Feb 13

மூன்று நாடுகள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்

பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நேற்று மாலை இந்தியா திரும்பினார்.

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் ஜோர்டான் சென்ற அவர், தலைநகர் அம்மானில் அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவை அரண்மணையில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

அங்கிருந்து கிளம்பி பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு சென்ற மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாசர் அராபத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி, அந்நாட்டு அதிபர் முகமது அப்பாசை சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்தீனத்தின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

அதையடுத்து, தனது பயணத்தின் நிறைவாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றார். அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் ஜாயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அபுதாபியில் அமையவுள்ள முதல் இந்துக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய மோடி, துபாயில் 6-வது உலக அரசாங்க மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை இந்தியா திரும்பினார்.

டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.