May 16

போக்குவரத்துத் தொழிலாளரை வேலைநிறுத்தத்திற்குத் தள்ளி பொதுமக்களையும் அல்லாடவிட்டிருக்கும் அரசு! மீண்டும் பேச்சு நடத்தி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

பலகட்ட பேச்சு நடத்தியும் பலனளிக்காமல் மே 15ந் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கிவிட்டனர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

இதில் பணி ஓய்வு பெற்ற 60 ஆயிரம் பேருக்கு சேர வேண்டிய பணிக்கொடை மட்டுமே ரூ.1652 கோடி. இது தவிர மாதா மாதம் அவர்களுக்கு வர வேண்டிய பென்ஷன் தொகை தனி. அதுவும் வரவில்லை.

பணியில் உள்ள 1 லட்சத்து 43 ஆயிரம் தொழிலாளர்களுக்கு விடுப்பு சரண்டர், எல்ஐசி பிடித்தம், கோ-ஆபரேட்டிவ் சொசைட்டிக்கான பிடித்தம் என வர வேண்டிய தொகை ரூ.2,500 கோடி. தவிர இன்னும் பல்வேறு இனங்களிலும் வரவேண்டிய பாக்கித் தொகையையும் உள்ளடக்கியதே இந்த நிலுவைத் தொகை.

கடைசி கட்ட பேச்சின்போது 1250 கோடி தருவோம் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அதில் 500 கோடியை இரண்டு, மூன்று நாட்களுக்குள்ளும் மீதி 750 கோடியை செப்டம்பர் மாதத்திலும் தருவோம் என்றார்.

இதை ஏற்கிறோம், அரசின் ஆணையாக அறிவியுங்கள் அல்லது இன்ன இன்ன தேதிகளில் தருவோம் என எழுதித் தாருங்கள் என்று கேட்டனர் தொழிற்சங்க பிரதிநிதிகள். ஆனால் அமைச்சர் இதற்கு மறுப்புத் தெரிவித்துப் பின்வாங்கியதால், ஏற்கனவே அறிவித்தபடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர்.

14ந் தேதி மாலை பேச்சு முறிந்ததும் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார். இந்த வேலைநிறுத்தம் முறியடிக்கப்படும். அதற்குத் தயாராக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். ஓய்வு பெற்ற ஓட்டுநர்கள், பயிற்சி ஓட்டுநர்கள், தனியார் பஸ் ஓட்டுநர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஓட்டுநர்கள் ஆகியோரை வைத்து 100 விழுக்காடு பேருந்துகளை ஓட்டிக் காட்டுவோம் என்று சவால் விடாத குறையாகப் பேசினார்.

அதோடு தமிழகத்தின் பல ஊர்களுக்கும் செல்ல சிறப்பு ரயில்கள் விடவும் ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார்.

அதோடு, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட 47 தொழிற்சங்கங்களில் 37 சங்கங்கள் அரசுக்கே ஆதரவாக உள்ளன. வெறும் 10 சங்கங்களே வேலைநிறுத்தம் செய்கின்றன. ஒரு 10 விழுக்காடு பேருந்துகளை வேண்டுமானால் ஓடாமல் இவர்கள் தவிர்க்க முடியும் என்றும் சொன்னார் அமைச்சர்.

இவ்வாறு அவர் அறிவித்ததற்கு முன்பாகவே தமிழகம் முழுக்க எல்லா பேருந்துப் பணிமனைகளிலும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். மாலையில் டூட்டி முடிந்து பணிமனைகளில் பேருந்தை விடச் சென்ற தொழிலாளர்கள், நாளை முதல் மூன்று நாட்களுக்கு கண்டிப்பாக டூட்டிக்கு வருவேன் என்று இப்போதே கையெழுத்துப் போடச் சொல்லி மிரட்டப்பட்டார்கள். பணிநீக்கம், இடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்தப்பட்டார்கள். ஈரோடு, ராமநாதபுரம், சேலம் போன்ற இடங்களில் தொழிலாளர்களை காவலர்கள் கைது செய்தார்கள்.

இந்தச் செய்தி பரவியதன் எதிரொலியாக, 15ந் தேதி அறிவித்திருந்த வேலைநிறுத்தம், பல இடங்களில் 14ந் தேதி மாலையே தொடங்கிவிட்டது.

15ந் தேதியன்று முழு அளவில் வேலைநிறுத்தம் தொடங்கியது. ஒவ்வொரு பணிமனையிலிருந்தும் ஒன்றிரண்டு பஸ்கள்கூட அரிதாகத்தான் ஓடின. மாவட்ட ஆட்சியர்கள் முதற்கொண்டு பணிமனைகளில் வந்து அமர்ந்து ஏற்பாடுகளைக் கவனித்தும் பேருந்துகளை இயக்க முடியவில்லை.

ஆனால் வேலைநிறுத்தம் தோல்வி, 75 விழுக்காடு பேருந்துகள் ஓடுகின்றன என்று உண்மைக்குப் புறம்பான தகவலை சொன்னார் போக்குவரத்துத் துறை அமைச்சர்.

அப்படிச் சொல்லிக் தொண்டே, வெளிமாவட்டங்களிலிருந்து 2000 தனியார் பேருந்துகள் வரவழைக்கப்படும். ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்திருப்பவர்கள் நேரில் வரலாம், நாட்கூலி அடிப்படையில் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் அறிவித்தார் அமைச்சர்.

அரசுத் தரப்பிலிருந்தே இப்படிப்பட்ட பேச்சுக்கள் வருவது ஏற்புடையதல்ல. அவை பொறுப்பானவையுமல்ல. தொழிலாளர்கள் விடயத்தில் இத்தகைய அணுகுமுறை சட்டப்படியானதுமல்ல என்கிறார்கள் சட்டம் தெரிந்தவர்கள்.

இந்த வேலைநிறுத்தத்திற்கு அடிப்படை காரணமே ஓய்வு பெற்ற தொழிலாளர்களை வஞ்சித்திருப்பதுதான். அவர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பணத்தை இதுவரை கொடுக்காமல் கடைசி காலத்தில் அவர்கள் உயிர் வாழ முடியாத சூழலையே ஏற்படுத்தியிருக்கிறது அரசு.

பணியிலிருக்கும் தொழிலாளர்களுக்குத் தர வேண்டிய நிலுவைத் தொகை, ஓன்றரை ஆண்டுக்கு மேல் கடந்தும் போடப்படாத ஊதிய ஓப்பந்தம் போன்றவற்றைக்கூட பிரதான காரணமாக தொழிலாளர்கள் வலியுறுத்தவில்லை.

இந்த நிலையில் வேலைநிறுத்தம் ஏற்பட்ட பின் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சரிடமிருந்து செய்தி வருகிறது. அப்படியென்றால் இது தொழிலாளருக்குச் சேர வேண்டிய பணத்தைத் தர முடியாது என்று சொல்வதாகாதா? மேலும் அது மோசடி என்று சொல்வதற்கு இடம் தராதா?

தொழிலாளரிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி பணத்தை உரிய இடத்தில் செலுத்தாதது சட்டப்படி குற்றம் என்றும் சொல்லப்படுகிறது. அப்படியொரு பேச்சுக்கு அரசு இடம் தரலாமா?

எனவே அரசு தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தி இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

இதனை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!