May 18

கனேடிய அரச திணைக்களங்களைச் சாடும் கனேடியக் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை

மோசடி மற்றும் ஊழல் ஆகியவற்றில் இருந்து வரியிறுப்போரை முறையாகப் பாதுகாக்கத் தவறியமைக்காக, பல மத்திய அரசின் திணைக்களங்கள் அண்மையில் வெளியிடப்பட்ட அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கண்டனத்துக்குள்ளாகி உள்ளன.

மத்திய அரசின் திணைக்களங்களான நிதித்துறை, கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA), பிரதமரின் அலுவலகம் (Privy Council Office ) ஆகியவற்றின் செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் தேவை என அரச கணக்காய்வாளர் நாயகம் மைக்கேல் பேர்குசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் (CBSA), வரிவிதிப்பு இல்லாமல் பாற்பொருட்கள் மற்றும் இறைச்சிவகைகள் ஆகியவற்றைக் கனடாவினுள் அனுமதிப்பதாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக  எல்லைக் காவல் உத்தியோகத்தர்கள் மற்றும்  அதிகாரிகள் (border guards and staff) ஆகியோர் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாக உள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தைக் கையாளும் கனேடிய அரச திணைக்களமான தொழில்வாய்பு மற்றும் சமூக அபிவிருத்தி திணைக்களத்தின் செயற்பாடுகள் முறையாக இல்லை எனவும், வெளிநாட்டுப் பணியாளர்களை வேலைக்கமர்த்த முன்னதாகக், கனேடியத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் குறைபாடுகள் காணப்படுவதாகவும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.