May 17

உக்ரைன் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ரஷ்யாவினால் முடக்கம்

உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரஷென்கோவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம், ரஷ்யாவினால் திட்டமிட்ட வகையில் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் மிகவும் பிரபலமாக விளங்கிய ரஷ்யாவின் மிகப்பெரிய சமூக ஊடக வலைத்தளங்கள், உக்ரைன் ஜனாதிபதியின் ஆணையின் பேரில் தடைசெய்யப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்த இணைய தாக்குதலுடன் ரஷ்யா தொடர்புபட்டிருப்பதற்கான உரிய ஆதாரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

அத்துடன், உக்ரைனின் இக்குற்றச்சாட்டு தொடர்பில் ரஷ்ய தரப்பிலும் இதுவரை எவ்வித மறுப்பு கருத்துகளும் வெளியாகவில்லை.

எனினும், மேற்படி இணைய தாக்குதல் குறித்த அறிவிப்பு வெளியாகிய சில மணிநேரத்திற்குள் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தற்போது இணையத்தளம் வழமைப்போல் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.