May 18

இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்று ஆட்டத்தில் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), 29-ம் நிலை வீரர் பாபி போக்னினியை (இத்தாலி) சந்தித்தார். இதில் ஆன்டி முர்ரே 2-6, 4-6 என்ற நேர்செட்டில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கடந்த 10 ஆட்டங்களில் ஆன்டி முர்ரே 5-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் செர்பியா வீரர் ஜோகோவிச் 7-6 (7-2), 6-2 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று வீரர் அல்ஜாஸ் பெடேனேவை (இங்கிலாந்து) தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் மரின் சிலிச் (குரோஷியா), நிஷிகோரி (ஜப்பான்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி கண்டனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஊக்க மருந்து தடையில் இருந்து மீண்டு வந்த ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா, குரோஷிய வீராங்கனை மிர்ஜனா லூசிச் பரோனியை சந்தித்தார்.

இதில் ஷரபோவா 4-6, 6-3, 2-0 என்ற கணக்கில் இருந்த போது தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டு வெளியேறினார். இதனால் மிர்ஜனா 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீராங்கனை லாரா சிக்முன்ட்டை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இதற்கிடையில் பாரிசில் வருகிற 28-ந் தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் போட்டியில் ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ (நேரடியாக தகுதி) வழங்க பிரான்ஸ் டென்னிஸ் சங்கம் மறுத்துள்ளது. ஊக்க மருந்தில் சிக்கி தண்டனை குறைக்கப்பட்ட ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ வாய்ப்பு அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷரபோவா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், ‘எனக்கு மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் எனது சொந்த லட்சியத்தை எட்டுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. இதுபோல் பல பிரச்சினைகளை நான் எதிர்கொண்டு மீண்டு வந்து இருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.