Feb 14

மஹிந்தவுடன் கூட்டு; மைத்திரிகே ஆதரவு;ஆறுமுகன் தொண்டமான்

நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றுவதற்கே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கைகோர்த்ததாகத் தெரிவித்த, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவுக்கே தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என்று தெரிவித்தார்.

“இந்தத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில், கடைசி நிமிடம் வரையிலும் பணம் விளையாண்டது. சிற்சில இடங்களில், ரைஸ் குக்கர்கள் வழங்கப்பட்டன. பணத்தை வைத்து சிலர் விளையாண்டனர். மூளையை வைத்து நான் விளையாடினேன். அவ்வளவு தான் வித்தியாசம்” என்றும் அவர் கூறினார். 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானில் நேற்று (13) இடம்பெற்ற ஊகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அதன் பின்னர், ஊடகவியலாளர்கள் கேட்டக் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,  

 கேள்வி: கடந்த தேர்தல்களின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு மலையக மக்கள் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அவருடன் கூட்டணி சேர்வது சரிதானா? 

பதில்: மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கவேண்டும். அதுதான் முக்கியம், அதற்காகவே இம்முடிவு ஏடுக்கப்பட்டது. இதை மக்களும் நிச்சயம் ஏற்பார்கள். 

கேள்வி: வாக்குப் பெட்டிகளைக் கூட, எடுத்துப் போவதற்கு, வீதிகள் ஒழுங்காக இல்லை, மலையக வீதிகளில் திருப்திகொள்ளமுடியாது. இந்நிலையில், மலையக அமைச்சரொருவர், வாக்களிப்பதற்கு ஹெலியில் சென்றிருந்தார். அது பற்றி நீங்கள், என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: கடந்த 3 வருடங்களாக இ.தொ.க ஆட்சியிலில்லை, இருந்தவர்களும் சரியில்லை. அவர்கள், சீர் செய்யாமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த 3 வருட இடைவெளி தான் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கேள்வி: மக்களுடைய எதிர்பார்ப்புகள், இனி வருங்காலங்களில் இ.தொ.கா மூலமாக நிறைவேற்றப்படுமா? 

பதில்: நிச்சயமாக 101 சதவீதம் நிறைவேற்றப்படும். அதற்காவேதான் மஹிந்தவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான முடிவை எடுத்தது. 

கேள்வி: கடந்த சுதந்திர தினத்தன்று, மலையக மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர். தமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர். மலையகத்தில் அமைச்சர்கள் பலர் இருந்தும் மக்கள் இன்னமும் இவ்வாறு கூறுவது பற்றி உங்களது கருத்து என்ன? 

பதில்: இப்பொழுது இருக்கும் அரச பொறிமுறையில் பாரிய வித்தியாசம் உண்டு. ஆனால், இனி அவ்வாறான நிலைமை இருக்காது, காரணம் தொகுதிகள் விஸ்தரிக்கப்பட்டுவிட்டன. இனிமேல், விமோசனமும் கிடைக்கும்.  

கேள்வி: ஹட்டன் - டிக்கோயா நகர சபையை, இ.தொ.கா கைப்பற்ற முடியாமல் போயுள்ளது. இதில், பின்னடைவு இருப்பதாக அவதானிக்கிறீர்களா? 

பதில்: கடைசி நிமிடம் வரையிலும் பணம் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. சில இடங்களில் ரைஸ் குக்கர்கள் என்பன வழங்கப்பட்டன. சிலர் பணத்தை வைத்து விளையாடினர். மூளையை வைத்து நான் விளையாடினேன். அவ்வளவு தான் வித்தியாசம். 

கேள்வி: இத்தேர்தல் முறை சரிதானா? 

பதில்: இது தோற்றவர்களைத் தூக்கிக் கொடுத்தது. இம்முறை பிழையென்று கூற முடியாது. 

கேள்வி: முன்னாள் ஜனாதிபதியின் மீளெழுச்சி காரணமாக, நல்லாட்சி அரசாங்கம் ஒரு தளம்பல் நிலையில் உள்ளது. இவ்வாறிருக்கையில் நாடாளுமன்றில் இ.தொ.காவின் நிலை என்ன? 

பதில்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவின் பிரகாரம் அனைத்தும் நடக்கும். 

கேள்வி: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து, இ.தொ.காவை வெளி​யேற்றப் போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கூறியிருந்தார், அவர் அவ்வாறு வெளியேறினால், நீங்கள் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பீர்கள். 

பதில், நாங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில்தான் இருப்போம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ன முடிவு எடுக்கின்றா​ரோ, அதன்படி இ.தொ.கா நடக்கும். 

கேள்வி: மஹிந்தவுடன் கைக்கோர்ப்பது தொடர்பில், மக்கள் அதிருப்தியை வெளிகாட்டினால்? 

பதில்: மஹிந்தவுடன் ஏன் கைக்கோர்க்கின்றேன் என்பது தொடர்பில், மக்களுக்குத் தெளிவுப்படுத்துவதை நான் பார்த்துக்கொள்கின்றேன். மக்களுக்கு சரியான விடயங்கள் நடைபெற்றால் யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள். உள்ளூராட்சி மன்றங்களுக்குள் நடக்கும் விடயங்களுக்காகவே, இக்கூட்டணியை அமைத்துள்ளோம். 

கேள்வி: பிரதமர் பதவி விலகினால் அது உங்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துமா? 

பதில்: அவர் விலகினால் என்ன? விலகாவிட்டால் என்ன?, அது என்னுடைய பிரச்சினை இல்லை. நாங்கள், 11 சபைகளை உருவாக்க இருக்கின்றோம். அது தொடர்பிலான பிரச்சினைகளையே நான் பார்க்க வேண்டும்.