Mar 05

எமது மக்கள் பாவப்பட்டவர்கள்! உணர்ச்சி அரசியலைக் கைவிட்டு அவர்களது இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வையுங்கள்! நக்கீரன்

யாழ்ப்பாணத்தில் கடந்த டிசெம்பர் 19 நடந்த  தமிழ் மக்கள் பேரவையின் ஓராண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய தமிழ் மக்கள்  பேரவையின் (தமபே) இணைத் தலைவரும் வட மாகாண சபையின் முதலமைச்சரும் ஆன  சி.வி.விக்னேஸ்வரன் "தமிழ் மக்களின் குரல்களாக ஓங்கி ஒலிக்காது, எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளத் தயாராக இருந்த தமிழ் தலைமைகளை விழித்துக்கொள்ளவும், தன்னம்பிக்கையுடன் செயற்படவும் தமிழ் மக்கள் பேரவையே காரணமாக அமைந்தது"  என்று மார்தட்டியுள்ளார். இந்தப் பேச்சு மொட்டந்தலைச்சி தலைமயிரை சிலுப்பிக்காட்டுவது போன்று அமைந்திருந்தது.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பார்கள்.  விக்னேஸ்வரனின் கண்களுக்கு தமபே  பொன் குஞ்சாகத் தெரிவதில் தப்பில்லை.  முந்தி வந்த காதை பிந்திவந்த செவி மறைத்தது போல  நேற்று  அரசியலுக்கு வந்த விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (தபேகூ) தலைமைக்கு பாடம் எடுக்கப் பார்க்கிறார்.  ஒருவிதத்தில்   அது அவர் குற்றமில்லை.  போருக்குப் பின்னர் 2013 ஆம் ஆண்டு சித்தம் போக்கு சிவன் போக்கு என்று கொழும்பில் இருந்தவரை அரசியலுக்கு கொண்டுவந்தது ததேகூ இன் பிழை. வட கிழக்கு மக்களின் வேட்கைகள், போருக்குப் பின்னர் அவர்கள் அனுபவித்த  அவலங்கள், அல்லல்கள் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.  பட்டிக்காட்டான் பட்டணத்தை பார்த்த கதையாக எல்லாமே அவருக்குப் புதிதாக இருக்கிறது. "நான் அரசியலுக்குப் புதிது. அரசியல் அனுபவமுள்ள மாவை சேனாதிராக போன்றவர்கள் என்னை வழி நடத்த வேண்டும்" என்று சொன்னதை  பதவியும் பவுசும் வந்ததும் வசதியாக மறந்துவிட்டார்.

"‘அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்’ என்றிருந்த சூழலை மாற்றி ‘இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் எம்மைப் புறக்கணித்து விடுவார்கள்’ என்று கூறக்கூடிய சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது தமிழ் மக்கள் பேரவை" என்கிறார் விக்னேஸ்வரன். ஏன் சொல்ல மாட்டார்? எந்தத் தலைமையை அவர் வசைபாடுகிறாரோ அந்தத் தலைமைதான் அவருக்கு  இந்த முதலமைச்சர் பதவியை  பெற்றுக்  கொடுத்தது. ஆனால் "தேர்தலில் மக்கள் எனக்குத்தான் வாக்குப் போட்டர்கள். எனது சொந்த செல்வாக்குக் காரணமாகத்தான் தேர்தலில் வென்று முதலமைச்சர் ஆனேன். ததேகூ இன் செல்வாக்கால் நான் வெல்லவில்லை" என்கிறார் விக்னேஸ்வரன்.  இதைத்தான் சொல்வது ஏறிய ஏணியை எட்டித் தள்ளுவது,   உண்ட வீட்டுக்கு  இரண்டகம் செய்வது என்று.

"போரின் பின்னர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் குரல்கள் சில காலம் ஓங்கி ஒலிக்கத் தவறிவிட்டன. போரில் தோற்று விட்டோமே நாம் எப்படி எமது உரிமைகளைக் கேட்க முடியும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மைக்கு அவர்கள் ஆளாகியிருந்தார்களோ நானறியேன்" பராபரமே என ஒப்பாரி வைக்கிறார் விக்னேஸ்வரன்.

