Mar 11

ஜெனீவா இராஜதந்திரச் சமரும் கூட்டமைப்பின் அரசியல் சமரும் - சஞ்ஞையன் -

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமா இல்லையா என்பதும், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதா இல்லையா என்பதும்தான் இன்று அங்கு இடம்பெறும் வாதம். மறுபுறத்தில் கால நீடிப்பு வழங்கக்கூடாது என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கூட்டமைப்பு எம்.பி.க்கள் எத்தனை பேர் கையொப்பமிட்டார்கள் என்பது உள்நாட்டில் வாதப் பொருளாகியிருக்கின்றது. கூட்டமைப்பின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை இப்போது வாதப் பொருளாக்கியிருக்கின்றார். கூட்டமைப்பின் இந்த உள்ளக அரசியல் சமரால் ஜெனீவா இராஜதந்திரச் சமரின் முக்கியத்துவம் குறைந்துவிடுமா என்ற கேள்வி அனைத்துத் தரப்பினரிடமும் எழுந்திருக்கின்றது. ஜெனீவாவில் பொறுப்புறக்கூறல் தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், கூட்டமைப்புத் தலைமையின் நிலைப்பாடு அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கா?

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் இலங்கையில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும், போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழக்கும் சிறப்பு நீதிப்பொறிமுறையை உருவாக்குவதில், அக்கறை காண்பிக்கப்படவில்லை என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்  மார்ச் 22ஆம் திகதி பேரவையில் சமர்ப்பிப்பதற்காக தயாரித்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு மேலும் இரு வருட காலக்கெடுவைப் பெற்றுக்கொள்ளும் இலக்குடன் காய்நகர்த்தும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஆணையாளரின் இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றுதான். எதனையுமே செய்யாமல் சர்வதேசத்தின் பார்வையிலிருந்து தப்பித்துவிட முடியும் என்ற இலங்கை அரசின் நம்பிக்கைக்கு விழுந்துள்ள ஒரு மரண அடியாகவே ஆணையாளரின் இந்த அறிக்கை அமைந்திருக்கின்றது.

அரசாங்கத்திற்கு 17 மாதங்களுக்கு முன்னர்  முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும் ஆணையாளர் தனது அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை. போர்க்குற்ற விசாரணைகளை திருப்திகரமாக முன்னெடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை காண முடியவில்லை. போருக்குப் பிந்திய நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை அரசின் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை. இலங்கை அரசு வகுத்ததாக கூறப்படும் திட்டங்கள் முழுமைப்படாத நிலையை உணர்த்துகிறது என ஆணையாளர் தன்னுடைய குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே செல்கின்றார். கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் வெற்றிபெற்றாலும், நெருக்கடிகளிலிருந்து மீள்வது அவ்வளவு இலகுவானதாக இருக்கப்போவதில்லை என்பதை ஆணையாளரின் அறிக்கை உணர்த்துகின்றது.

ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பமாகும் காலப்பகுதியில் சர்வதேசத்தைக் கவர்வதற்காக சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்வது வழமை. அது போல இப்போதும் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. காணிவிடுவிப்பு, அரசியலமைப்புத் திருத்தம் என சில செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது சிங்களக் கடும் போக்காளர்களை அவை சீற்றமடையச் செய்வதாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும், அரசாங்கம் அவதானமாக இருக்க முற்படுகின்றது. அதனால், எதனையுமே செய்ய முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுவிடுகின்றது.

வடக்கில் நில மீட்பக்காகத் தொடரும் போராட்டங்களும், காணாமல்போன உறவுகளுக்காக நடத்தப்படும் அறவழிப்போராட்டங்களும் அரசாங்கத்தின் இயலாமையின் வெளிப்பாடுதான். ஜெனீவாவில் கொடுக்கும் வாக்குறுதிகள் எதனையும் களத்தில் செயற்படுத்த முடியாத அல்லது விரும்பாத நிலையில் அரசாங்கம் இருப்பதன் காரணம் இதுதான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, புதிய அரசின் மீது சர்வதேச அழுத்தங்கள் இருக்காது என்ற ஒரு எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டது. அதற்காக, முன்னைய அரசின் பாதையிலேயே இந்த அரசும் செல்வதை சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்பதைத்தான் ஜெனீவாவில் இடம்பெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

