May 17

ரெடியான பிரியங்கா சோப்ரா; ரசிகர்களை கவர ‘குவான்டிகோ’ 3வது சீசன் விரைவில்

 பிரியங்கா சோப்ரா நடிப்பில் ‘குவான்டிகோ’ 3வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் பிரியங்கா சோப்ரா, அமெரிக்காவின் பிரபல தொடரான ’குவான்டிகோவில்’ நடித்தார். அதன் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார்.

முதல் பாகத்தைத் தொடர்ந்து, 2வது பாகம் உருவாக்கப்பட்டது. குவான்டிகோ தொடரின் மூலம் சர்வதேச விழாக்களுக்கு சிறப்பு தொகுப்பாளர், விருந்தினராக பங்கேற்கும் அளவிற்கு பிரியங்கா சோப்ரா உயர்ந்தார். அதன் தொடர்ச்சியாக ஹாலிவுட் நடிகர் ’தி ராக்’ உடன் ‘பே வாட்ச்’ என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார்.

விரைவில் திரைக்கு வரவுள்ள அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குவான்டிகோ தொடர் ரசிகரளிடையே பெருமளவு வரவேற்பை பெறவில்லை.அதனால் 2வது சீசனுடன் தொடர் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் ’குவான்டிகோ’ தொடரின் 3வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக பிரியங்கா தனது டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

3வது சீசனில் 13 எபிசோடில் மட்டுமே இடம்பெறும் என்றும், முந்தைய பாகங்களைப் போல் அல்லாமல் ரசிகர்களை கவரும் வண்ணம் திரைக்கதை உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ’குவான்டிகோ’ தொடர் இந்தியர்களை பெரிதும் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.