விக்னேஸ்வரன் அரசியலுக்கு  வந்தது 2013 இல்.  அதற்கு முன் ததேகூ 2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2011  இடம்பெற்ற உள்ளாட்சி தேர்தல், 2012 இல் நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றைச் சந்தித்தது. இந்தத் தேர்தல்களில் மட்டுமல்ல 2013 இல் நடந்த வட மாகாண சபைத் தேர்தல் மீண்டும் 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் போன்றவற்றில் ததேகூ ஒரே கோட்பாட்டையும் ஒரே கொள்கையையும்தான் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றது. அரசாங்கம் எதைத் தந்தாலும் பருவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள் என்று ததேகூ எந்தக் காலத்திலும்  நினைத்ததில்லை. நினைக்கவும் மாட்டாது.

2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ததேகூ கடுமையான நெருக்கடிக்கு மத்தியில்  சந்தித்தது. இருந்தும் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களில் ததேகூ போட்டியிட்டு  மொத்தம் 233,190 (2.90 விழுக்காடு) வாக்குகளைப் பெற்று 14  இடங்களைக் கைப்பற்றியது.

தேர்தல் நடந்த காலப்பகுதியில் இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் வீடு வாசல் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தடுப்பு முகாம்களில் முட்கம்பி வேலிக்குள் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர். பதினோராயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள்  புனர்வாழ்வு என்ற போர்வையில் முகாம்களில்   தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பல்லாயிரக் கணக்கான  வாக்காளர்களுக்கு   அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை.

அப்போது  இராஜபக்சேயின் காட்டாச்சி நடந்த காலம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றி மிதப்பில்  சனாதிபதி இராஜபக்சா இருந்தார். இராணுவம் மற்றும் அரச இயந்திரம் ஒட்டுக் குழுவான இபிடிபிக்கு ஆதரவாக செயல்பட்டது.  ததேகூ இன் சார்பில் போட்டியிட வேடபாளர்களை தெரிவுசெய்வதே கடினமாக இருந்தது. மக்களிடம் சென்று  வாக்குக் கேட்பது அதைவிடக் கடினமாக இருந்தது.

கடும் போட்டி நிலவிய  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 23.33 விழுக்காடு வாக்காளர்களே வாக்களித்திருந்தார்கள்.  வன்னியில் 43.89 விழுக்காடு வாக்களித்திருந்தார்கள்.  அப்படி இருந்தும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில்  65,119 வாக்குகளைப் (43.85விழுக்காடு) பெற்று 5 இருக்கைகளை ததேகூ கைப்பற்றியது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் 41,673 வாக்குகளைப் (38.89 விழுக்காடு)  பெற்று 3 இருக்கைகளை கைப்பற்றியது. அன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் இந்த வெற்றி  பெருவெற்றி என்பதை யாராலும் மறுக்க  முடியாது.

2010 இல் நடந்த தேர்தலில் விக்னேஸ்வரனின்  தமிழ் மக்கள் பேரவையில் முக்கிய பங்கு வகிக்கும் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக்கு என்ன நடந்தது? அது ஒரு சோகக் கதை.   2010 மார்ச்சு மாதத்தில் ததேகூ இல் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமதேமு  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வெறுமனே 6,362 (4.18 விழுக்காடு) வாக்குகள் பெற்று கட்டுக்காசை இழந்தது. அதே போல் திருகோணமலையில் சம்பந்தனைத் தோற்கடிக்கப் போவதாக சூளுரைத்து களத்தில் இறங்கிய  கஜேந்திரகுமார் கட்சி வெறுமனே 1,182 வாக்குகள் (0.85 விழுக்காடு) பெற்று கட்டுக் காசை இழந்தது. திருகோணமலையில் தமிழ்மக்களது வாக்குகளைப் பிரித்தால் தமிழ்மக்களுக்கு பிரதிநித்துவம் இல்லாது போய்விடும்  என்பதுபற்றி கஜேந்திரகுமார் துளியும் கவலைப்படவில்லை.   2015 இல் நடந்த தேர்தலிலும் ததேமமு தமிழ் மக்களால்  முற்றாக நிராகரிக்கப்பட்டது. மூக்கறுக்கப்பட்டது. போட்டியிட்ட   தேர்தல் தொகுதிகள் அத்தனையிலும் அந்தக் கட்சி கட்டுக்காசை இழந்தது. 

