Mar 01

கனடா பிரதமரின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்குஇந்தியாவுக்கு அனுமதி மறுப்பு: ஊடகத் தகவலால் பரபரப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்கு இந்திய அரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்திகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். முன்னதாக, டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க செல்லவில்லை.

இது, இரு நாட்டு ஊகடகங்களிலும் முக்கியச் செய்திகளாக வெளியாகின. கனடாவில் இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருப்பதால்தான், அவரை பிரதமர் மோடி வரவேற்க செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் உள்ளிட்ட எந்த பிரிவினைவாத அமைப்புக்கும் கனடா ஆதரவளிக்காது என்று தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் ட்ரூடோ - மோடி சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சூழ்நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்வதற்கு முன்பு, டெல்லியில் உள்ள கனடா தூதரகத்தில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில், கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அந்த அழைப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தபோதிலும், கனடா பிரதமரின் விருந்தினர் பட்டியலில் இருந்த ஜஸ்பால் அத்வாலுக்கு இந்திய அரசு விசா வழங்கியது ஏன்? என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பின. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கனடாவின் சிடிவி நியூஸ் என்ற தொலைக்காட்சியில் நேற்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது.

அதில், கனடா பிரதமரின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்கு அந்நாட்டில் உள்ள இந்திய அரசு அதிகாரிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கனடா அரசின் இந்த நடவடிக்கையானது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.