Feb 19

அடுத்து என்ன?. தேர்தல் முடிவுகள்பற்றிய ஆய்வுக் கண்ணோட்டம்.

21-09-2017 ல் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை வெளியிட்டு நாடாளுமன்றத்தில் விவாதங்களை நடத்தியபின் தொடர்ந்து உடனே நாடுதழுவிய அனைத்து உள்ளூராட்சிச் சபைகளுக்குமான தேர்தலை அறிவித்து 10-02-2018ல் அவை நடந்து முடிந்துள்ளன. இன்று அந்த முடிவுகளை ஒவ்வொருவரும் தத்தமக்குத் தேவையான விதமாக வியாக்கியானம் செய்கிறார்கள். உண்மை என்ன?. 

நடந்தது உள்ளூராட்சித் தேர்தல். புதிய தேர்தல் முறைப்படி நடந்தது. கட்சி அடிப்படையில் நடந்தது. மூன்று வருடம் வரை கூட்டாக  நல்லாட்சி நடத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும், மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டணியும் கணிசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன. உதவியாய் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது நிலையில் இருந்து சற்று பின்தள்ளப்பட்டுள்ளது. புதிதாய் மகிந்தவால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி யாரும் எதிர்பாராத வண்ணம் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

இது எப்படி?. ஏன் ?.

முன்பு 5 % ற்கு குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் நிராகரிக்கப் பட்டு கட்டுக்காசையும் இழப்பர். ஆனால் இம்முறை உதாரணமாக யாழ் மாநகரசபையை எடுத்துக்கொண்டால் 3.67 % வாக்குகளோடு சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும் 2.66 % வாக்குகளோடு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன. முன்னர் வழங்கப்பட்டதுபோல் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு போனஸ் ஆசனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. முன்னெப்போதும் இல்லாதவாறு வடக்கு கிழக்கில் தென்னிலங்கைக் கட்சிகள் பல ஆசனங்களை பெற்றிருக்கின்றன. இப்படியாக அனைத்துக் கட்சிகளும் சுயேச்சைகளும் ஆசனங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளதால் அநேகமான சபைகளில் யாருமே அரசமைக்க முடியாத தொங்குநிலை ஏற்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட  49  சபைகளில் 38 சபைகளில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்று தமிழ்மக்களின் பலமான குரலாகத் தொடருகின்றார்கள். வடக்கு கிழக்கில் தமிழ்க் கட்சிகளான கூட்டமைப்பு 62 %, காங்கிரஸ் 13 %, ஈழ மக்கள் ஜனநாயகம் 11 %, தமிழர் ஐக்கிய முன்னணி 9 1/2 %, விடுதலைப் புலிகள் 4 1/2 % ஆன வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.   

2015ல் ரணிலும் மைத்திரியும் சேர்ந்து சிறுபான்மையினரின் பேராதரவுடன்தான் மகிந்தவை தோற்கடிக்க முடிந்தது. பின்னர் அதே ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் ரணில்,  மகிந்த தரப்பை விட சிறிதளவுதான் கூடுதலாகப் பெற முடிந்தது. அதாவது பதவி இழந்த பின்னரும் கூட மகிந்தவின் செல்வாக்கு அதிகம் குறையவில்லை.  மனித சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி, நீதியான நிர்வாகம், தனிமனித அல்லது குடும்ப ஆதிக்கமற்ற ஜனநாயகப் பண்புகள், ஊடக சுதந்திரம், என்று பலவற்றை நல்லாட்சி அரசு   நடைமுறைப் படுத்தி மக்களை நிம்மதியாக வாழ வழிவகுத்துள்ளது உண்மைதான். ஆனால் மக்கள் போராட்ட காலத்தில் தாம் இருந்த நிலைமையை மறக்கவில்லை.  அப்படி ஒரு நிலை மீண்டும் வரவே கூடாது என்பது  அவர்களின் அடிமனதில் ஊறிப்போன ஒன்று. தமிழ் மக்கள் மீண்டும் பலம் பெற்று நாட்டைப் பிரித்து விடுவார்களோ என்ற பயம் சிங்கள மக்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த நிலைமையைத் தடுப்பதற்காக அவர்கள் மகிந்த போன்றோரின் கொடிய ஆட்சியைக்கூட தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்பதையே தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