கஜேந்திரகுமாரின் படுதோல்விக்குக் காரணம் அவர் கேட்பார் புத்தி கேட்டபடியால்தான். 2009 போர் முடிந்த பின்னர் ததேகூ சுதந்திரமாக செயல்படத் தொடங்கியது. இது வன்னியின் எச்சங்களுக்குப் பிடிக்கவில்லை. குடுமி தொடர்ந்து தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். எனவேதான் ததேகூக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற வீராப்பில் கஜேந்திரகுமாருக்கு தலைப்பாக்கட்டி பப்பாசி மரத்தில் ஏற்றினார்கள். கஜேந்திரகுமார் ததேகூ உடைத்துக்கு கொண்டு வெளியே வந்ததற்கு இந்த எச்சங்கள்தான் காரணம்.   உண்மையில் ததேகூ இல் கஜேந்திரகுமாருக்கு  நல்ல மதிப்பு இருந்தது. சம்பந்தர் கஜேந்திரகுமாரோடு நெருக்கமாக இருந்தார். தன்னைவிட  சம்பந்தர் கஜேந்திரகுமாரோடு நெருக்கமாக இருப்பதையிட்டு  மறைந்த இரவிராஜ் அவர்களுக்கு ஆதங்கம் இருந்தது. கஜேந்திரகுமார் தொடர்ந்து ததேகூ இல் இருந்திருந்தால் அவர்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். ஆனால் கெடுகுடி  சொல்கேட்கவில்லை.

2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வன்னியின் எச்சங்கள்  கஜேந்திரகுமாரையும் அவரது கட்சியையும் வெல்லவைக்க தலைகீழாக நின்றார்கள். மாற்றத்தின் குரல் அதுயிது  என்று மேடைகளில்  முழங்கினார்கள். இலட்சக் கணக்கில் பணம் சேர்த்து அனுப்பினார்கள்.  இதனைக் குறிப்பிடுவதற்கு காரணம் கஜேந்திரகுமார்   தமபே இன்  தலைவர்களில் ஒருவர்!

விக்னேஸ்வரன் சொல்வது போல் ததேகூ  இராணுவத்திற்குப் பயந்து, அரசாங்கத்திற்குப் பயந்து, காவல்துறைக்குப் பயந்து ததேகூ தேர்தலில் இருந்து ஒதுங்கவில்லை.  ததேகூ இன் தலைமை இராணுவம், காவல்துறை, அரசாங்கத்துக்கு பயந்திருந்தால் 2010 இல் நடந்த தேர்தலை தவிர்த்திருக்கும். படையினரிடம் இருந்து வந்த அச்சுறுத்தல்களை, தலையீடுகளை உதாரணம் காட்டி ஒதுங்கியிருக்கும்.  மக்களும்  வாக்களிக்காமல் ஒதுங்கியிருப்பார்கள்.

2015 சனவரியில் நடந்த சனாதிபதி தேர்தலில் மயித்திரிபால சிறிசேனாவை ஆதரித்து அவரை வெல்ல வைத்த காரணத்தாலேயே இன்று அரசியல் செய்வதற்கான இடைவெளி உருவாகியுள்ளது. இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் பேரளவு சுதந்திரமாக நடமாட முடிகிறது. இராணுவத் தளபதிகளை அழைத்து மாலை மரியாதை செய்ய வேண்டியதில்லை. இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்பிற்குப் பிறகு, ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாகத்தான் காணிகள் ஓரளவு விடுவிக்கப்பட்டுள்ளன.

