Mar 06

4 நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் 4 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை இந்தியா வருகிறார். மனைவி மேரி கிளாட் மெக்ரானுடன் டெல்லி வரும் அவர், திங்கள் கிழமை வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

பிரான்ஸ் தொழில் அதிபர்கள், அமைச்சக அதிகாரிகள் பலரும் உடன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் மெக்ரான் இந்தியா வருவதாகவும், இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம், அரசியல் உறவுகளை மேம்படுத்தும் விதமாக மெக்ரானின் வருகை அமையும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் 121 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச சூரிய ஒளி உற்பத்தி கூட்டமைப்பின் மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்கின்றனர். மெக்ரானின் வருகையின் போது அணு சக்தி ஒத்துழைப்பு, கடல் சார் ஒத்துழைப்பு, விண்வெளி, ஆற்றல் சார் துறைகள், தீவிரவாதம், பருவநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணத்தின் இறுதி நாளன்று மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசி செல்லும் மெக்ரான், மிர்சாபூரில் உள்ள 75 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி உற்பத்தி உலையை தொடங்கி வைக்கிறார். பிரான்ஸ் அதிபராக பதவியேற்ற பின் இம்மானுவேல் மெக்ரான் முதன் முறையாக இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.