Feb 14

"சசிகலா எனும் நான்".... கனவு சுக்குநூறாக போன நாள் இன்று...

சசிகலா முதல்வராக ஆசை ஆசையாய் இருந்த நேரத்தில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 குற்றவாளி என்று குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்த நாள் இன்று.

இதனால் சசியின் முதல்வர் கனவு சுக்குநூறாக போனது. ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் அதே ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து கட்சியையும் ஆட்சியையும் தன் வசமாக்கிக் கொள்ள சசிகலா கபட நாடகமாடினார்.

ஜெயலலிதாவை நினைத்து உருகுவதை போல் நடித்தே அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி கைப்பற்றினார். ஆட்சியும் கட்சியும் ஒருவர் கையில்தான் என்று தனது ஆதரவாளர்களை கலக குரல் கொடுக்க வைத்தார்.

முதல்வராக ஆசைப்பட்டு சட்டசபை குழுத் தலைவராகவும் சசிகலா நியமிக்கப்பட்ட அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் அமர்ந்து தியானம் செய்து எரிமலையாக வெடித்தார். விளைவு தனித்து செயல்படத் தொடங்கினார். சசிகலா அணியில் இருந்து கவுண்டம்பாளையம் எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஓபிஎஸ் அணிக்கு தாவினார்.

பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து எப்போது வருவார்? ஆட்சி அமைக்க எப்போது உரிமை கோருவது என்று காத்து கொண்டிருந்தார்.

ஆளுநரும் சென்னைக்கு வராமல் இருந்ததால் தன் பக்கம் உள்ள எம்எல்ஏக்கள் விலை போய் விடுவர் என்ற அச்சத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் 122 எம்எல்ஏக்களை தங்க வைத்தார்.

அங்கு அவர்களுக்கு "சகல" வசதிகளும், தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. வெளியுலக தொடர்பே இல்லாமல் அங்கேயே எம்எல்ஏ ஜாலியாக பொழுதை கழித்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி கூவத்தூருக்கு சென்ற சசிகலா அங்குள்ள மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டினார். அன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் சென்னைக்கு வராததை மிரட்டும் தொனியில் ஓரளவுதான் பொறுமை காப்போம் என்று ஒரு பகீர் பேட்டியை அளித்தார்.

முதல்வராக உள்ள சந்தோஷத்தில் தலை, கால் புரியாத சசிகலா கூவத்தூர் ரிசார்ட்டிலேயே தங்கினார். மறுநாள் பிப்ரவரி 14-ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருந்ததை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் நிரபராதிகள் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியை போல் தீர்ப்பளித்தால் இந்த தமிழகத்தை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று மக்கள் வேதனையில் இருந்தனர்.

கடந்த 1991-1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன் கொள்ளை அடிப்பதற்காகவே சசிகலா, போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்ததாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சசிகலா உள்ளிட்டோர் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தீர்ப்பு வழங்கியது. முதல்வர் கனவில் கூவத்தூரில் எம்எல்ஏக்கள் "சிறைப்பிடிக்கப்பட்டது" வீணாகி போனது. தமிழகம் தப்பியதாக பொதுமக்களும் ஓபிஎஸ் தரப்பினரும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

இதையடுத்து சசிகலா உள்ளிட்ட 3 பேரும் கடந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளிடம் சரண் அடைந்தனர்.

ஆனால் போவதற்கு முன்னர் சசிகலா, தினகரனுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி கொடுத்ததுடன் அதிமுக எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக எடப்பாடியை நியமனம் செய்துவிட்டு சென்றார். இந்த தீர்ப்பால் சசிகலாவின் கனவை சுக்குநூறாக ஆக்கிய நாள் இன்றுதான் இன்றுடன் ஓராண்டு ஆகிறது.