மனித உரிமைகள் ஆணையாளர் பல விடயங்களையிட்டும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றார். குறிப்பாக, சித்திரவதைகள் மிக மிக மோசமாகத் தொடர்கின்றன, அராஜகம் புரிவோர் சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான நிலை தொடாகின்றது. போர்க் குற்றங்களைக் கையாள்வதில் அக்கறையற்ற நிலை, நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலை, ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீட்டை நீக்குதல் போன்ற பல விடயங்களையிட்டும் இலங்கை அரசின் மீது தனது கண்டனக் கணைகளைத் தொடுத்திருக்கின்றார் ஆணையாளர். இலங்கை அரசின் இந்த அக்கறையற்ற நிலைகாரணமாக சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்திருக்கின்றார். நிரந்தர அலுவலகம் ஒன்றை இலங்கையில் ஐ.நா. அமைக்க வேண்டும். கலப்பு நீதிமன்றத்துக்கான சட்டமூலம் வேண்டும்,  விஷேட அறிக்கையாளரை அழைக்க வேண்டும் என்பன இந்தப் பரிந்துரைகளில் முக்கியமானவை. 
 
ஏற்கனவே கால அவகாசத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கை அரசாங்கம், அந்தக் காலப் பகுதிக்குள் எதனையும் செய்யவில்லை என்பதை சர்வதேசம் புரிந்துகொண்டிருப்பதைத்தான் ஆணையாளரின் அறிக்கை உணர்த்துகின்றது. அதேவேளையில், இனிமேலும் நம்பிக்கை வைக்கும் நிலையில் மனித உரிமைகள் பேரவை இல்லை என்பதையே அதன் பரிந்துரைகள் வெளிப்படுத்துகின்றன. அனைத்துச் செயற்பாடுகளும் ஐ.நா.வின் கண்காணிப்புடன் இடம்பெறவேண்டும் என ஆணையாளர் தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆணையாளரின் அறிக்கை உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட பின்னர் அது குறித்த விவாதம் ஒன்று அன்றைய தினமே இடம்பெறும்.

இறுதியில் இலங்கை குறித்த தீர்மானம் கொண்டுவரப்படும். 23 ஆம் திகதி அமெரிக்காவின் ஆதரவுடன் பிரித்தானியாவால் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்தத் தீர்மானம் இலங்கைக்கு மேலும் காலக்கெடுவை வழங்குவற்கானதாக இருக்கும். தன்மீதான நம்பகத் தன்மையை வெளிப்படுத்த இலங்கை அரசாங்கமும் இதற்கு இணை அனுசரணையை வழங்கும். ஏற்கனவே இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்தைத்தான் இலங்கை நடைமுறைப்படுத்தவில்லை என்பதுடன், அதற்கு எதிராகவும் செயற்படுகின்றது. உதாரணமாக, கலப்பு நீதிப்பொறிமுறையை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசு முன்னெடுத்துவருகின்றது.
 
இந்த நிலையில்தான் இலங்கை தொடர்பாக வரப்போகும் தீர்மானம் மேலும் கடுமையானதாகவும், காத்திரமானதாகவும் அமைய வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியிருக்கின்றன. நல்லிணக்கம், நீதி, மறுசீரமைப்பு வாக்குறுதிகள் உண்மையாவதற்கு இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவா பணிப்பாளர் ஜோன் பிஷர், இலங்கை அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வரையில் அனைத்துலக கண்காணிப்பு தொடருவதை உறுதிப்படுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், உறுதியான- காத்திரமான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மைதன் அவ்வாறான தீர்மானம் ஒன்று வராத நிலையில் மீண்டும் கொடுக்கப்படவுள்ள காலக்கெடுவை பிரச்சினைகளை மேலும் நீர்த்துப்போகச் செய்வதற்கே இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளும். இதுதான் இலங்கை அரசின் வழமை.

இந்த வழமையைத் தெரிந்துகொண்டும் கூட்டமைப்பின் தலைமை எதற்காக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது?