Mar 08

இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகக் கனடியத் தமிழர் கண்டனம்

இலங்கையில் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் முஸ்லீம் மக்களைக் குறிவைத்து வன்முறைக்  கும்பல்களினால் தூண்டப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை கனடிய தமிழர் பேரவை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த சில வாரங்களில், முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் தொழுகைத் தலங்கள் திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டுள்ளன. 

"சிறிலங்காவின் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லீம் சமூகத்தைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் இவ் வன்முறைகள் கனடியத் தமிழர்களை ஆழ்ந்த துயருக்குள்ளாக்கியிருக்கிறது" என்று கனடியத் தமிழர் பேரவையின் தலைவர் மருத்துவ கலாநிதி வடிவேலு சாந்தகுமார் அவர்கள் கூறினார்.

"தீவிரவாத வன்முறைகள்  மற்றும் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டில் வாழும் அனைத்து முஸ்லீம் மக்களையும் பாதுகாக்க சிறீலங்கா அரசு காத்திரமான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்"  என்று பேரவையின் நிர்வாக உறுப்பினர் திரு டான்ரன் துரைராஜா அவர்கள் குறிப்பிட்டார்.  "முஸ்லீம் மக்களின் மீது தற்போது மேற்கொள்ளப்படும் வன்முறைகளின்போது அந் நாட்டின் குடிகளைப் பாதுகாப்பதிலும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதிலும் அரசு செயற்படாத பட்சத்தில்  அது அந்த வன்முறையையும் காழ்ப்புணர்வையும் அனுமதிப்பதோடு மட்டுமல்லாது  ஊக்குவிக்கிறது என்பதாகவுமே பார்க்கப்படும்". 

இவ் வன்முறைகள் மேலும் பரவலடையாது உடனடியாகத் தடுத்து நிறுத்துவதோடு அதைத்  தூண்டுபவர்கள் மற்றும் மேற்கொள்பவர்களின் மீது சிறீலங்கா அரசு துரிதமாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கனடிய தமிழர் பேரவை கேட்டுக் கொள்கிறது.

இதர இன, மதச் சமூகங்களின் மீதான இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகளை  முடிவுக்கு கொண்டுவறுவதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென வற்புறுத்தி  சிறீலங்கா அரசின் மீது  கனடிய அரசாங்கம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டுமெனவும் கனடிய தமிழர் பேரவை மேலும் கேட்டுக் கொள்கிறது.