ஆனால் சனாதிபதி  தேர்தலில் கஜேந்திரகுமாரின் நிலைப்பாடென்ன? தேர்தலைப் புறக்கணிக்குமாறு கேட்டார். சிறிசேனா - இராஜபச்சா பெயர்தான் வித்தியாசம்  மற்றப்படி இருவரும் ஒருவரே என்றார்.  இரண்டு பேரது கொள்கையம் தமிழ்மக்களை அழிப்பதுதான்.  அப்படிப்பட்ட ஒரு ஆட்சிமாற்றம் தமிழ் மக்களுக்கு தேவையில்லை என்ற கஜேந்திரகுமார் விதண்டாவாதம் பேசினார்.ஆதோடு நிற்காமல் "‘பாமர (தமிழ்) மக்களுக்கு’ பூகோள அரசியலில் தமிழர் தம் வாக்கின் வலிமையைப் பற்றிப் பாடம் சொல்லிக் கொடுத்து அவர்களை சனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்யவில்லை" என்று ததேகூ இன் தலைமையை கடிந்து கொண்டார்.

உண்மையைச் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பேரவை என்பது தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள், நாடாளுமன்றப் பதவிக்கு பல்லிளித்தவர்கள், மேடைக்கு ஆசைப்பட்டவர்கள்  போன்றோரால் உருவாக்கப்பட்ட  கூடாரம் ஆகும்.

தமிழர்களது அரசியல்  வரலாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குத் தெரியாது. தெரிந்திருக்கவும் நியாயமில்லை. அவர் ஓய்வு பெற்ற பின்னர் சித்தம் போக்கு சிவன் போக்கு என்றிருந்த காலம். பல நோய்கள் பீடித்து  சிறையிலேயே  சிவலோகம் போன பாலியல் சாமியார் பிரேமானந்தாவுக்கு மாங்குளத்தில் கோயில் கட்டி குடமுழுக்கு நடத்திய காலம்.    இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஒருவனுக்கு  கோயில் கட்டி குடமுழுக்கு செய்தவர் பற்றி அறிவு நாணயம் உடையவர்கள் என்ன நினைப்பார்கள்?

கடந்த 14-03-2015 அன்று இந்தியப் பிரதமர் மோடிக்கு வட மாகாண சபையின் கடிதத் தலைப்பில் விக்னேஸ்வரன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நால்வரையும் விடுதலை செய்யுமாறு விக்னேஸ்வரன்  அனுப்பிய  கடிதம்  இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்தது என Times of India   செய்தி வெளியிட்டது.

அரசியலைப் பொறுத்தளவில் நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் போன்றவர் விக்னேஸ்வரன். தனது வாழ்நாளில் 3 ஆண்டுகள்தான்  அரசியலில் ஈடுபட்டுள்ளார். அப்படிப்பட்டவர் அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட ததேகூ இன் தலைமையை கண்டபடி விமர்ச்சிக்கக் கூடாது. அந்தத் தகுதி அவருக்கு இல்லை.

ததேகூ நடந்து முடிந்த அனைத்துத்  தேர்தர்களிலும் தனது நீண்ட தேர்தல் அறிக்கைகளில் அரசியல் தீர்வு தொடர்பான  நிலைப்பாடு என்னவென்பதை விளக்கியுள்ளது.  2010 இல் நடந்த தேர்தல் அறிக்கை பின்வருமாறு.  

இந்த நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட இரு இனங்கள் பகிரப்பட்ட இறையாண்மையூடாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமானதென சில குறிப்பான அரசியல் சாசன விதிமுறைகளும் கொள்கைகளும் அவசியம் என்று கருதுகின்றது.

கீழே தரப்படும் அதிகாரப் பகிரலுக்கான முக்கிய அம்சங்கள் நீடிய சமாதானத்திற்கும் இலங்கையின் அனைத்து மக்களின் மேம்பாட்டிற்கும் அபிவிருத்திக்கும் மிக அடிப்படையானவை:

• தமிழ் மக்கள் ஓர் தனித்துவமான தேசிய இனம். அவர்கள் இலங்கைத் தீவில், சிங்கள மக்களுடனும், ஏனையோருடனும் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

• தொடர்ச்சியான வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாற்று பூர்வமான வாழ்விடமாகும்.

• தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

• அதிகாரப் பங்கீடானது இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்தில், சமஷ்டி கட்டமைப்பின் அடிப்படையில் நிறுவப்படவேண்டும். இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.

