May 16

சிரியா ராணுவ சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் கொன்று எரிப்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு

சிரியா ராணுவ சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் கொன்று சிறை வளாகத்திலேயே எரிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் புறநகரில் சைத்னயா என்ற இடத்தில் ராணுவ சிறை உள்ளது. அங்கு அதிபர் ஆசாத் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்படுகின்றனர்.

அவர்களில் பெரும் பாலான கைதிகள் குற்றம் எதுவும் இழைக்காத அப்பாவி பொதுமக்கள் ஆவர். அவர்கள் மீது பொய் குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்படுகிறது என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல்கள் சிறை வளாகத்திலேயே எரிக்கப்படுகிறது. இதற்கான விசேஷ அறை ஒன்றையும் அதிபர் ஆசாத் நிறுவியுள்ளார்.

இதன்மூலம் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் போட்டோக்கள் மூலம் தெளிவாக தெரிகின்றன என்றும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.

இவை அனைத்தும் ரஷியா மற்றும் ஈரான் அரசுகளின் ஆதரவால் நடைபெறுகிறது என்றும், பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் ஸ்டூவர்ட் ஜான்ஸ் கூறும்போது, “அம்மென்ஸ்டி அறிக்கையின் அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சைதன்யா ராணுவ சிறையில் 5 ஆயிரம் முதல் 13 ஆயிரம் அப்பாவிகளுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.