Feb 14

நீதிமன்றம் குற்றவாளி என்று அறிவித்த பின்பும் ஜெ., இறுதிச்சடங்கில் ராகுல்காந்தி மட்டும் பங்கேற்கலாமா?

குற்றவாளி என்றால் ஜெயலலிதா இறுதி சடங்கில் மட்டும் ஏன் பங்கேற்றீர்கள் என்று ராகுல் காந்தியை, விஜயதரணி எம்எல்ஏ கேள்வி கேட்டுள்ளது தமிழக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரது படத்திறப்பு விழாவை அனைத்து எதிர்கட்சிகளும் புறக்கணித்தன. 

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி மட்டும் படத்திறப்புக்கு ஆதரவு தெரிவித்தது தமிழக காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட விஜயதரணி, இந்த விவகாரத்தில் ராகுல்காந்திக்கு சவால் விடும் வகையில் பேசியிருப்பது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவாதத்தில் விஜயதரணி பேசியிருப்பதாவது:

 ஒரு பெண் என்ற முறையில் நான் படத்திறப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். பேரவையில் 10 தலைவர்கள் படம் உள்ளது. அதில் ஆண்கள்தான் உள்ளனர். ஒரு பெண் தலைவருக்கு இடமில்லையா?.

இந்தியாவில் அரசியல் தளத்துக்கு பெண்கள் வரக்கூடாதா?. கட்சி முடிவின்படி நான் விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால், எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. குற்றவாளி என்று அறிவித்த பின்புதான் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எங்களது அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும், திருநாவுக்கரசரும் எல்லோரும் போய் பார்த்தனர்.

அடுத்தபடியாக மரணித்த பின்பு கடைசி சடங்கு முடியும் வரை ராகுல்காந்தி இருந்தார். அன்றெல்லாம் இவர் குற்றவாளி என்று இவர்களுக்கு தெரியவில்லையா?. இவர்கள் எல்லாரும் அன்று புறக்கணித்திருக்க வேண்டியதுதானே? மரணத்துக்கு ஏது மரபு. இந்த விவகாரம் தொடர்பாக என் மீது கட்சி நடவடிக்கை எடுத்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்.

என் மீது தமிழக காங்கிரஸ் தலைமை புகார் அனுப்பட்டும். ராகுல்காந்தியை நான் கேட்கிறேன். உங்களுக்கு கடைசி சடங்கு வரை கலந்துகொள்ள மனம் இருந்தது. அன்று குற்றவாளி என்று தெரியவில்லையா?. 

தனிப்பட்ட முறையில் எனது உரிமையை பறிக்க யாராலும் முடியாது. அது ராகுல்காந்தியாக இருந்தாலும் சரி. திருநாவுக்கரசராக இருந்தாலும் சரி. அது எனது தனிப்பட்ட உரிமை. கட்சி முடிவுபடி பங்கேற்க கூடாது என்றார்கள். நான் அதில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.