• அதிகாரப் பங்கீடானது நிலம், சட்டம் ஒழுங்கு, கல்வி, சுகாதாரம் உட்பட சமூக, பொருளாதார அபிவிருத்தி, வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்களையும் கொண்டதாக இருக்க வேண்டும்.

ததேகூ இன் தேர்தல் அறிக்கையில்  இப்போது திரு சம்பந்தனை விமர்ச்சித்துக் கொண்டு திரியும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக கையெழுத்திட்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில்  மூன்று தலை கழுதை மாதிரி விக்னேஸ்வரன் நடுநிலமை வகிப்பதாகச் சொன்னார். அப்படிச் சொன்னாலும் மறைமுகமாக  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அறிக்கைகள் மூலம் ஆதரவு தெரிவித்தார். ஆனால் மக்கள் விக்னேஸ்வரனின் வேண்டுகோளை முற்றாக நிராகரித்தார்கள்.

தமிழ்மக்கள் பேரவை உருவாகியபின்தான்  ‘அரசாங்கம் எது தந்தாலும் பரவாயில்லை, எம் மக்கள் நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வார்கள்’ என்றிருந்த சூழலை மாற்றி ‘இது தந்தால்த்தான் எம்மக்கள் வரவேற்பார்கள், இல்லையேல் எம்மைப் புறக்கணித்து விடுவார்கள்’ என்று கூறக்கூடிய சிந்தனை மாற்றங்களை உருவாக்கியுள்ளது  என்பது கட்டுக்கதை. விக்னேஸ்வரனின் கற்பனை.  விக்னேஸ்வரனைப் போலல்லாது எமது தமிழ்த் தலைவர்கள்  எத்தனையோ தேர்தல்களையும்  அரசியல் நெருக்கடிகளையும் சந்தித்தவர்கள்.  எப்படி ததேமமு  பிரித்தானிய தமிழர் ஒன்றியம், அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவை (ICET)  போன்ற  அமைப்புக்களின் பினாமி அமைப்போ அதுமாதிரியே இந்த தமிழ் மக்கள் பேரவையும்  இந்த புலம்பெயர் அமைப்புக்களின் பினாமி அமைப்பு.

2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின்  சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு  அறிக்கைகள் விட்டன. "புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் உறவுகளே, ஊரில் உள்ள உங்கள் உறவுகளுடன் விரைவாகக் தொடர்புகொண்டு, சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்கூறுங்கள். புலம்பெயர் தேசத்தில் செயற்படும் ஏனைய அமைப்புகளையும் இந்த பரப்புரை பணியில் இணைந்து கொள்ளுமாறு சகோதரத்துவத்துடன் அழைக்கிறோம்". 

விக்னேஸ்வரன் போலல்லாது எமது மக்கள் தெளிவான சிந்தனையோடு இருக்கிறார்கள். அரசியலில் எது சாத்தியம் எது சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

2015  சனவரியில் இல் நடந்த சனாதிபதி தேர்தலில் ததேகூ எடுத்த சாணக்கிய முடிவின் காரணமாகவே மகிந்த இராஜபக்சா தோற்கடிக்கப்பட்டு சனாதிபதி சிறிசேனா ஆட்சிக்கு வந்தார். மயித்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது என ததேகூ எடுத்த முடிவை கஜேந்திரகுமார் எள்ளி நகையாடினார்.  இராஜபக்சாவும் சிறிசேனாவும் ஒன்று பெயர்தான் வித்தியாசம் என்றார். அதோடு நிற்காமல் தேர்தலை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இப்படிப்பட்ட அரசியல் ஞானிகள்தான் தமிழ்மக்கள் பேரவையில் இடம் பெற்றுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் ததேகூ எதையும் விட்டுக் கொடுக்காது தனது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து பிறழாமல் ஐக்கிய தேசிய  அரசுக்கு தனது ஆதரவை வெளியில் இருந்து கொடுத்துவருகிறது. இந்த அரசு ஒரு புதிய யாப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  யாப்பை உருவாக்கும் தேசிய அவையின் குழுக்களில் ததேகூ இன் உறுப்பினர்கள் தமிழ்மக்களுக்கு வழங்க வேண்டிய அரசியல் உரிமைகள் பற்றி பேசியிருக்கிறார்கள். வருகிற சனவரி 8 ஆம் நாள் 6 குழுக்களின் அறிக்கைகள் மீது வழிகாட்டல் குழு  விவாதம் நடைபெற இருக்கிறது.