நல்லாட்சியில் உள்ளவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மகிந்த எமது நாட்டுக்கு விட்டுச் சென்ற வானுயர்ந்த கடன் சுமைகளை, யுத்த அழிவுகளைச் சமாளித்து மக்களுக்கு முடிந்தவரை நன்மைகளை செய்யவேண்டிய பாரிய சுமையைச் சுமந்துகொண்டு  சென்றார்களே தவிர தமது செயற்பாடுகளின் சவால்களை, உண்மைத் தன்மையை, விபரங்களை மக்களுக்கு கொண்டுசென்று சேர்ப்பிப்பதில் கவனம் செலுத்தவில்லை.  பாரிய நிதிபலம் கொண்ட,  ஆனால் செயற்பாடுகள், பொறுப்புகள் எதுவுமே இல்லாத,  மகிந்த தரப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பாளரும் தமது அனைத்து வழங்களையும் பயன்படுத்தி தமது விசமத்தனமான உச்சக்கட்டமான பொய்ப்பிரச்சாரங்களால் சிங்கள மக்களை அரசிடமிருந்தும் தமிழ் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்தும் அந்நியப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நல்லாட்சியை வீழ்த்துவதில் மகிந்த தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பாளரும் கைகோர்த்துச் செயற்படுகின்றார்கள். மகிந்த இனவாதம் இல்லாதவர் என்றே சொல்லத் தொடங்கியுள்ளனர். புதிய அரசியல் அமைப்புப் பணிகளை உருவாக்குவதில் ஒருபகுதியினர் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே நேரம்,  இடைக்கால அறிக்கையை வெளியிட முன்னர் இன்னொரு பகுதியினர்;  நாட்டின் சுபீட்ஷத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் எமது நாட்டை சிங்கப்பூர் போலவோ மேற்குலக நாடுகளைப் போலவோ கட்டியெழுப்புவதற்கும், நாட்டை யாரும் பிரிக்கமுடியாதவாறு பிளவுபட முடியாதவாறு  பாதுகாத்துக் கொள்வதற்கும் அதேநேரம் மத்திய அரசின் தலையீடில்லாமல் மாகாண அரசுகள் சுயமாக தன்னாட்சி  நடத்துவதன் மூலம் நாட்டில் இனஒற்றுமையை ஏற்படுத்தவும் தேவையான புதிய நவீன அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதில் நாம் ஈடுபட்டிருக்கின்றோம் என்று மக்களை அதற்காகத் தயார்படுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் திடீரென இடைக்கால அறிக்கையை வெளியிட்டுவிட்டு உடனடியாக நாடுதழுவிய தேர்தல் ஒன்றை நடத்தியதன் மூலம்தான் இன்றய நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்களைக் கொடுப்பதற்காகவே புதிய அரசமைப்பைக் கொண்டு வருகின்றார்கள் என்றும் அது நாட்டைப் பிளவு படுத்தப் போவதாகவும் மகிந்த தரப்பினர் சொன்ன பொய்களை அதிகமான சிங்கள மக்கள் நம்பிவிடடார்கள். அதேபோல், இல்லாத ஒற்றையாட்சியை இருப்பதாகவும் இருக்கும் சமஷ்டிக் கட்டமைப்பை இல்லை என்றும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் எதிரணியினர் சொன்ன பொய்களை சில தமிழரும் நம்பிவிட்டார்கள். எனவே இந்த தேர்தல் முடிவுகள் நல்லாட்சி அரசின் கொள்கைகள் செயற்பாடுகளுக்கு எதிரானதாகவோ அன்றி தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினரின் கொள்கைகள் செயற்பாடுகளுக்கு எதிரானதாகவோ எடுக்கவே முடியாது. நாடு  பிளவுபடுவதைவிட  மகிந்த ஆட்சி பறுவாய்  இல்லை என்று நம்பிய சிங்கள மக்களும், மீண்டும் ஒற்றை ஆட்சியின்கீழ் தமிழர் ஏமாற்றப்படப் போகிறார்கள் என்று நம்பிய சில தமிழரும் எதிராக வாக்களித்துள்ளார்கள். 75 வீதமான தேர்தல் முடிவுகள் புதிய அரசமைப்பைப் பற்றிய தவறான பொய்யான எண்ணங்களால் பெறப்பட்ட முடிவுகளே தவிர உண்மையின் அடிப்படையில் கட்சிகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை  வெளிப்படுத்துபவை அல்ல. 25 வீதமானவை தீர்க்கப்படாத மக்களின் இன்னோரன்ன பிரச்சனைகள் காரணமாக பெறப்பட்டுள்ளன. அத்தோடு இது கிராம மடங்களிலான தேர்தல் என்பதால் கட்சிக்கப்பால் அந்தந்தக் கிராமத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்து புதிய விகிதாச்சார முறையில் சில ஆசனங்களைப் பெற்றுவிட்டார்கள்.  இந்த உண்மையை யதார்த்தநிலையை சரியாகப் புரிந்துகொண்டு அதன் அடிப்படையில்தான் அடுத்து என்ன செய்யலாம், செய்யவேண்டும் என்பதை ஆராய வேண்டும்.

