Mar 09

மெசன்ஜர் லைட் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்

ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ஒருவழியாக வழங்கப்பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எந்நேரமும் தொடர்பு கொள்ளும் படி புதிய அம்சம் அமைந்திருக்கிறது.

மெசன்ஜர் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக வீடியோ காலிங் இருந்து வந்த நிலையில், நேரடியாக முகம் பார்த்து பேசும் வசதி மெசன்ஜர் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு மெசன்ஜர் செயலியில் 1700 கோடி வீடியோ சாட்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.

இது 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகம் ஆகும். அந்த வகையில் லைட் பயனர்களுக்கு இதே போன்ற வசதியை வழங்க மெசன்ஜர் லைட் செயலியிலும் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் செயலியில் குறுந்தகவல், புகைப்படம், லின்க் மற்றும் ஆடியோ கால் போன்ற அம்சங்கள் இதுவரை பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பிளே ஸ்டோரில் வெறும் 10 எம்பி அளவு கொண்ட மெசன்ஜர் லைட் செயலியில் இத்தனை அம்சங்களை ஃபேஸ்புக் சீராக வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆடியோ கால் அம்சத்தில் இருந்து வீடியோ கால் மேற்கொள்ளும் வசதியை தற்சமயம் வழங்குகிறது. இதனை இயக்க வலது புறத்தில் இருக்கும் வீடியோ ஐகானை கிளிக் செய்தால் போதுமானது.

படிப்படியாக வழங்கப்படும் புதிய அப்டேட் வரும் நாட்களில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக புதிய அப்டேட் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்படுகிறது.