May 18

குடிவரவுத் தடுப்புக்காவல் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம்

நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவாளர்களைக்  காலவரையறையின்றித் தடுப்புக்காவலில்  தடுத்துவைத்தல் கனேடிய அரசியலமைப்பிற்கு முரணானது எனவும், இது முற்றாக மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் கனேடிய மத்திய அரச நீதிமன்றம் ஒன்று அண்மையில் தெரிவித்துள்ளது.

கனேடிய எல்லைக் காவல் துறையினர், கனடாவிற்குள்  அனுமதிக்கப்பட முடியாத மற்றும் ஆபத்தானவர்களாகக் கருதப்படும் ஆயிரக்கணக்கானவர்களை, ஒவ்வொரு வருடமும் குடிவரவுத் தடுப்புக்காவலில் இடுகின்றனர்.

சராசரியாக ஒருவர்  குடிவரவுத் தடுப்புக்காவலில் வைக்கப்படும் காலம் 3 வாரங்களே ஆகும். ஆயினும் பலரது தடுப்புக்காவல் பல மாதங்கள் நீடிக்கின்றன.

தடுப்புக்காவலில் உள்ளோர் தமது குடியுரிமை தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாமையால் அவர்களது தாய்நாடுகள் இவர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. இதன் காரணமாக இவர்களது நாடுகடத்தல் பிற்போடப்படுவதனால் இவர்கள் குடிவரவுத் தடுபுக்காவலில் வாடுகின்றனர்.

இவ்வருட ஆரம்பத்தில் குடிவரவுத் தடுப்புக்காவல் தொடர்பான விதிமுறைகளை மீளாய்வு செய்வதாக அரசு உறுதி அளித்திருந்தபோதும், இன்றுவரை அர்த்தமுள்ள எந்த மாற்றங்களும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.