அடுத்து என்ன?. 

சிங்களத் தரப்பில் :-

மகிந்தவின் ஆதிக்கத்தை தனித்து ரணிலோ அல்லது மைத்திரியோ சமன்செய்ய முடியாது என்பதை இப்போதாவது இரு பக்கத்தாரும் உணர வேண்டும். 2015ல் செய்ததை போல, இப்போது இருப்பதை போல இருதரப்பாரும் சேர்ந்துதான் செயற்பட வேண்டும். மகிந்த சார்பான மக்களை தம்மோடு சுதந்திரக்  கட்சியில்  சேர்த்து மகிந்தவை ஓரம்கட்டி தனது தலைமையில் ஆட்சி அமைக்கலாம் என்பது வெறும் பகற் கனவு என்பதை மைத்திரி உணர வேண்டும். அவர் மகிந்தவோடு மீண்டும் சேரவும் முடியாது. மகிந்த எக்காரணம் கொண்டும் யார் யாரை எல்லாம் தம்மோடு சேர்த்துக் கொண்டாலும் மைத்திரியை மட்டும் பழி வாங்காமல் விடவே மாட்டார்.  மைத்திரிக்கு வேறு புகலிடம் இல்லை. ஆகவே மைத்திரியும் அவரோடு இருக்கக்கூடிய சில மகிந்த எதிர்ப்பாளரும் சுதந்திரக் கட்சியை முடியுமானவரை தம்மோடு வைத்துக்கொண்டு ரணிலோடு சேர்ந்து ஒரு பொதுஅணியையோ, கூட்டமைப்பையோ உருவாக்கி பொதுச் சின்னத்திலோ அல்லது யானைச் சின்னத்திலோ போட்டியிடுவதன் மூலமே நாட் டை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும். சிங்கள தமிழ் மக்கள் அனைவரையும் சரியாகத் திட்டமிட்ட  முறையில் அரசியற்  தெளிவூட்டுவதோடு ஒருவருக்கொருவர் துவேஷமோ பயமோ இன்றி சமத்துவமாக வாழக்கூடிய  அரசமைப்பை கூடுமான அளவு நடைமுறைப்படுத்துவதன் மூலமே இலங்கையை இன்னொரு சிங்கப்பூராக மாற்ற முடியும். அரசியல் எனபது நல்லதைச் செய்வதை விட நல்லதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு தெளிவு படுத்துவதே முக்கியம் என்பதை சிரமேற் கொள்ள வேண்டும். அதற்காகவும் தமது வழங்களை நேரத்தை சக்தியை செலவிடாமல் விடாமுயற்சி செய்யாமல் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது. அண்மையில் வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலுக்குமுன் இந்த அடிப்படையில் வேகமாகத் தம்மைத் தயார்படுத்தி  விவேகமாகச் செயற்பட்டால் நிட்சயமாக வெற்றி அடையலாம். 

