Feb 14

பரிஸ் - பாடசாலைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான நபர் கைது!

நேற்று செவ்வாய்க்கிழமை, பாடசாலைக்கு அருகே சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள சில பாடசாலைகளுக்கு அருகில் மர்மமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆபத்தான சம்பவங்கள் ஏதுமின்றி குறித்த 19 வதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இறப்பர் குண்டு மற்றும் சில ஆபத்தான ஆயுதங்கள் கைகளில் வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை 16.00 மணிக்கு இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும் கிடைக்கப்பெற்ற தகவல்களில், கைகளில் ஆயுதம் வைத்திருந்த காரணத்தினால் குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. தவிர பாடசாலை வெளிப்புற மதில்கள் அனைத்தும் ஆராயப்பட்டு ஆபத்துக்கள் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாடசாலை அதிகாரிகள் தெரிவித்த தகவலின் பேரில் நேற்று காலை 8 மணியில் இருந்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். குறித்த நபரின் நடவடிக்கைகள் குறித்து தெளிவாக எதுவும் அறியமுடியவில்லை.