட்சமாக முடியாது. இந்திய பெண்கள் வரலாற்றில் விழிப்புக்கான ஆவணங்கள் அநேகம் உண்டு.

சில உதாரணங்கள்...

சம்பத் பால் தேவி- போராட்டமான விழிப்பு, பூலான் தேவி- நெகட்டிவ்வான விழிப்பு, சின்னப்பிள்ளை-வணங்கத்தக்க விழிப்பு,இந்திராகாந்தி -வியக்கதக்க விழிப்பு, தில்லையாடி வள்ளியம்மை- மாற்றத்துக்கான விழிப்பு. இப்படி பெண் சமூகத்துக்கு கவுரவம் சேர்த்த, பெருமை சேர்த்த, பெரும் பாய்ச்சலை உருவாக்கிய பெண்களை நினைவு கூறுவதும் அவர்களின் வழியில் போராட, வாழ எத்தனிப்பதும் பெண்களுக்காக பெண்கள் உறுதிமொழியேற்பதும்தான் மகளிர் தின கொண்டாட்டத்தின் நோக்கம்.

விழிப்புக்கு என்ன பஞ்சம்

பெண்ணே, இந்த நவீன தொழில் நுட்பகாலத்தில் நான் விழிப்போடு தான் இருக்கேன் என்று சொன்னால் உனக்கு ஒரு சபாஷ். ஆயினும் எனது தனியார் துப்பறியும் அனுபவத்தில் நான் சந்தித்த சில வழக்குகளில் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் ஏமாற்ற வாய்ப்பு இருந்தது என்பதை பற்றி சிறு குறிப்பு வரைகிறேன்.நீயே உன்னை டிக் (இப்படி எல்லாம் என்னை ஏமாற்ற முடியாது என )செய்து கொள்..

1. அதீதமான காதலின் நம்பிக்கையால் திருமணத்துக்கு முன் கட்டி பிடித்து போட்டோக்கள் எடுத்துக்கொண்டு, ஒரு கட்டத்தில் உறவும் கொண்டு தவிர்க்க முடியாத, எதிர்பாராத சூழலில் பிரிய நேரிடும் போது, அதே அன்பான காதலன் ஆதாரங்களுடன் மிரட்டும் போது அகப்பட்டு விழித்த பெண்.

2. ஜாதி, மதம்,பணம், வேலை, ஜாதகம் எல்லாம் பொருத்தம் பார்த்து நிச்சயம் ஆனபின் மணமகனுக்கு தீரா நோய் இருப்பதை கண்டுபிடித்து கல்யாணத்தை சாதுர்யமாய் நிறுத்திய பெண்.

3. சொந்தபந்தங்களுக்கு தெரியாமல் காதலித்தவளை திருமணம் செய்து மறைத்து வாழ்ந்து வரும் ஒருவன், சமூகத்தில் உறவுகளுக்காக முறையாக திருமணம் செய்ய முற்பட்ட போது, தான் சட்டப்படி இரண்டாவது மனைவியாவதை கண்டறிந்த பெண்.

4. இன்னொரு பெண்ணுடனான தொடர்பை மறைக்க, தொடர்ந்து டார்ச்சர் செய்து சண்டை போட துாண்டி, மன நோய் வந்து விட்டது; பைத்தியம் பிடித்து விட்டது என அற்புதமாக கதை கட்ட வைத்து, அக்கம் பக்கத்தை நம்ப வைத்த ஆணிடம் வாழும் பெண்.

5.-ஆண்மையற்றவனிடம் பொம்மையாக வாழ்ந்து, அவனிடமிருந்து வெளியேற விரும்பினாலும் சொந்த கணவனே தன்னை நிர்வாணப்படம் எடுத்து வைத்து, நீ என்னை விட்டு போனால் உன் மானத்தை இணையத்தில் வாங்குவேன் என மிரட்டும் ஆணிடம் மாட்டிக்கொண்டு விழிக்கும் பெண்.

6. மைத்துனியை அடைய வேண்டி மனைவியின் மீது களங்கம் கற்பித்து, விவாகரத்து வழக்கு போட்டு, சுற்றுசூழலில் அசிங்கமாக்குவேன் என மிரட்டும் சபல கணவனுடன் வாழும் பெண்.

7. தான் செய்த தப்பை மறைக்க, அல்லது கண்டுகொள்ளாமல் விட, மனைவியின் காதலன் பேரில் மொட்டைக்கடிதம் எழுதி சொந்த மனைவிக்கே போட்டு டார்ச்சர் செய்து தப்பித்துக்கொள்ளும் புருஷனுடன் வாழும் பெண்.

8.கல்யாணத்துக்கு செலவு செய்தாச்சு; சொத்தில் பங்கு இல்லை என ஏமாற்றும் அண்ணன் தம்பியுடன் போராடும் பெண்.

9. காதலித்தவனிடம் ஓடி போய் எங்கு இருக்கிறாள் என அறியாமல் மகளை தேடிக்கொண்டு இருக்கும் அம்மா வாகிய பெண்.இப்படியாக நான் பார்த்த, நான் தீர்த்த ஒரு டஜன் பாதிப்புகளை உதாரணமாக சொன்னாலும், இன்னும் பல டஜன் அவமானங்களை, சிக்கல்களை, சோகங்களை சொல்லமுடியும்.

வெளியில் இருந்துதோழியே உன் துயரை துடைக்க உன் இருட்டை கழுவ, உன் விலங்கை நீக்க வெளியே இருந்து யாரும், எந்த தலைவனும் எந்த வீரனும் வரப்போவதில்லை. நீதான் உனக்கு ஒளி. நீதான் உனக்கு உளி. நீதான் மீட்பவள்..அடுத்தவனை சார்ந்தே இருக்காதே..விழிப்பாய்இரு. என்ன செய்யலாம் கல்வியை கைப்பற்று. சுயமாய் பொருளாதாரத்தில் நிற்க முயல். தற்காப்பு கலையை பயில். 

சட்டம்தெரிந்து கொள். துணிவை சேமித்து வை. புத்தியில் இருந்து அச்சம் அகற்று. தோல்வி வந்தாலும் தொடர்ந்து போராடு. எல்லையில் நிற்கும் ஒரு ராணுவ வீரனை போல் எப்போதும் விழிப்போடு இரு. போலியான சமூக கவுரவம் உதறு. நுாறு சதவிதம் உன்னை இழக்கும்படி யாரையும் நம்பாதே. இறக்கும் வரை உனக்கு பிடிக்காவிட்டாலும் உனக்கான காற்றை நீ சுவாசித்து தான் ஆக வேண்டும். ஆணாதிக்க உலகில் உன் இருப்பை உன் வெற்றியை, உன் நீதியை பெற நீயும் போராடிக்கொண்டே தான் இருக்க வேண்டும். இது உன் மகிழ்ச்சிக்கானது அல்ல.நாளைய பெண்களின் விடியலுக்கானது. 

இது தான் என் டிடெக்டிவ் அனுபவத்திலிருந்து மகளிருக்கு நான் சொல்லும் சேதி. தவறாக இருந்தால் வா வாதிடலாம். நம்மை நாம் சரிப்படுத்தி கொள்ள. சரியாக இருந்தால் வா... ஒன்றாக போராடி ஜெயிக்கலாம்.

- யாஸ்மின்

துப்பறிவாளர், கோவை

73730 77007.