தமிழர் தரப்பில்:-

தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் எதிரணியினர் நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் கற்பனையான  குழப்பமான உணர்ச்சிவசமான பொய்யான கருத்துக்களை திரும்பத் திரும்பக் கூறி தாமும் குழம்பி மக்களையும் குழப்புகிறார்கள். நிதி நன்மைக்காக ஊடகங்களும் அவற்றை மட்டுமே பெரிதுபடுத்தி  விளம்பரப் படுத்துகின்றன.  அதனால் யாழ்ப்பாணத்தில் மக்கள் வாக்களிக்கும் வீதமும் மிகக் குறைந்துவிட்டது. ஒரு கட்சியின்  தலைமையைத் தீர்மானிப்பது அக்கட்சியின் உள்விவகாரம். தலைமையை மாற்று என்று கூறுவோர் தமது தலைமையை மாற்றத் தயாரா?. கூட்டமைப்பின் அணுகுமுறை தவறானால் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு இவர்கள் நடைமுறைச் சாத்தியமான வழிமுறை எதையாவது இதுவரை முன்வைத்தது  உண்டா?. போராட்டம் என்கிறார்களே அதன் வடிவம் தன்மைதான் என்ன?. ஜனநாயக உரிமை இருப்பதால் நமது வீதியில் நாம் கூடிநிற்பதால் மட்டும் இலங்கை அரசோ சர்வ தேசமோ ஓடிவந்து கேட்டதைத் தரப்போகின்றார்களா?. சர்வசன வாக்கெடுப்பு என்கிறார்கள். அதை செய்வது யார்?. எப்படி?. பூனைக்கு மணிகட்டுபவர் யார்?.  நாம் கேட்டபடி நினைத்தபடிதான் சிங்கள அரசும் உலகமும் செய்யவேண்டும் என்று நினைப்பதை விட முட்டாள்த்தனம் வேறு இருக்க முடியுமா?.  அரசியல் நுட்பங்கள் நடைமுறைகள் சாணக்கியங்கள் தெரியாத வெறும் உணர்ச்சிப் பேச்சுகளால் ஆவது என்ன?. உங்கள் திட்டம் எப்போது நிறைவேறும்? எப்போது நடைமுறைக்கு வரும்?. தமிழ் இளையோரில் 10 பேரைக் கேட்டால் 8 பேர் தாம் வெளிநாட்டிற்குப் போகவேண்டும் என்கிறார்கள். உடனடியாக சாத்தியமான எதையாவது செய்யாவிட்டால்  அங்கே தமிழினம் என்ற ஒன்று இருக்கப்போகிறதா?. நம்மை நாமே ஏமாற்றுவதுதான். மக்கள் நிட்சயம் சரியாகச் சிந்திப்பார்கள். செயற்படுவார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மை மறுசீரமைத்துக் கொள்ளவேண்டியது அத்தியாவசியம். ஒட்ட வேண்டியவர்களை ஒட்டியும் வெட்டவேண்டியவர்களை வெட்டியும் சீர்செய்ய வேண்டும்.  தலைமையின் சாதுரியத்தால் சாணக்கியத்தால் அவர்கள் மிகச் சரியான அரசியல் அணுகுமுறையைக் கையாள்வதால் தமிழ்மக்கள் அவர்கள் பக்கம்தான் நிற்பார்கள். ஆனால் அதுமட்டும் போதாது. தமது செயற்பாட்டின் உண்மைத்தன்மையை நீதி நியாயத் தன்மையை,அவை அறிவுபூர்வமான நடைமுறைச் சாத்தியமான தென்பதை, அவைதான் அதிசிறப்பான ஒரே தெரிவு, வேறு தெரிவு இல்லை என்பதை மக்களுக்கு விளக்கி தெளிவூட்ட  வேண்டும்.  அரசியலில் தாம் செய்வதைவிட அதை மக்களுக்கு விளக்குவதிற் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். மக்கள் எமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் தேர்தலின் போது மட்டும் மக்களிடம் செல்லாமல், மக்களின் முழுநேர பணிக்காகவே தமக்கு அதி உயர் ஊதியம் கிடைப்பதை மறக்காமல் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் இன்பதுன்பங்களில் பங்குகொண்டு ஓரளவாவது தம்மை மக்கள் சேவைக்காக அர்ப்பணித்து செயற்பட வேண்டும். கட்டாயமாக ஒவ்வொருவரும் கட்சிப் பணிமனைகளை நடத்த வேண்டும். அதற்கு அரசாங்கம் நிதியை வழங்குகின்றதுதானே. மந்தநிலையில் இராமல் வேகமான விறுவிறுப்பான செயற்பாடுகள் அவசியம். தமக்குக் கிடைக்கும் சலுகைகளில் ஒருபகுதியை கட்டாயம் கட்சியின் பரப்புரை நிதிக்கு கொடுக்க வேண்டும். கட்சிப் பத்திரிக்கை, இணையத் தளங்களை நடத்த வேண்டும். அண்மையில் ஏற்பட்ட தாக்கம் வெறும் மாயமான பொய்ப்பிரச்சாரத்தால் மக்களுக்கு ஏற்பட்ட  குழப்பத்தால் மக்களுக்கு உண்மையை புரியவைக்கத் தவறியதால் ஏற்பட்ட நிலைமையாகும். 

