May 16

அதிரடி சோதனையில் சிக்கினார் சிதம்பரம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரின் மகன் கார்த்தி வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனையில்    ஈடுபட்டது.

 

இதன்போது கார்த்தியை அவரது  வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

சென்னையில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின்  வீடு, அலுவலகங்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடைபெற்றது.


காலை 6 மணி முதல் சோதனை நடைபெற்றது. 9 பேர் கொண்ட குழு இவ் சோதனையில்  ஈடுபட்டது. சிவகங்கையில் உள்ள சிதம்பரத்தின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

 

இதேபோல டில்லியிலும்  நொய்டாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் சி.பி.ஐ. சோதனை இடம்பெற்றுள்ளது.

 

வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு இருந்த தொடர்பின் அடிப்படையில் வருமான வரி சோதனை  நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

சென்னை நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது. வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு அழைத்து சென்று இவ் விசாரணையை சி.பி.ஐ. மேற்கொண்டது.  

 

ஏற்கனவே அமுலாக்கத்துறை சோதனை தொடர்ந்து தற்போது சி.பி.ஐ. சோதனை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஏற்கனவே கார்த்திக் சிதம்பரத்தின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பங்குச் சந்தைகளில் முறைகேடு மற்றும் வெளிநாடுகளில் கோடிக்கணக்கான பண முதலீடு உள்ளிட்ட பல்வேறு புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமுலாக்கத்துறை அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

 

இதில் ஒரு வணிக நிறுவனத்திற்கும் இவருக்கும் இடையே கோடிக்கணக்கான ரூபா பணபரிவத்தனைகள் முதலீடு செயவதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

 

இந்த அடிப்படையில் மேலும் சில ஆவணங்களை கைப்பற்றுவதற்காக அமுலாக்கத்துறை சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது.இதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெற்றது.

 

முன்னதாக நுங்கம்பாக்கம் வீட்டில் கார்த்திக் சிதம்பரத்திடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியது.  இதையடுத்து மேலும் விசாரணை நடத்துவதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு கார்த்திக் சிதம்பரத்தை அழைத்து சென்று சிபிஐ விசாரணை நடத்தியது.