அந்தக் குழுவில் ததேகூ தமிழ்மக்களுக்குரிய தீர்வு பற்றி பேசுவோம். இந்த அரசோடு  நாம் மோத விரும்பவில்லை. முரண்பட விரும்பவில்லை. போருக்குப் பின்னர் பேரம் பேசும் சக்தியை இழந்துவிட்ட நாம்  அமெரிக்கா, இந்தியா போன்ற நேச நாடுகளின் ஆதரவோடுதான்  இனச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.  நாம் கடும்போக்கை கைக்கொண்டால் உலக  நாடுகளின் ஆதரவை இழக்க நேரிடும்.  இலங்கை இரு தேசங்களின் கூட்டு என்ற கோட்பாட்டை  வற்புறுத்தினால் உலகநாடுகளோ, பன்னாட்டு  சமூகமோ  எமக்குக் கிட்டவும் நெருங்கியும் வராது. அதனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது.

தமிழ்மக்கள்  30 ஆண்டுகள் சாத்வீக வழிகளில் போராடி வெற்றிபெறவில்லை. 30 ஆண்டுகள் ஆயுதம் எடுத்துப் போராடியும் வெற்றி பெறவில்லை.  எனவே நாம் இராஜதந்திர நகர்வுகளின் மூலமே எமது இலக்கை அடைய முடியும் என நம்புகிறோம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் போல பிரதமரைப் பார்த்து "உன்னைத் தெரியாதா? 45 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு பிரதமர் ஆகிவிட்டாய். உனது கட்சியை எனக்குத் தெரியாதா? அது மாமன் - மருமகன் கடசி"  என்று மேடையில் ஆவேசமாகப் பேசுவது கேட்க சிலருக்கு இனிமையாக இருக்கலாம் ஆனால் அது இராஜதந்திரம் அறவே இல்லாத  பேய்த்தனமான வெட்டிப் பேச்சு.

பொறுத்திருக்கும் காலத்தில்  நாம் அமைதியாக இருக்க வேண்டும். ஒரு கொக்கு தன் இரைக்காகக் காலங்கருதி சிறுதும் அசைவில்லாமல் வாடியிருப்பது போல் இருக்க வேண்டும். வாய்ப்பு வந்தவுடன் அந்தக் கொக்கு நறுக்கென்று மீனைக் கொத்திக் கொள்வதைப் போல் தவறாமல்  செய்து முடிக்க வேண்டும்.  ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதால் கெடுவான். செய்யத்தக்க செயல்களைச் செய்யாமையானும் கெடுவான்.  தன் வலியில்லாதவனுக்கு இரண்டு   பகைகள் இருந்தால் அதில் ஒரு பகையோடு நட்புப்பாராட்டி மற்றப் பகையை வெல்ல வேண்டும். இதற்குப் பெயர்தான் இராஜதந்திரம்!

வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சொல்லக் கூடிய அறிவுரை என்னவென்றால் கஜேந்திரகுமாருக்கு தலைப்பாக் கட்டி பப்பாசி மரத்தில் ஏற்றிய அதே புலி அமைப்புக்கள்   இன்று  அவரையும் அதே பப்பா மரத்தில் ஏற்றிவைத்துள்ளன.

விக்னேஸ்வரன் மேடைகளுக்கும்  மாலைகளுக்கும் பொன்னாடைகளுக்கும் அலைந்து திரியாமல் வட மாகாண சபையின் நிருவாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  பேச்சைக் குறைத்து செயலைக்  கூட்ட வேண்டும்.    

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல மாகாண சபைக்கு இருக்கிற அதிகாரங்களைப் பயன்படுத்தி போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீள்கட்டியெழுப்பப்  பாடுபட வேண்டும். ஊழலை ஒழித்து நல்லாட்சி நடத்த வேண்டும்.  எமது மக்கள் பாவப்பட்ட வர்கள்.  ஆரவார  உணர்ச்சி அரசியல் நடத்தாமல் அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும்.