நாடு பிளவுபடாமல் பிரிக்கப்படாமல் இருப்பதை சிங்கள மக்களுக்கு  உறுதிப்படுத்தவே  ஏக்கிய ராஜ்ஜிய என்ற சொல்லை பயன்படுத்த வேண்டிவந்ததையும்  அது ஒற்றை ஆட்சியைக் குறிப்பதல்ல என்பதையும்; ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் பவுத்தத்திற்கான  முன்னுரிமை பறிக்கப்பட்டால் இன்றய நிலையில் சிங்களப் பவுத்த மக்களை, துறவிகளை சம்மதிக்க வைக்க முடியாது எனபதையும் தமிழ் மக்கள் சிலர் விளங்கிக் கொள்ள வில்லை. அப்படிக் கொடுத்தும் சிங்கள மக்கள் நாடு பிளவு பட்டிடக்கூடாது என்பதற்காக தாம் விரும்பாத மகிந்தவிற்கே அமோகமாக வாக்களித்துள்ளார்கள் என்றால், தவிர்க்க முடியாத நிலையில்தான் அவற்றை யாப்பில் சேர்க்கவேண்டி வந்தது என்பதை இப்போதாவது தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். அவற்றைக் கொடுத்தாலும் பறுவாய் இல்லை நமக்கு வேண்டிய கவுரவமான சுதந்திரமான சமஷ்டிக் கட்டமைப்பிலான சிங்களத் தமிழ் மக்கள் அனைவரும் சமத்துவமாக வாழக்கூடிய, வடக்கு கிழக்கை தமிழர் பிரதேசமாக ஏற்றுக்கொண்ட  புதிய அரசியல் அமைப்புக்கு  சிங்களத் தரப்பாரை, அரசை சம்மதிக்க வைத்தது கூட்டமைப்பின் சாதனை என்பதை மக்கள் உணரும் போது, பொய்களால் தம்மை ஏமாற்றியவர்களை மக்கள் அடுத்த தேர்தலில் மிகச் சரியாகக் கவனித்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு கூட்டமைப்பு கடினமாக உழைக்க வேண்டும். தத்தம் சொந்த நலன்களில்  மட்டும் குறியாய் இருந்தால் அனைவரும் தாழ்வர். அனைவரும் சேர்ந்து நலம்பெற விரும்பினால் அனைவரும் வெல்லலாம். மக்கள் பரப்புரையின் அவசியத்தை உணர்ந்து அதற்கான செயற்பாடுகளை உடனே முன்னெடுக்க வேண்டும். கிராமங்கள் தோறும் கூட்டங்களை நடத்த வேண்டும். மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்.    

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான புதிய அரசமைப்பை இலங்கை மக்கள் ஏதோ காரணங்களால் நிராகரித்திருப்பதால் உடனடியாக அதை மீண்டும் கொண்டுவருவது சாத்தியமில்லாமல் இருக்கலாம். அப்படியான நிலை வருமாயின் என்ன செய்யலாம்?. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டு வைபவ ரீதியான ஜனாதிபதி முறைமை வரும்போது அதே முறையில் இருக்கும் ஆளுநரும் வைபவ ரீதியானவராகவே இருப்பார். அப்படியான  ஆளுநர் இருக்கும்போது தற்போது இருக்கின்ற 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக, காணி, பொலிஷ் அதிகாரங்களோடு அமுல்படுத்தினால், அதுவே இன்றய நிலையில் சாத்தியமானதாகும். தற்போது நடைமுறைப் படுத்தாமல் இருந்தாலும் அது ஏற்கெனவே அரசியல் அமைப்பில் இருப்பதால் பெரிய எதிர்ப்பு ஏதும் இருக்காது. சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. மாகாணசபைத் தேர்தலுக்கு முன்போ பின்போ இவ்வருடமே அதைச் செய்திட வேண்டும். 2020ல் வரக்கூடிய புதிய அரசாங்கத்தோடு மேற்கொண்டு எதிர்காலத்தைத் தீர்மானிக்கலாம். இது சாத்தியமாகும். கூட்டமைப்புத் தலைமை இதில் பூரண கவனம் செலுத்த வேண்டுமென்பது எனது கருத்தாகும்.

V.வின். மகாலிங்கம்.