Feb 14

தனியாக ஆட்சியமைத்து பயணிக்க இணங்கினோம்; மயந்த திஸாநாயக்க,

கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தனி அரசாங்கத்தை அமைத்து நாட்டில் முன்னோக்கி பயணிக்க தாம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் இரண்டரை வருடங்களுக்கு தனித்து ஆட்சியமைத்து நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை நிரூபிக்க காத்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

ஐக்கியக் தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (13) அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்தினர். சுமார் 4 மணி நேர கலந்தரையாடலின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய ​தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினரான மயந்த திஸாநாயக்க, 

“ஐக்கிய தேசியக் கட்சி தனித்து அரசாங்கத்தை அமைக்கத் தயாராகவுள்ளது. இதற்குப் பின்வரிசை உறுப்பினர்கள் யாவரும் இணங்கியுள்ளனர். மக்கள் கன்னத்தில் அறைந்தாற்போல், இந்தத் தேர்தலின் ஊடாக எமக்கு தகவல் ஒன்றை வழங்கியுள்ளனர்.  

“இதனையடுத்து எமது தரப்பினரிடம் கலந்துரையாடலை நடத்தினோம். பெரும்பாலானோர் தனித்து ஆட்சி அமைப்பதற்கே விருப்பம் தெரிவித்தனர். எவருடைய ஆலாசனைகளையும் புறந்தள்ளவில்லை. அனைவரினதும் ஆலாசனைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. 

“விரைவில் கட்சியில் மாற்றம் ஒன்று ஏற்படப் போகிறது. குறித்த மாற்றத்தின் ஊடாக நாட்டில் தனியான பலத்தை ஐ.தே.க நிரூபிக்கும். கட்சிக்குள் மாற்றங்கள் நிகழுமே தவிர கட்சி தலைமைத்துவத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 

“இவ்வாறு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்க்கமான முடிவை எடுக்கத் தீர்மானித்துள்ளோம். இதற்காகவே ஐ.தே.கட்சி எம்.பிக்கள் தனித்தனி குழுக்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.  

“தனித்து ஆட்சி அமைக்காதிருந்தமையின் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சிக்காக செயலாற்ற முடியாமல் இருந்தது” என்றார். 

இதனையடுத்து நளின் பண்டார, துஷார இந்துனநெல் ஆகியோர் ஒருமித்து பின்வருமாறு கருத்துத் தெரிவித்தனர். 

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த வெற்றி. இப்போதே சரியான வெற்றி எமக்குக் கிடைத்துள்ளது. மக்கள் தெளிவாக ஒரு விடயத்தை இதன் ஊடாகப் புலப்படுத்தியுள்ளனர்.  

“தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் ஒருமித்து தனித்து ஆட்சி அமைக்க கோரிக்கை முன்வைத்துள்ளோம். இதற்கமைய விரைவில் ஐ.தே கட்சியின் ஆட்சி இடம்பெறும். 

“ஐக்கிய தேசியக் கட்சியுடன் பலர் இணையத் தயாராக உள்ளனர். எக்கட்சியினரையும் எம்முடன் இணைத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். 

“தற்போது இந்த அரசாங்கத்தை ​பொறுப்பேற்க தயாரில்லை என மஹிந்த ராஜபக்ஷ கூறுகிறார். எனவே ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம் அரசாங்கத்தைப் பொறுப்பேற்று நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளோம். 

“தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமையே நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல முடியாமைக்கான காரணம். எனவே, இதன் பின்னர் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. 

“கட்சி ஆதரவாளர்களை வலுப்படுத்த முடியாமல் போனதால் இம்முறை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர். ஆதரவாளர்களே இவ்வாறு வாக்களித்துள்ளனர். அவ்வாறல்லாமல் மஹிந்த ராஜபக்ஷ மீது விருப்பம் கொண்டு வாக்களிக்கவில்லை. இந்த சூழ்நிலையினை மாற்றவேண்டியுள்ளது. இதற்கு தேசிய அரசாங்கத்தில் இருந்தால் கட்சி ஆதரவாளர்களை இழக்க நேரிடும். 

“எதிர்வரும் காலங்களில் கட்சி ஆதரவாளர்களை வலுவூட்டி அவர்களின் ஒத்துழைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சியை நிலைப்பாட்டை மேலும் வலவூட்ட தீர்மானித்துள்ளோம்” என்றனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி முடிவொன்றை வழங்குவார் எனவும் குறிப்பிட்டனர்.  

இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரி​சை நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக்க, நளின் பண்டார, காவிந்த ஜயவர்தன, ஹெக்கடர் அப்புஹாமி, விஜேபால ஹெட்டிராயாராச்சி, நாலக்க கொலன்னே,​ஜே.சி அலவத்துகொட உள்ளிட்ட 16 பேர் கலந்துகொண்டிருந்தனர்.