May 16

தஞ்சக்கோரிக்கைகள் கையாளப்படும் முறைமையை மாற்றியமைப்பதைப் பிற்போடும் லிபரல் அரசு

கனடாவில் தஞ்சக்கோரிக்கைகள் கையாளப்படும்  முறையை மாற்றியமைப்பதாகத் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் வாக்குறுதி அளித்த லிபரல் அரசு, தற்போது அவ்வாறு செய்வதைப் பிற்போடுவதாக அறியவந்துள்ளது. தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்லும் இக்காலப்பகுதியில் இத்தகைய ஒரு செயற்பாடு காரணமாக, தஞ்சக் கோரிக்கை முறை ஆபத்தை எதிர்நோக்குவதாக அண்மைய செய்திகள் தெரிவிக்கின்றன. 

குடிவரவு மற்றும்அகதிகள் சபையை மீள ஒழுங்கமைப்பதும், தற்போது குடிவரவு மற்றும் அகதிகள் சபையிடம் உள்ள சில அதிகாரங்களை குடிவரவுத்திணைக்களத்திடம் ஒப்புவிப்பதும் தற்போது நிகழ்ச்சி நிரலில் உள்ள சில திட்டங்களாகும்.

நீண்டகாலமாகத் தேங்கிக் கிடக்கும் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் காரணமாக,  இவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முறையின் நம்பகத்தன்மை ஆபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், தஞ்சக் கோரிக்கை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்காக அரசு மேலதிக நிதியையோ அல்லது அரசியல் ரீதியான முதலீடுகளையோ மேற்கொள்ளத் தயாராக இல்லை எனவும் தஞ்சக் கோரிக்கை தொடர்பான செய்ற்பாட்டாளார்கள்  தெரிவிக்கின்றனர்