Feb 26

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத குளிரை சந்திக்க போகும் சுவிஸ்

சுவிட்சர்லாந்து நாட்டில் கடுமையான குளிர் வாட்டி வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிரும் கடும் பனிப்பொழிவும் இருக்கும் என வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் பகல் நேரங்களில் வெப்பநிலை -5 டிகிரி-க்கும் குறைவாகவும் இரவு நேரங்களில் வெப்பநிலை -10-க்கும் குறைவாகவும் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சமயத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் வரை உயரம் உள்ள பகுதிகளில் வெப்பநிலையானது - 15 டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.வரும் ஞாயிறு முதல் ரஷ்யாவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு ஆர்க்டிக் பகுதி காற்று அதிகளவில் வீசத் தொடங்கும்.

எனவே அன்று முதல் கடுங்குளிரும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது காற்றின் வேகம் மணிக்கு சராசரியாக 30-50 கிமீ வரை வீசும். இதனால் வெப்பநிலை -20 டிகிரிக்கும் குறைவாக உள்ளது போன்ற உணர்வு ஏற்படும்.

கடந்த 2012ம் ஆண்டு இருந்த கடுங்குளிர் போன்று தான் இதுவும் இருக்கும் என்றாலும் அப்போது தொடர்ச்சியாக இரண்டு வாரத்துக்கு மேல் குளிர் நீடித்ததைப் போல் இல்லாமல் குறைந்தது 5 தினங்களுக்கு மட்டுமே குளிர் இருக்கும் என்பது சற்று ஆறுதல் அளிக்கும் தகவலாகும்.கடந்த இரண்டு நாட்களாகவே சுவிட்சர்லாந்தில் -0 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகிவருவதும் குறிப்பிடத்தக்கது.