Mar 09

பிரெக்ஸிட் சட்டத் திருத்தம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் 3 நாள் விவாதம்

ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேற வகை செய்யும் பிரெக்ஸிட் மசோதாவில் திருத்தம் தேவை என்பது தொடர்பான மேலவைத் தீர்மானத்தின் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையில் 3 நாள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரெக்ஸிட் மசோதாவுக்கு நாடாளுமன்ற கீழை ஒப்புதல் வழங்கியது. மேலவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படுவது வெறும் சடங்காக கருதப்பட்டது. இந்த நிலையில், மசோதா குறித்து மேலவையில் கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ஐரோப்பியர் குடியேற்றம் தொடர்பாக மசோதாவில் முக்கியத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறினாலும், பிரிட்டனில் வசித்து வரும் பிற 27 ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.

மேலவை கேட்ட திருத்தத்தைச் செய்ய வேண்டாம் என்று கீழவை தீர்மானித்தால் அதுவே இறுதியானதாக இருக்கும். எனினும், மேலவை முடிவின்படி, அந்த திருத்தங்களை மீண்டும் கீழவை விவாதிக்க முடிவாகியுள்ளது. அதன் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.